சில தினங்களுக்கு முன்னால் சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கல்லூரி மாணவர், திருவண்ணாமலையிலிருக்கிற பர்வத மலை மேல் நண்பர்களுடன் ஏறியவர் இறங்கும்போது மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்திருக்கிறார். இவரைப்போலவே சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் ஆலய தரிசனத்துக்காக மலையேறும் முயற்சியின்போது இறந்திருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களுமே நமக்குச் சொல்வது, ஆன்மிக பயணமாக மலையேறினாலும் சரி, ஹாபியாக டிரெக்கிங் சென்றாலும் சரி, நம் உடல்நிலை அதற்கு ஏற்றபடி ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதைத்தான். மலையேறுவதற்கு முன்னால் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் பொதுநல மருத்துவர் ராஜேஷ்.
உங்களைத் தயாராக்குங்கள்!
டிரெக்கிங் போக முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால், கிளம்புவதற்கு 10 அல்லது 15 நாள்களுக்கு முன்னதாகத் தினமும் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள். இது, நீங்கள் டிரெக்கிங் போகும்போது இதயம், நுரையீரல் மற்றும் உடல் தசைகளை அதிக நேரம் இயக்குவதற்கு ஆயத்தமாக்கும்.
ஓஆர்எஸ் எடுத்துச்செல்லுங்கள்!
டிரெக்கிங் செல்லும்போது பல மணி நேரம் தொடர்ந்து வெயிலில் நடக்க வேண்டி வரலாம். அப்போது உடலில் இருக்கிற நீரும் உப்புச்சத்தும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதை ஈடுகட்ட ஓஆர்எஸ் பாக்கெட் எடுத்துச் செல்லுங்கள்.
இதையும் எடுத்துச்செல்லுங்கள்!
மலையேறும்போது காயம், சிராய்ப்பு ஏற்பட்டால் தடவுவதற்கு ஆன்டிசெப்டிக் க்ரீமும் உங்கள் பேக்கில் இருக்கட்டும்.
ஆடைகளில் கவனம் வையுங்கள்!
வெயில் இருக்கும் பகுதிக்கு டிரெக்கிங் செல்கிறீர்கள் என்றால் வெளிர் நிற ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். இதுவே குளிர் மிகுந்த பகுதிகளுக்கு டிரெக்கிங் செல்கிறீர்கள் என்றால், அடர் நிற ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். செளகர்யமாக உணர்வீர்கள்.
எளிமையான உணவுகள்!
டிரெக்கிங் கிளம்புவதற்கு முந்தைய நாளும், டிரெக்கிங் செல்லும்போதும் ஜீரணிப்பதற்கு எளிமையான உணவுகளையே சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடல் ஹெவியாக இல்லாமல் வெகுதூரம் நடக்கிற அளவுக்கு எனர்ஜியுடன் இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு டிரெக்கிங் செய்தால் இரைப்பை யிலிருக்கிற உணவு மேலேறி வரலாம். சாப்பிட்டவுடனே ஓய்வெடுக்காமல் நடக்க ஆரம்பித்தால் பிரச்னை அதிகமாகும். தவிர, மூன்று வேளை என்று சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக நான்கைந்து வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் நல்லது.
தூக்கமும் அவசியம்!
டிரெக்கிங் செல்வதற்கு முந்தைய வாரம் தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்போதுதான் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
50 வயதுக்கு மேல் என்றால்...
ஏற்கெனவே பலமுறை டிரெக்கிங் சென்று வந்த அனுபவம் கொண்டவராக இருந்தாலும் சரி, முதல் தடவையாக டிரெக்கிங் செல்பவராக இருந்தாலும் சரி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து `மலையேறுவதற்கு ஃபிட்டாக இருக்கிறீர்கள்' என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவர்கள் தவிர்க்கலாம்!
டிரெக்கிங் என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி. எக்ஸர்சைஸ் டாலரன்ஸ் என்பார்கள். அதாவது, தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோமோ அதே அளவு தூரம் டிரெக்கிங் செய்தால் கஷ்டமாக உணர மாட்டோம். ஆனால், டிரெக்கிங் என்பதே வெகுதூரம், பல மணி நேரம் நடப்பதுதானே. அங்கு சமதளம் மட்டுமே இருக்காது. மேடு, பள்ளம், பாறைகள் என்று எல்லாமே இருக்கும். அதனால், வழக்கத்தைவிட பல மடங்கு அதிக தூரம் நடந்தால் உடம்பு அதற்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிகம் கேட்கும்.
அதனால், நுரையீரலின் காற்று எடுத்துக்கொள்கிற அளவு அதிகமாகும். விளைவு மூச்சு வாங்கும். இதயத்துடிப்பும் அதிகரிக்கும். பல்ஸ் ரேட் எக்கச்சக்கமாகும். இந்த நிலை இதயத்துக்கும் நுரையீரலுக்கும் கடினமாக இருக்கும் என்றாலும், இது மனிதர்களால் தாங்க முடிந்த அளவுதான். ஆனால், இதயத்தில் ஏற்கெனவே பிரச்னை இருந்தாலோ, அடைப்புகள் இருந்தாலோ இதயத்துக்கு ரத்தம் வேகமாகப் போக முடியாது. அதனால், தீவிர இதய மற்றும் நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் உயரம் அதிகமான மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், சமதளத்தைவிட உயரமான மலைப்பகுதிகளில் காற்றின் அழுத்தமும் ஆக்ஸிஜன் அளவும் சிறிது குறைவாக இருக்கும். மூச்சிரைப்பு, இதய வால்வுகளில் அடைப்பு இருப்பவர்களும் மலையேற்றத்தைத் தவிர்ப்பதே நல்லது.
நுரையீரலில் பிரச்னை இருந்தால்...
நுரையீரலுக்குள் காற்றுபோகிற வழி சுருங்கி இருந்தால், தேவையான காற்று உள்ளே போகாது. இந்தப் பிரச்னை இருப்பவர்களும் மலையேறாமல் இருப்பது நல்லது. சிலருக்கு வழக்கமான வேலைகள் செய்துகொண்டிருக்கும்போது வீஸிங் வராது. ஆனால், உடற்பயிற்சி செய்யும்போது வரும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள். டாக்டர் போகலாம் என்று சொன்னால், முன்னெச்சரிக்கையாக இன்ஹேலர் எடுத்துச்செல்லுங்கள்.
இதை முயற்சி செய்து பாருங்கள்!
3 முதல் 4 மாடி வரைக்கும் நிற்காமல் உங்களால் ஏற முடிகிறது என்றால், நீங்கள் டிரெக்கிங் செல்வதற்குத் தகுதியானவர். ஒருவேளை நடுவில் ஒருமுறை நின்றுவிட்டுச் செல்கிறீர்கள் என்றால், ரொம்ப தூரம் செல்லாமல், செங்குத்தான மலைகள் மீது ஏறாமல் உங்கள் டிரெக்கிங் இருக்க வேண்டும்.
அலர்ஜி இருக்கிறதா?
டிரெக்கிங் செல்லும் இடத்திலிருக்கிற தூசி, பூக்கள், பூச்சிகளால் சிலருக்கு அலர்ஜி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் அதற்கான மருந்துகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
நீரிழிவு இருக்கிறதா?
டிரெக்கிங் செல்லும்போது, அந்த உடற்பயிற்சி காரணமாக உடலில் சர்க்கரையின் அளவு குறையும். ஏற்கெனவே சுகருக்கான மாத்திரையும் போட்டிருந்தால் இன்னமும் குறையும். இதுபோன்ற நேரத்தில் லோ சுகர் வந்தால், சாப்பிடுவதற்கு குளுக்கோஸ் பாக்கெட்டை கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
ரத்த அழுத்தம் இருக்கிறதா?
டிரெக்கிங் செல்பவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், அது கன்ட்ரோலில் இருக்க வேண்டும். டிரெக்கிங் செல்கிற ஆர்வத்தில் மாத்திரை போடாமல் இருந்தால் பிரச்னை பெரிதாகி விடும், கவனம்.
ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்தவர்கள் டிரெக்கிங் செல்லலாமா?
`கரோனரி ஆர்ட்டரி டிசீஸ்' (ரத்தக்குழாய்களில் ஏற்படுகிற பெரும் அடைப்பு) காரணமாக இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், அவர்களுடைய இதயத்தின் செயல்திறன் சரியாக இருப்பதாக மருத்துவர் சொன்னால் டிரெக்கிங் போகலாம். ஆனால், அவர்கள் நடக்கும்போதும் படியேறும்போதும் நெஞ்சுவலி வந்தால் மலையேறவே கூடாது. இந்த நெஞ்சுவலி பிரச்னை ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யாதவர்களுக்கு இருந்தாலும் மலையேறக் கூடாது. இதய வால்வு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் டிரெக்கிங் செல்லக்கூடாது.
நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி, பிரச்னைகளுடன் இருந்தாலும் சரி, நீங்கள் டிரெக்கிங் செல்கிற ஏரியாவுக்கு அருகிலிருக்கிற மருத்துவமனையின் தொலைபேசி எண்களை செல்போனில் பதிவு செய்துகொண்டு கிளம்புங்கள். எதிர்பாராத பிரச்னைகளின்போது உதவும்.
source https://www.vikatan.com/health/healthy/doctors-medical-advice-for-those-who-have-comorbidities-are-planning-for-trekking
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக