இரண்டாம் வகுப்பில் இருந்த அந்தக் குழந்தையின் நடை, மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒரு அடி முன்னே எடுத்து வைத்து, நின்று, உடனே அடுத்த அடியை பின்னே வைத்து, கைகளை சிறகுகள் போல விரித்தது.. அதையே மீண்டும் மீண்டும் செய்தது.
"என்ன செய்கிறாய் ப்ரவீன்..?" என்ற வகுப்பாசிரியையின் கேள்விக்கு, "பி.டி. சார் ஓடச்சொன்னாரு மிஸ்... அதுக்கு என்னை நானே சரிசெய்யறேன் மிஸ்..." என்றது.
அந்தக் குழந்தையின் வார்த்தைகள் வகுப்பாசிரியைக்குப் புரியவில்லை என்றாலும், என்னவோ சரியில்லை என்பதை அவர் உணர்ந்ததால், இன்று ப்ரவீன் ஆட்டிச சிறப்புக் குழந்தை என கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையைப் பெற்றுக் கொண்டிருக்கிறான்.
வளரும் குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசம் என்ற இந்த மனவளர்ச்சிக் குறைபாடு உண்மையில் ஒரு நோயல்ல... ஒரு குறைபாடு நிலையே!
மரபணுக்கள், சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றின் காரணமாக, மூளை தனக்களிக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொள்ளும் திறனை இழக்கும் நிலைதான் ஆட்டிசம்.
தனிமையை நாடுவது, கண்களைப் பார்த்து பேசாமல் இருப்பது, திரும்பத்திரும்ப ஒரே செயலைச் செய்வது, தன்னந்தனியாக சிரிப்பது, பயமற்று இருப்பது, வலியை உணராமல் இருப்பது, ப்ரவீன் போல வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்வது, கார், ட்ரெயின் போன்ற பொம்மைகளில் ஈடுபாடு கொள்வது, இவற்றுடன் கற்றல் அல்லது மொழித்திறன் குறைபாடுகள் ஆகியவை பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்பட்டால், அது ஆட்டிசத்தின் அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்று கூறும் குழந்தைநல மருத்துவர்கள், இந்தக் குறைபாடு ஒரு ஸ்பெக்ட்ரம் போல, அதாவது சில குழந்தைகளுக்கு அதிகமாகவும், சில குழந்தைகளுக்கு மிதமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும், இது ஆண் குழந்தைகளையே சற்று அதிகம் பாதிக்கிறது என்றும் கூறுகின்றனர்.
ஆட்டிசத்தை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், தக்க தொடர்பயிற்சிகளை, அதிலும் முக்கியமாக ஐந்து வயதிற்குள் அளிப்பதன் மூலம், விளையாட்டு, இசை, ஓவியம், கணித கணக்கீடுகள் போன்ற ஏதாவது ஒரு துறையில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பதே உண்மை.
அறிவுக்கூர்மைக்கும், இந்தக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லை என்பதற்கு உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பில் கேட்ஸ், மைக்கேல் ஜாக்சன், உலகின் பல அரிய மேதைகளும் இந்த ஆட்டிசக் குறைபாடு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.
உண்மையில் பிரச்னை அதுவல்ல... ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒரு ஆட்டிசக் குழந்தை கண்டறியப்படுகிறது என்றும், ஐம்பது குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் காணப்படுகிறது என்றும், கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் இவர்களின் எண்ணிக்கை முப்பது மடங்கு அதிகமாகியுள்ளது என்றும் பல புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மேற்கத்திய நாடுகளில் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் அவர்கள் ஆரம்பநிலையிலேயே கண்டறிவதால், இந்த சிறப்புக் குழந்தைகள், இன்னும் சிறப்பாக கற்றுக் கொள்கின்றனர்.
இங்கு தான் நாம் சறுக்குகிறோம். நமது நாட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஏன் ஒவ்வொரு மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளருக்கும், ஆட்டிசம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.
தற்போதைய கணக்கான மூன்று மில்லியன் ஆட்டிசக் குழந்தைகள் என்பதைக் காட்டிலும் நிச்சயம், நம் நாட்டில் அதிகம் இருக்கக்கூடும் என்பதுடன், இக்குழந்தைகளின் எதிர்காலம் நம் அனைவரின் கைகளில் உள்ளது என்பதே நிதர்சனம்.
இன்று ஏப்ரல் 2, ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்!
இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், இன்னும் சுலபமாக இந்தக் குழந்தைகள் நிராகரிக்கப்படுவார்கள் என்பதால், ஆட்டிசம் அறிகுறிகள் பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நமது எதிர்கால சந்ததியினரைக் காப்போம்!
source https://www.vikatan.com/health/kids/6-am-club-raising-awareness-about-autism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக