லக்னோ மற்றும் சன் ரைசர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெல்வதைப் போலவே சென்று கடைசிக்கட்டத்தில் சொதப்பி தோற்றிருக்கிறது. ஸ்டாய்னிஸ் மற்றும் பூரனின் கட்டுக்கடங்கா அதிரடிதான் சன்ரைசர்ஸ் அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது
லக்னோ அணிக்கு டார்கெட் 183. இரண்டாவது இன்னிங்ஸின் 15 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்திருந்தது லக்னோ அணி. அடுத்த ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு தேவை 69 ரன்கள். நன்கு செட்டில் ஆகியிருந்த மன்கட் ஸ்டோய்னிஸ் களத்தில் நிற்க ஆட்டம் லக்னோ பக்கமே. இருப்பினும், புவனேஷ்வர், நடராஜனை வைத்து ஏதேனும் செய்துவிட மாட்டோமா என சிறு நம்பிக்கை சன்ரைஸர்ஸ் கேப்டன் மார்க்கரமுக்கு இல்லாமல் இருந்திருக்காது. இடையில் ஒரு ஓவர் கூடுதலாக இருக்க அபிஷேக் ஷர்மாவை அழைக்கிறார் அவர். 2 ஓவர்களில் 11 ரன்கள் என அபிஷேக்கும் நன்றாகவே வீசியிருந்தார். ஆனால்…
சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டம் லக்னோவுக்கு ரொம்பவே முக்கியமானது. ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா என இத்தனை அணிகளும் புள்ளிப்பட்டியலின் நட்டநடுவில் அணைகட்டி நின்று கொண்டிருக்க அடுத்த வரவிருக்கும் ஒவ்வொரு ஆட்டங்களும் ஏறக்குறைய பரமபதம்தான். மறுப்பக்கம், தொடரை விட்டு மற்றவர்களைக் கூட்டிச் செல்லும் முனைப்பில் டெல்லி, ஹைதராபாத் அணிகள்.
இப்படியிருக்க, 16-வது ஓவரை வீச வருகிறார் அபிஷேக். முதல் பந்து, தூக்கி அடிப்பதற்கே வீசப்பட்டது போன்ற ஃபுல் டாஸ் பந்தை நேர் கோட்டில் 100 மீட்டருக்கு கிளியர் செய்கிறார் ஸ்டோய்னிஸ்.
புதிதாய் களத்திற்கு வந்த பூரனுக்கும் அதே ஸ்லாட் பந்தை வீச முதல் பந்திலேயே 105 மீட்டருக்கு ஒரு சிக்ஸரைப் பறக்கவிடுகிறார் அவர். கடைசி இரண்டு பந்துகளிலும் எந்த மாற்றமுமில்லை.
தன் முதல் மூன்று பந்துகளையும் பூரன் சிக்ஸருக்கு அனுப்ப அந்த ஒற்றை ஓவரில் மட்டும் 31 ரன்கள்.
13 ரன்களுக்கு மேலிருந்த தேவைப்படும் ரன்-ரேட் ஒரே ஓவரில் 9-க்கு குறைந்தது. பூரன் ஓய்வதாய் இல்லை, மறுப்பக்கம் மன்கட்டும் வேகமெடுக்க 4 பந்துகள் மீதமிருக்க வெற்றி கோட்டை எட்டியது லக்னோ
65 ரன்கள் அடித்திருந்த மன்கட் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட வெறும் 13 பந்துகளில் 44 ரன்கள் அடித்திருந்தார் பூரன்.
இவ்வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். இந்த தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணியின் பிளே-ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றைய டபுள்-ஹெட்டரின் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததில் டெல்லி அணிக்கும் இதே நிலைதான். மறுபுறம் பஞ்சாப் அணியின் வெற்றி புள்ளிப்பட்டியலை மேலும் இறுக்கமாகியுள்ளது. நாளைய டபுள் ஹெட்டரில் சென்னையை தவிர மற்ற மூன்று அணிகளுக்குமே பிளே-ஆப்ஸுக்கான இறுதி ரேஸ்தான். அதில் யார் யாரை முந்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://sports.vikatan.com/cricket/ipl-2023-srhvlsg-match-analysis
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக