"Make your own future. Make your own past. It's all right now."
"உன் எதிர்காலத்தை நீயே உருவாக்கு. உன் இறந்தகாலத்தை நீயே உருவாக்கு. ஏனென்றால், அது எல்லாமே இப்போது, இந்த நொடிதான்!"
ஜாக் ஸ்னைடர்ஸ் ஜஸ்டிஸ் லீக் (Zack Snyder's Justice League) திரைப்படத்தில் அதன் சூப்பர்ஹீரோக்களில் ஒருவரான 'தி ஃப்ளாஷ்' எனும் 'பேரி ஆலன்' உதிர்க்கும் இந்த வார்த்தைகள் அந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான கதைக்கும் நன்றாகவே பொருந்திப் போகிறது.
ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தைச் சாதாரண ரசிகர்கள் கூட்டம் அடிபணிய வைத்த சிறப்புமிக்க வரலாற்றின் நீட்சிதான் தற்போது வெளியாகியுள்ள இந்த 'ஜாக் ஸ்னைடர்ஸ் ஜஸ்டிஸ் லீக்' (Zack Snyder's Justice League) திரைப்படம். ஆம், அவர்கள் இறந்த காலத்தை மாற்றியமைத்திருக்கிறார்கள். புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். விசிலிடித்து கரவொலி எழுப்பி நகர்ந்துவிடும் ரசிகர்களாக மட்டுமல்லாமல் ஒரு கலைஞனுக்கு ஆதரவாக நின்று அவரின் கனவுக்கு உயிர்கொடுத்து அவரின் உழைப்பை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். அந்த சுவாரஸ்ய முன்கதை ஒருசில வரிகளில்...
முன்கதை:
2017-ம் வருடம் DC காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். அப்போது அந்தப் படத்தை இயக்கிய ஜாக் ஸ்னைடருக்கும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் நிறையவே கருத்து வேறுபாடுகள் எட்டிப் பார்த்தன. படத்தை மூன்றரை மணி நேரமாக அல்லது குறைந்தபட்சம் மூன்று மணி நேரமாக எடிட் செய்து வெளியிடும் முனைப்பிலிருந்தார் ஸ்னைடர். ஷூட்டிங் முடிந்து படம் போஸ்ட் புரொடக்ஷனிலிருந்த சமயம், ஸ்னைடரின் மகள் இறந்துவிட்டாள். இதனால் இந்த புராஜெக்ட்டிலிருந்து விலகிய ஸ்னைடருக்குப் பதிலாக இயக்குநர் ஜாஸ் வேடனைக் கொண்டு வருகிறது தயாரிப்புத் தரப்பு. இவர் DC காமிக்ஸின் போட்டி நிறுவனமான மார்வெல் காமிக்ஸிற்காக 'அவெஞ்சர்ஸ்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கியவர்.
ஸ்க்ரிப்ட்டில் நிறைய மாற்றங்கள், ரீ-ஷூட் எனப் பல கூத்துகள் அரங்கேறி, படம் ஒருவழியாக இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய ஒன்றாக வெளியானது. படம் பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. ஆனால், அப்போதிருந்தே இது ஸ்னைடர் எடுக்க நினைத்த படமல்ல என்ற குரல் பலமாக ஒலிக்க ஆரம்பித்தது. சமூக வலைதளங்களில் #RestoreTheSnyderCut போன்ற ஹேஷ்டேகுகள் வைரலாகின. ஒருவழியாக ரசிகர்களின் கோபத்தையும் உணர்வையும் மதித்து 2020-ல் ஒரு முடிவை எடுத்தது தயாரிப்பு தரப்பு. எவ்வித சமரசமுமின்றி தான் எடுக்க நினைத்த படத்தை ஸ்னைடரே முடித்து HBO மேக்ஸ் ஓடிடியில் அதை வெளியிடலாம் என்று அறிவித்தது. அதுதான் தற்போது நடந்துள்ளது. இந்தியாவில் HBO மேக்ஸ் இல்லாததால், இந்தப் படம் 'புக் மை ஷோ ஸ்ட்ரீம்' உள்ளிட்ட 'வீடியோ ஆன் டிமாண்ட்' தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜாக் ஸ்னைடர்ஸ் ஜஸ்டிஸ் லீக் படம் எப்படி?
'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் vs சூப்பர்மேன்' படங்களின் தொடர்ச்சியாக விரிகிறது இந்தப் படம். சூப்பர்மேனின் இறப்பு அதுவரை அடங்கிக் கிடந்த மதர் பாக்ஸ் மெஷின்களை எழுப்பிவிடுகிறது. தீய சக்திகளை அழைத்துவந்து உலகையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட அந்தப் பெட்டிகளை அடைந்து தன் தலைவன் டார்க்ஸைடை பூமிக்கு அழைத்துவரத் துடிக்கிறான் ஸ்டெப்பன்வுல்ஃப். அதற்கான படை பலத்துடன் பூமியை முற்றுகையிடுகிறான். சூப்பர்மேன் இல்லாத உலகில் வரும் இந்த ஆபத்தைத் தடுக்க, புதியதொரு சூப்பர்ஹீரோ படையான 'ஜஸ்டிஸ் லீக்'கை உருவாக்குகிறார் பேட்மேன். இறுதியில் எந்தப் படை வென்றது என்பதுதான் இந்த நான்கு மணிநேரப் படத்தின் சாராம்சம்.
2017-ல் வெளியான படத்தின் அவுட்லைன்தான் இது என்றாலும் பல்வேறு புதிய கதாபாத்திரங்கள், புதிய காட்சிகள், ஸ்டன்ட் சீக்குவன்ஸ் என முழுக்கவே வேறு ஒரு படமாகத் தெரிகிறது இந்த ஸ்னைடர் கட். ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் இன்ட்ரோ சீன், ஒரு எமோஷனலான பின்கதை, அவர்களின் சூப்பர் பவர்களை விவரிக்கும் காட்சிகள், அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான நியாய தர்மங்கள் என விரிவாகக் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். சூப்பர்மேனின் மரணக் காட்சி என முந்தைய பாகம் விட்ட இடத்திலேயே தொடங்கும் இந்தப் படம், பல இடங்களில் இது நாம் 2017-ல் பார்த்த படமே இல்லையே என்ற பிரமிப்பைத் தருகிறது. பல ஆக்ஷன் காட்சிகள், பின்கதைகள், ஃப்ளாஷ்பேக் போர் காட்சிகள் என அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட பலவற்றை ஏன் அப்போது கட் செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஓர் இயக்குநராக, தன் காட்சி மொழிக்குப் பெயர்போன ஜாக் ஸ்னைடர் இதிலும் தன் தனி முத்திரைகளைப் பல ஃப்ரேம்களில் பதித்துள்ளார். சூப்பர்ஹீரோ சாகசங்கள், அதீத கிராஃபிக்ஸ் என்றாலும் அதையும் அழகியலுடன் அணுகும் அவரின் யுக்தி இதிலும் கைகொடுத்திருக்கிறது. 'தி ஃப்ளாஷ்' கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் தறிகெட்டு ஓடும் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் அப்ளாஸ் ரகம்! என்ன, மற்ற இடங்களிலும் பலமுறை எட்டிப்பார்க்கும் ஸ்லோமோஷன் ஷாட்களை மட்டும் சற்று குறைத்திருக்கலாம் ஃபீல்!
நான்கு மணிநேரப் படத்தை முன்னுரை, 6 பார்ட்டுகள், முடிவுரை என ஒரு வெப்சீரிஸ் ஃபார்மேட்டுக்குள் புகுத்தியிருக்கிறார் ஸ்னைடர்.
2017-ல் வெளியான படத்தில் காமெடி சற்று தூக்கலாகவும் சில இடங்களில் தேவையற்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக பேட்மேன் என்ற சீரியஸான கதாபாத்திரத்தை வைத்தெல்லாம் மார்வெல் சினிமா போன்ற காமெடிகளைச் சேர்த்திருப்பார் ஜாஸ் வேடன். இதில் அந்தத் தவறுகளை எல்லாம் சரி செய்திருக்கிறார் ஜாக் ஸ்னைடர். பேட்மேன், வொண்டர்வுமன் உட்பட அனைவருமே தங்களின் மீட்டருக்குள்ளாக மட்டுமே வந்துபோகிறார்கள். அவர்களின் கதாபாத்திரங்களைச் சிதைக்காமல் காட்சிப்படுத்தியதற்காக ஸ்னைடரை நிச்சயம் பாராட்டலாம்.
அதே சமயம், ஒரு சில இடங்களில் மட்டும் படம் சற்றே நீளமான ஃபீலைத் தருகிறது. ஃபுட்டேஜ் இருக்கிறது, சுதந்திரமும் இருக்கிறது என்பதற்காக எடுத்த காட்சிகள் அனைத்தையும் கோர்வையாகக் கோத்திருக்கிறார்கள். குறிப்பாக அக்வாமேன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கு இன்னும் குறைத்திருக்கலாம். ராவான ஃபுட்டேஜுக்கு உண்டான கிராஃபிக்ஸ் பணிகளைச் செய்துமுடிக்க ஒதுக்கப்பட்ட பட்ஜெட் குறைவு, நேரமும் குறைவு என்பதாலோ என்னவோ ஒருசில இடங்களில் மட்டும் படத்தின் கிராஃபிக்ஸ் பல்லிளிக்கிறது. குறிப்பாக, இளம்வயது டார்க்ஸைடு காட்சிகளில் கிராபிக்ஸுக்கு இன்னமும் உழைத்திருக்கலாம்.
காமிக்ஸ் மற்றும் கார்ட்டூனில் 'ஜஸ்டிஸ் லீக்'கை ரசித்தவர்களுக்கு மெகா சைஸ் விருந்து வைத்திருக்கிறார்கள். மார்ஷியன் மேன்ஹன்டர், டார்க்ஸைடு, கிரேனி குட்னஸ், டெசாட் உள்ளிட்ட பல காமிக்ஸ் புக் கதாபாத்திரங்கள் முதன்முறையாக வெள்ளித்திரையில் உலாவியிருக்கின்றன. அந்த வகையில் கார்ட்டூன் பார்த்து உருகிய 90-ஸ் கிட்ஸ்களுக்கு இது ஒரு ஃபேன் சர்வீஸாக இருக்கும்.
கிறிஸ் டெரோ, ஜாக் ஸ்னைடர் ஆகியோரை உள்ளடக்கிய கதை, திரைக்கதை டீம் 4 மணி நேரப் படத்துக்கு பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறது. ஃபேபியன் வேக்னரின் ஒளிப்பதிவு ஓர் இருள் படர்ந்த உலகை அதற்குரிய அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜங்கி XL எனும் டாம் ஹொல்கன்பர்கின் இசை ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் ஒரு தீம், ஒவ்வொரு ஃபைட் சீக்குவன்ஸுக்கும் ஒரு தீம் என ஓவர்டைம் பார்த்துப் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.
நிறையக் கதாபாத்திரங்கள், அனைத்துக்கும் மிக முக்கியமான மார்க்கெட்டுள்ள நடிகர்கள் எனும்போது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் JK சிம்மன்ஸ், ஆம்பர் ஹெட், வில்லியம் டேஃபோ, ஏமி ஆடம்ஸ் உள்ளிட்ட பலரையும் ஊறுகாய் ரேஞ்சுக்குதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். 4 மணிநேரப் படத்திலும் இதுதான் சாத்தியம் என்பதே ஒருவித பலவீனமாகப் படுகிறது.
அதேபோல் காமிக்ஸ், கார்ட்டூன், ஏன் முன்னர் வெளியான 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் vs சூப்பர்மேன்' படங்களில்கூட சூப்பர்மேனுக்கு என்று சில பிரச்னைகள் இருக்கும். அவர் அதீத சக்திவாய்ந்தவர் என்றாலும் அவரை சமாளிக்கவும் தாக்கவும் பல யுக்திகள் காட்டப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அவரின் பலத்தை மட்டுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவர் வந்தால் க்ளைமாக்ஸ்தான், வில்லன் தோற்றுவிடுவான் என்பதைப் பார்க்கும் சின்ன குழந்தைகூட சொல்லுமளவுக்குத் திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. கிட்டத்தட்டத் தமிழ் சினிமாவின் க்ளைமாக்ஸ் போலீஸ் போலத்தான் அவரின் பாத்திரமும் எழுதப்பட்டிருக்கிறதோ என்ற ஃபீல் எழுகிறது. அவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸை சற்றே கூட்டியிருக்கலாம். அவ்வளவு எதிர்பார்க்கப்பட்ட டார்க்ஸைடு வில்லன் பாத்திரமும் ஒருசில நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறைகிறது. அடுத்த பாகத்துக்கு லீட் வைத்து முடித்திருந்தாலும், ஸ்னைடரின் கனவின்படியே இனிவரும் DC காமிக்ஸ் படங்கள் அமையுமா என்பது சந்தேகமே!
இதனால் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும், இனிவரும் DC காமிக்ஸ் படங்கள் ஸ்னைடரின் வழிகாட்டுதல் படியே எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அதற்காக #RestoreTheSnyderVerse என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகிறது.
படத்தில் வுல்கோ கதாபாத்திரத்தில் தோன்றும் வில்லியம் டேஃபோ இப்படி ஒரு வசனத்தை அக்வாமேனிடம் சொல்லுவார். "நிறைய நாள்களுக்கெல்லாம் இந்த உலகுக்கு நீ முதுகை மட்டுமே காட்டிக்கொண்டிருக்க முடியாது." அதாவது எப்போதும் சுயநலமாக, மக்களின் உணர்வை மதிக்காமல் ஒருவர் இருந்துவிட முடியாது, என்றாவது ஒருநாள் அவர் மக்களின் குரலைக் கேட்டுதான் ஆகவேண்டும் என்ற அர்த்தத்தில் அது சொல்லப்பட்டிருக்கும். அதைத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸுக்குச் சொல்லப்பட்ட சூசகமான செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
2017-ல் வெளியாகித் தோல்வியடைந்த ஜாஸ் வீடனின் 'ஜஸ்டிஸ் லீக்' படத்தை மறந்துவிடலாம். அசல் இங்கே இருக்கிறது. வாழ்த்துகள் ஜாக் ஸ்னைடர்!
source https://cinema.vikatan.com/hollywood/zack-snyders-justice-league-movie-analysis-and-comparison-with-the-2017-version
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக