சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த மறுதினம் முதலே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முறையாக பதில் அளிக்கப்படாததால் தொடுக்கப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை வழக்குகள் தற்போது விஸ்வரூபம் எடுக்க துவங்கிவிட்டன.
கடந்த புதன்கிழமை (7.4.2021) அன்று விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆணை நகலுடன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட நபர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வந்திருந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read: `ரூ.39 கோடி இழப்பீடு?’ - ஆட்சியர் அலுவலகச் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு! - விழுப்புரத்தில் பரபரப்பு
இந்த சம்பவம் நடைபெற்று முடிந்து ஒரு வார காலமே ஆகிய நிலையில், மற்றொரு வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகும்படி நிபந்தனையுடன் சம்மன் அனுப்பியுள்ளது.
தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரை இருந்து வருகிறார். விழுப்புரம் அடுத்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் சா.விஜயலட்சுமி(65). வயது முதிர்ந்து ஏழ்மையில் வாழும் முதியோர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் உதவித் தொகையை கேட்டு 2018 ஆம் வருடம் விண்ணப்பித்துள்ளார் அவர். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோரிடம் முறையான அனுமதி கையொப்பம் பெற்று சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் நேரில் சென்று விண்ணப்பித்துள்ளார். அவருடைய அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான எண்ணும் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அவருக்கு உதவித்தொகையும், அதை வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்படவே இல்லை.
விண்ணப்பித்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிய நடவடிக்கை இல்லை என்பதினால், 'தன்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலும் தற்போது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. எனக்கு பின்னர் விண்ணப்பித்திருந்த பலருக்கும் வழங்கப்படுகிறது. அதேசமயம் என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படவில்லை. ஆனால் ஆண்டுக்கணக்கில் பரிசீலனையிலேயே வைத்துள்ளார்கள். முதியோர் உதவித்தொகையை பெறுவதற்காக, தான் மிகவும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறேன்" என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போதும் பதில் கிடைக்காததால் கடந்த வருடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் சா.விஜயலட்சுமி. இந்த புகாரை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், இதற்கான உரிய ஆவணங்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்யும்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு 27.07.2020 அன்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு உரிய பதில் அளிக்கப்படாமல் போனதினால், பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மீண்டும் 02.11.2020 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இரண்டாவது முறையும் பதில் மனுவை தாக்கல் செய்யாமல் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இருந்ததினால் தற்போது மூன்றாவது முறையாகவும், இறுதியாகவும், சில நிபந்தனைகளுடன் விழுப்புரம் ஆட்சியருக்கு கடந்த திங்கள் (12.4.2021) அன்று சம்மன் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
கடந்த இரண்டு முறையாக மாவட்ட ஆட்சியரிடமிருந்து பதில் அளிக்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆணையம், மனித உரிமைகள் ஆணையச் சட்டம் 1993 பிரிவு 13-ன் படி, மே மாதம் 27ஆம் தேதி (27.05.2021), விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதற்கு முன்பாக மே மாதம் 20ம் தேதிக்குள் சா.விஜயலட்சுமி என்பவருடைய மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி அதிரடி காட்டியுள்ளது... தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
source https://www.vikatan.com/news/tamilnadu/national-human-rights-commission-summons-villupuram-district-collector
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக