Ad

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

திருச்சி - அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மணப்பாறை

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகரை எதிர்த்து, தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது போட்டியிடுகிறார். சந்திரசேகர், ஊராளி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் முத்தரையர் சமூகத்துக்கு அடுத்து அதிகம் வசிப்பது சந்திரசேகரின் ஊராளி கவுண்டர் சமூகத்தினர் என்பது அவருக்கு ப்ளஸ். தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்காததால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அப்துல் சமது வெளியூர் வேட்பாளர் என்பதும் மைனஸ். எனவே, இரட்டை இலையே மீண்டும் துளிர்க்கிறது.

ஸ்ரீரங்கம்

அ.தி.மு.க-வில் கு.ப.கிருஷ்ணனும், தி.மு.க-வில் பழனியாண்டியும் களம் காண்கிறார்கள். முத்தரையர் சமூக ஆதரவு கு.ப.கிருஷ்ணனுக்கு ப்ளஸ். சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் வளர்மதிக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால், அவரின் ஆதரவாளர்கள் கு.ப.கிருஷ்ணனைப் புறக்கணிக்கிறார்கள். அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமானும் தன் பங்குக்கு அ.தி.மு.க வாக்குகளை கணிசமாகப் பிரிக்கிறார். இவையெல்லாம் மைனஸ். தொகுதி மக்களின் சுகதுக்கங்களில் கலந்துகொள்வதும், நேருவின் ஆசி இருப்பதும் பழனியாண்டிக்கு ப்ளஸ். ஆகவே, தி.மு.க முந்துகிறது.

திருச்சி - மேற்கு

தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் தேர்தல் அனுபவம் இல்லாத புதுமுக வேட்பாளரான ஜெ. பேரவை மாவட்டச் செயலாளரான பத்மநாபன் களம்காண்கிறார். அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளே வாக்குச் சேகரிக்கக் களத்துக்குச் செல்லவில்லை. பத்மநாபனைத் தோற்கடித்து, வெல்லமண்டி நடராஜனுக்கு நெருக்கடி கொடுக்க உட்கட்சி எதிரிகள் மறைமுக வேலை செய்கிறார்கள். வெற்றிக்கோட்டை எளிதில் தொட்டுவிடலாம் என்று தெம்போடு நேரு வலம்வருகிறார். கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நேரு ஜெயிப்பார்.

திருச்சி - கிழக்கு

அ.தி.முக-வில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், தி.மு.க சார்பில் ‘கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க’த்தின் தலைவர் இனிகோ இருதயராஜும் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், தொகுதியில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளைக் கைப்பற்ற முடியாத நிலை இருக்கிறது. அ.ம.மு.க வேட்பாளரான முன்னாள் அ.தி.மு.க கொறடா மனோகரன், அ.தி.மு.க வாக்குகளை கணிசமாகப் பிரிப்பது, வெல்லமண்டி நடராஜனுக்கு மைனஸ். சிறுபான்மையினர் மற்றும் தி.மு.க கூட்டணி வாக்குகள் கைகொடுப்பதால், இனிகோ இருதயராஜ் முந்துகிறார்.

திருவெறும்பூர்

தி.மு.க-வின் அன்பில் மகேஷை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி குமார் களம்காண்கிறார். தொகுதியிலும், கட்சியினர் மத்தியிலும் அன்பில் மகேஷுக்குச் செல்வாக்கு இருந்தாலும், அவர் முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்று கட்சியினர் பலரும் பணத்தை இறைத்து உள்ளடி வேலை செய்கிறார்கள். இந்தத் தொகுதியைக் குறிவைத்து குமார் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். கட்சி நிர்வாகிகளின் ஆதரவும் பணபலமும் இவருக்கு ப்ளஸ். பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை மைனஸ். தொகுதியில் இழுபறிநிலைதான்!

லால்குடி

மூன்று முறை வெற்றிபெற்ற தி.மு.க-வின் செளந்தரபாண்டியனை எதிர்த்து த.மா.கா-வின் தர்மராஜ் போட்டியிடுகிறார். கே.என்.நேரு-வின் ஆசி, தொகுதி மக்களிடம் நன்கு பழகக்கூடியவர் என்பது செளந்தரபாண்டியனுக்கு ப்ளஸ். அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லாததால் பிரசாரத்தில் தர்மராஜ் தடுமாறுகிறார். அதனால், வைட்டமின் `ப’வை நம்புகிறார். நேருவின் பிரசாரம் காரணமாக, தொகுதியைத் தக்கவைத்துக்கொள்கிற்றார் சௌந்தரபாண்டியன்.

மண்ணச்சநல்லூர்

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியை எதிர்த்து, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும உரிமையாளர் சீனிவாசன் மகன் கதிரவன் தி.மு.க சார்பில் களம்காண்கிறார். தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர் என்பது பரஞ்சோதிக்கு ப்ளஸ். உட்கட்சிப்பூசல்கள் இருந்தாலும், நேரு இவர் பக்கம் இருப்பதும் வைட்டமின் `ப’வை தாராளமாகச் செலவழிப்பதும் கதிரவனுக்கு ப்ளஸ். எனவே, தி.மு.க-வே முந்துகிறது.

முசிறி

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ செல்வராஜை எதிர்த்து, தி.மு.க-வின் காடுவெட்டி தியாகராஜன் போட்டியிடுகிறார். தொகுதியில் செல்வராஜ் குடும்பத்தினரும் உறவினர்களுமே செழுமையாகி இருக்கிறார்கள் என்பதில் அ.தி.மு.க நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதிக்கு சீட் கிடைக்காததால், அவரின் ஆதரவாளர்களும் எதிராகவே இருக்கிறார்கள். உட்கட்சிப்பூசலும் செல்வராஜின் காலை வாருகிறது. தி.மு.க-வின் காடுவெட்டி தியாகராஜன் எளிமையான மனிதர், எல்லோரிடமும் நன்கு பழகக்கூடியவர், கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர் என்பதால் தொண்டர்கள் வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்கிறார்கள். எனவே, தொகுதியில் சூரியன் உதிக்கிறது.

துறையூர் (தனி)

தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஸ்டாலின் குமாரும் அ.தி.மு.க-வின் இந்திராகாந்தியும் மோதுகிறார்கள். பாரம்பர்யமிக்க தி.மு.க குடும்பத்தினரான ஸ்டாலின் குமார் வீட்டுப் பெண்கள், வீடு வீடாகச் சென்று பெண்களிடம் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்வது கைகொடுக்கிறது. ‘கட்சி நிர்வாகிகளை மதிக்காத வேட்பாளரை மாற்றுங்கள் என்று அ.தி.மு.க-வினர் நான்கு நாள்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை. அதனால், இந்திராகாந்திக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். அ.ம.மு.க வேட்பாளர் சுப்ரமணியனும் தன் பங்குக்கு அ.தி.மு.க வாக்குகளைப் பிரிப்பார். எனவே, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முந்துகிறது.

அரியலூர்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன், ம.தி.மு.க-வில் வழக்கறிஞர் சின்னப்பா ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதியில் நிலவும் அதிருப்தி, ராஜேந்திரனுக்கு மைனஸ். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதியிலுள்ள நன்மதிப்பு ஆகியவை சின்னப்பாவுக்கு ப்ளஸ். அதோடு, கணிசமான அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர் மணிவேல் பிரிப்பதும் ம.தி.மு.க-வுக்கு சாதகமாக இருப்பதால், சின்னப்பா முந்துகிறார்.

ஜெயங்கொண்டம்

பா..ம.க-வின் வழக்கறிஞர் பாலுவும் தி.மு.க-வின் கே.எஸ்.கண்ணனும் மோதுகிறார்கள். தொகுதியில் பா.ம.க-வுக்கு இருக்கும் செல்வாக்கும் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியும் பாலுவுக்கு பாசிட்டிவாக இருந்தாலும், ம.நீ.ம கூட்டணியில் ஐ.ஜே.கே சார்பில் காடுவெட்டி குருவின் மனைவி சுவர்ணலதா போட்டியிடுவது கடும் குடைச்சலைக் கொடுக்கிறது. கணிசமான வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளை சுவர்ணலதா பிரிப்பது தி.மு.க-வுக்குச் சாதகமான விஷயம். இதனால், தொகுதியில் இழுபறி நிலைதான்!

பெரம்பலூர் (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வனும், தி.மு.க-வில் பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள். மூன்று முறை எம்.எல்.ஏ-வாக பதவி வகித்த இரா.தமிழ்ச்செல்வனுக்கு பெரிய அளவில் கெட்ட பெயர் இல்லை என்பது ப்ளஸ். ஆ.ராசாவின் வலது கரம் என்பதைத் தாண்டி சொந்தக் கட்சியில்கூட பெரிய செல்வாக்கு எதுவுமில்லை என்பது பிரபாகரனுக்கு மைனஸ். அதனால், தமிழ்ச்செல்வன் மீண்டும் பெரம்பலூரைத் தக்கவைப்பார்.

குன்னம்

சிட்டிங் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் அ.தி.மு.க சார்பிலும், சிவசங்கர் தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். தொகுதி மக்களின் சுகதுக்கங்களில் பங்கேற்பது, விழாக்களுக்கு நன்கொடை கொடுப்பது போன்றவற்றால் தொகுதியில் செல்வாக்காக இருக்கிறார் ராமச்சந்திரன். தொகுதியில் கணிசமாக இருக்கும் பா.ம.க ஓட்டு வங்கியும் இவருக்கு ப்ளஸ். அரியலூர் மாவட்டச் செயலாளராக இருந்தாலும், சிவசங்கர் ஏற்கெனவே குன்னம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதால் இந்தத் தொகுதியில் இருக்கும் செல்வாக்கு இவருக்கு ப்ளஸ். இருவருமே சம பலத்தோடு இருந்தாலும், ராமச்சந்திரன் சற்றே முந்துகிறார்.



source https://www.vikatan.com/news/election/trichy-ariyalur-perambalur-districts-assembly-election-survey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக