கடந்த வியாழக்கிழமை மக்களவையில் "தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை அறிவித்தார்" சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. அவர் பேசிய போது சுங்கச் சாவடிகள் குறித்த குற்றச்சாட்டு ஒன்றைப் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டேனிஷ் அலி முன்வைத்தார். ''நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் இடைவெளியில் தான் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், எனது தொகுதியில் 40 கி.மீ-களுக்கு உள்ளாகவே இரண்டு சுங்கச்சாவடிகள் அமைந்திருக்கின்றன'' எனக் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிதின் கட்கரி, "சில இடங்களில் அளவுக்கு அதிகமாகவே சுங்கச்சாவடிகள் இருக்கின்றனதான். இவை தடுக்கப்பட வேண்டும். அடுத்த ஒரு வருடத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் நீக்கப்படும். சுங்கக் கட்டணம் ஜிபிஎஸ்-ன் (GPS) உதவிக் கொண்டு வசூலிக்கப்படும். வாகனங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கின்றன என்பது ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப பணம் வசூலிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். ''அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் சுங்கச்சாவடிகள் இருக்காது. சுங்கச்சாவடிக்கான கட்டணம் பயன்பாட்டைப் பொருத்து நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்தே எடுத்துக் கொள்ளப்படும்'' எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read: 15 வருட பழைய கார்கள்... ஆர்சி புக்கை புதுப்பிக்க ரூ.5000 கட்டணம்... தவறினால் மாத மாதம் அபராதம்!
வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தடுக்கவே ஃபாஸ்டேக் (FASTag) அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 93 சதவிகிதம் பேர் ஃபாஸ்டேகை பயன்படுத்துகின்றனர். தற்போது கூறப்பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை மூலம் சுங்கச்சாவடிகளுக்கான பணம் செலுத்துவது இன்னும் எளிதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக்கை அரசு அறிமுகப்படுத்தி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தாலும், இன்னும் அதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் பலரும் குற்றம் சாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
source https://www.vikatan.com/news/india/gps-based-toll-collection-toll-gates-to-be-removed-nithin-gadkari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக