``புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் குளத்தை ஆக்கிரமித்து, ஸ்ரீமகாதேவ சாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து, பெந்தகோஸ்து சர்ச் கட்ட மணல், ஜல்லி கொண்டு வந்து, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள். தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் கட்ட பணம் பெற்றுக்கொண்டு ரெளடிசம் செய்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும். தயவு செய்து இதனை அனைவருக்கும் பார்வர்டு செய்யுங்கள். நீதிமன்ற ஆணை பத்திரம் அனைத்தும் கோவிலுக்குச் சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து சர்ச் கட்ட வேண்டும் என்று தினம், தினம் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்.
பிரச்னைகள் செய்து கோவிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர். அவர் ஊரை விட்டே சென்றுவிட்டார். இப்படியே நடந்தால், நாம் என்ன செய்வது? இந்தியத் திருநாட்டில் இந்து சிவன் கோவிலில் நிம்மதியாகக் கடவுள் வழிபாடு கூடச் செய்ய முடியாத அளவிற்கு அப்பகுதி இந்துக்கள் மிரட்டப்படுகிறார்கள். இதை அனைவருக்கும் பார்வர்ட் செய்யுங்கள். தர்மமே வெல்லும்” என்ற பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புதுக்கோட்டை பகுதிகளில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த உண்மை நிலையை விசாரிக்க ஆவுடையார்கோவில் சென்றோம். ஆவுடையார்கோவில் மேற்கில் செல்லும் ஒத்தையடிப்பாதைப் பிடித்து சென்றால், சில நிமிடங்களில் மகாதேவ சுவாமி நகருக்குள் சென்றுவிட்டோம்.
அங்கு, விவசாய வேலை செய்துகொண்டிருந்த சோனமுத்து என்பவரிடம் பேசினோம், ``இந்தப் பகுதி எல்லாமே இங்கு வாழ்ந்து, மறைந்த நேமனத்தாம்பட்டி மகாதேவ சுவாமி செட்டியாருக்குச் சொத்தமானது. அவருக்கு இங்கு ஜீவ சமாதி இருக்கு. அவர் இருக்கும் போது வீடு கட்ட பலருக்கும் வீடு கொடுத்திருக்காரு. நடுவுல குளம் இருக்குது. நீங்க சொல்ற சம்பவம் நடந்து 3 வருஷம் இருக்கும். இந்தப் பகுதியில இடத்தை வாங்கிய கிருஸ்தவர்கள் சிலர் பாதிரியார்களை எல்லாம் வரவச்சு, சர்ச் கட்டுறதுக்கு பூஜை எல்லாம் போட்டாங்க. ஜல்லிகளை இறக்கினாங்க. பக்கத்துலயே, சிவன் கோயில், காளிகோயில், மகாதேவ சுவாமி ஜீவ சமாதியும் இருக்கு. ஒரு கிறிஸ்டின் வீடு கூட இங்கு இல்லை. அதனால், அன்னைக்கு நாங்க எல்லாரும் ஒன்று சேர்ந்து இங்கு சர்ச் கட்டக்கூடாதுன்னு சொல்லி எதிர்ப்பு தெரிவிச்சோம்.
அவங்களும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிட்டாங்க. அதற்கப்புறம் இப்ப வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சர்ச் கட்டுறதா சொல்லியும் இங்கு வரலை. அந்த இடம் இப்போ, கருவேலமரம் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கு" என்றார்.
இதுபற்றி ஆவுடையார்கோவில் துணைதாசில்தார் ஜபருல்லாவிடம் கேட்டபோது, "3 வருஷத்துக்கு முன்னாடி நடைபெற்ற பிரச்னை, அப்போதே பேசி சரிசெய்யப்பட்டது. வாட்ஸ்அப்பில் தற்போது உலா வரும் இந்தத் தகவல் முழுமையாக உண்மையில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தான், வாட்ஸ் அப்பில் அந்தப் பதிவைத் தொடர்ந்து பதிவிட்டு மக்களிடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/controversial-post-spread-through-whatsapp-in-puthukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக