Ad

வியாழன், 1 ஏப்ரல், 2021

தேர்தல் நேரத்தில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதும்... சுற்றும் அரசியல் சர்ச்சைகளும்!

நடிகர் ரஜினிகாந்த் 'தாதா சாகேப் பால்கே' விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, 'இது அரசியல் ரீதியான அறிவிப்பு' என்பதுபோன்ற சர்ச்சைகளும் சலங்கை கட்ட ஆரம்பித்துவிட்டன.

இதற்கிடையே, ரஜினிகாந்த் விருது பெறுவதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி வாழ்த்து ட்வீட்

இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதினை தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், `பா.ஜ.க ஆதரவாளராக அறியப்பட்டிருந்த ரஜினிகாந்த்துக்கு தற்போதைய சூழலில், தாதா சாகேப் பால்கே விருது வழங்குவது அரசியல் உள்நோக்கம் கொண்டது' என்று தமிழக எதிரக்கட்சிகள் கடுகடுக்கின்றனர்.

காரணம், மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த `பண மதிப்பிழப்பு நடவடிக்கை', `காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் தமிழ்நாட்டில் எதிர்ப்பு நிலவிவந்த சூழலிலும், மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களை வரவேற்றுப் பேசிவந்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆளுங்கட்சிகளான மத்திய பா.ஜ.க மற்றும் மாநில அ.தி.மு.க அரசுகளின் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்திவந்தபோது, 'போராட்டங்கள் நாட்டை சுடுகாடாக மாற்றிவிடும்' என்று எச்சரித்தவர் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

மேலும், நாடு முழுக்க சாதி, மத வெறியூட்டும் அரசியல் மேலோங்கிவரும் இந்த காலகட்டத்திலும், சமூக நீதி உள்ளிட்ட முற்போக்குச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்நாட்டு அரசியலுக்கு மாற்றாக, `ஆன்மிக அரசியல்' செய்யப்போவதாக அறிவித்து 'புதிய அரசியல் கட்சி' ஆரம்பிக்கப்போவதாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் ரஜினிகாந்த். இந்த நிலையில், 'திராவிடக் கட்சிகள் கோலோச்சிவரும் தமிழ்நாட்டு அரசியலை, மத ரீதியிலான அரசியலாக மடைமாற்றிவிடும் நோக்கில், ரஜினிகாந்த்தை களத்தில் இறக்கி அரசியல் செய்கிறது மத்திய பா.ஜ.க!' என்றொரு குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துவந்த ரஜினிகாந்த், சில மாதங்களுக்கு முன்பு திடீரென கொரோனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி தனது அரசியல் பிரவேச முடிவை வாபஸ் வாங்கிக்கொண்டார். ரஜினிகாந்த்தின் இந்த திடீர் அறிவிப்பு, அவரை ஆதரித்துவந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'ரஜினிகாந்த்தின் அரசியல் விலகல் அறிவிப்பு, நிரந்தரமானது அல்ல', 'தேர்தலுக்கு முன்பாக ஆதரவுக் கட்சிகளுக்காக வாய்ஸ் கொடுப்பார்' என்றெல்லாம் ரஜினிகாந்த் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து தங்களைத்தாங்களே சமாதானப்படுத்தி வந்தனர். ஆனாலும் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இதுவரையிலும் எந்தவித பதிலும் வெளிவரவில்லை! அவரது ட்விட்டர் கணக்கில், கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்ட வாழ்த்து அறிவிப்புக்குப் பிறகு எந்தவித அறிவிப்பும் பதிவேற்றப்படாமலே இருந்துவந்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து இன்று ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கம்

இந்த நிலையில்தான், தற்போது மறுபடியும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறார் ரஜினிகாந்த்! 2021 சட்டமன்றத் தேர்தல், வாக்குப் பதிவு வருகிற 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 'ரஜினிகாந்த்துக்கு விருது கொடுத்து அவரது ரசிகர்களது வாக்குகளை பா.ஜ.க பக்கம் திருப்புவதற்கான வேலைகளை மத்திய அரசு செய்துவருகிறது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எதிர்க்கட்சியினரும் 'வாக்குப் பதிவுக்கு முந்தைய சில தினங்களில், பா.ஜ.க இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தை ட்வீட் பதிவிடச் செய்து, வாக்கு திரட்டுகிற முயற்சியில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர்' என்று புகார் வாசிக்கின்றனர்.

யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் இந்த சந்தேகங்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான கணபதியைத் தொடர்புகொண்டு பேசினோம்...``ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது கொடுக்கப்படுகிறது என்பது பாராட்டப்பட வேண்டிய, வாழ்த்து சொல்லவேண்டிய விஷயம்தான். ஏனெனில், இந்தியா முழுக்க அறியப்பட்டவர், இத்தனை ஆண்டுகாலம் திரையுலகின் முன்னணி நடிகர்,

அவர் சொல்கிற கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றளவுக்கு மக்கள் செல்வாக்கு கொண்டவர் என்பதுபோன்ற பல்வேறு சிறப்புகள் ரஜினிகாந்துக்கு உண்டு. தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுவதற்கு முழுமையான தகுதி படைத்தவர்தான் ரஜினிகாந்த். அதனால்தான் விருது தேர்வுக்குழுவும் ரஜினிகாந்தைத் தேர்வு செய்திருக்கிறது.

கணபதி

ஆனால், விருதை இந்த சமயத்தில் அவருக்கு அளித்திருப்பதுதான் அவர் மீது களங்கம் சுமத்தப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இப்படி தேர்தல் நெருக்கத்தில் இல்லாமல், சாதாரண நாட்களில் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அவரது திறமையை எல்லோரும் பாராட்டியிருப்பார்கள்; அவருக்கும் இது பெருமையான தருணமாக அமைந்திருக்கும்.

ஆனால், தேர்தல் நேரத்தில் இப்படியொரு விருதை அறிவித்து, 'ரஜினி ரசிகர்களது வாக்குகளைக் கவர நினைக்கிறார்கள் அல்லது அவரிடமிருந்து அறிக்கையோ, வாய்ஸோ எதிர்பார்க்கிறார்கள்' என்றொரு பேச்சு எழுந்துவிட்ட சூழ்நிலையில், 'இது ரஜினிகாந்தின் திறமைக்குக் கிடைத்த விருதல்ல, சிபாரிசின் காரணமாக கிடைத்த விருது' என்பதாகிவிட்டது. இது ரஜினிகாந்தின் பெருமையை, திரையுலக உழைப்பை சிறுமைப்படுத்திவிடுகிறது. இது ரஜினிகாந்துக்கே மிகப்பெரிய தர்மசங்கடம்தான். ஆனாலும் இந்த சங்கடத்தை அவரால் வெளியேகூட சொல்லமுடியாது என்பதுதான் உண்மை.

Also Read: வாரணாசியில் காமராஜருக்கு சிலை - உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் காயத்ரி ரகுராம் கோரிக்கை

இதே விருதை, இன்னும் சில தினங்களில் தேர்தல் முடிந்தபிறகு அதாவது ஏப்ரல் 7-ம் தேதிகூட அறிவித்திருக்கலாம். யாருமே கேள்வி கேட்டிருக்கமாட்டார்களே!'' என்கிறார் அழுத்தமாக.

`விருது அறிவிப்பின் பின்னணியில் பா.ஜ.க-வில் அரசியல் வியூகம் உள்ளதா?' என்ற கேள்விக்கு விடை கேட்டு, மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசியபோது, ``அரசியலைவிட்டு விலகிவிட்டேன் என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்ட பிறகும்கூட அவர் மீது இங்குள்ள அரசியல் கட்சியினருக்கு உள்ள பயம் இன்னும் போகவில்லை என்றே தெரிகிறது. அதனால்தான் தி.மு.க-வுக்குத் துணைபோகிறவர்கள் எல்லாம் இன்றைக்கு இதையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கரு.நாகராஜன்

ரஜினிகாந்த், திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அவரது பணியைப் பாராட்டி, உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாகத்தான் தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்படுகிறது. இது இயல்பான ஒன்றுதான். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட, ரஜினிகாந்தின் மருமகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இதையும்கூட அரசியலோடு இணைத்து முடிச்சுப் போடுவார்களா?

Also Read: கோவை: பாஜக-வினர் கல்வீச்சு நடத்திய கடையில் செருப்பு வாங்கி ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்!

இன்றைக்கு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது, அதேபோல் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதத்திலிருந்து 3.5 ஆக குறைக்கப்பட்டு, மறுபடியும் 4 சதவிகிதமாகவே தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். தேர்தல் நேரமாக இருந்தாலும்கூட நடைமுறையில் உள்ள இதுபோன்ற விஷயங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ரஜினிகாந்த்

பா.ஜ.க அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கிற இதுபோன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் மக்களிடையே எடுத்துச்சொல்லாமல், `எங்கே ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்துவிடுவார்களோ' என்ற பயத்தில், ரஜினிகாந்தின் சேவைக்கு கிடைத்த மரியாதையைக்கூட அரசியலாக்க நினைக்கின்றன இங்குள்ள எதிர்க்கட்சிகள். ஆக, ரஜினிகாந்த் தூங்கிக்கொண்டிருந்தால்கூட, `அவர் ஏ.கே 47 வைத்திருக்கிறாரோ' என்று பயந்துகொண்டிருப்பவர்களின் புலம்பல்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது'' என்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/rajinikanth-dada-saheb-phalke-award-is-for-election-reason-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக