Ad

செவ்வாய், 2 மே, 2023

Doctor Vikatan: தினமும் 20 கிலோ மீட்டர் டிரைவிங்... வாகனம் ஓட்டும்போதே தூக்கம்... காரணம் என்ன?

Doctor Vikatan: என் வயது 45. தினமும் 20 கிலோமீட்டர் டிரைவிங் செய்கிறேன். பல நேரங்களில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்துவிடுகிறது. சிக்னலில் இப்படித் தூங்கிய அனுபவம் உண்டு. இதற்கு என்ன காரணம்? தீர்வுகள் என்ன?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்

பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை

இந்தப் பிரச்னையை 'Sleeping at the wheels' என்று சொல்வதுண்டு. அதாவது வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே தூங்குவது. இந்தப் பிரச்னை மிகமிக ஆபத்தானது என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தும் நீங்கள் கார் ஓட்டுவதைத் தொடர்வது விபத்துக்கு காரணமாகும்.

இந்தப் பிரச்னைக்கான காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்து, முற்றிலும் குணமாகும்வரை நீங்கள் கார் ஓட்டுவதை நிறுத்திவைப்பதுதான் முதல் தீர்வு. அதுதான் உங்களுடைய பாதுகாப்புக்கும், மற்றவர்களின் பாதுகாப்புக்கும் நல்லது.

கார் ஓட்டும்போதே தூக்கம் வருவதற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா (Obstructive sleep apnea (OSA) என்ற நிலையே பிரதான காரணமாக இருக்கக்கூடும். இது உடல் பருமன் அதிகமுள்ளோருக்கு வரக்கூடியது. இவர்கள் இரவில் தூங்கும்போது குறட்டை அதிகம் விடுவார்கள்.

உடல் பருமன்

இதனால் தூக்கத்தில் இடையிடையே தொந்தரவு ஏற்படும். உணவுக் குழாயையும் வாயையும் இணைக்கும் பகுதியில் (pharynx) அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி அடைப்பு ஏற்படும்போது தன்னிலை மறந்து ஒருவித அதிர்ச்சியோடு எழுந்திருப்பார்கள். தொடர்ச்சியான இடையூறு காரணமாக சம்பந்தப்பட்ட நபருக்கு நன்கு தூங்கிய புத்துணர்வே இருக்காது.

அதன் காரணமாக அவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அடுத்து ஒபிசிட்டி ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் (Obesity hypoventilation syndrome (OHS) என்ற பிரச்னையும் ஒரு காரணம். பருமனானவர்களுக்கு வரும் இந்த பாதிப்பில் மூச்சுவிடும் தன்மையில் மாறுதல்கள் ஏற்படும். அதனால் களைப்பும் அசதியும் ஏற்படலாம்.

அப்படியானால் தூக்கத்தில் குறட்டை விடுகிற எல்லோருக்கும் இப்படி வருமா என்றால் இல்லை. இரவில் நன்றாகத் தூங்குவதாக நினைத்துக்கொண்டிருப்போருக்கும், அவர்களை அறியாமல் இப்படி நடக்கலாம். ஏழெட்டு மணி நேரம் தூங்கியதாகச் சொன்னாலும், அவர்களுக்கும் இரவில் தூக்கத்தில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, அது குறட்டையாக மாறி, தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

பகலில் தூங்கும் பிரச்னைக்கு நீங்கள் மருத்துவரை அணுகி, அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியா அல்லது ஒபிசிட்டி ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் இரண்டில் ஏதேனும் இருக்கிறதா என உறுதிசெய்துகொள்ளவும்.

பகல் தூக்கம் நல்லதா?

இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில் வேறு காரணங்களால் உங்களுக்கு இரவில் நிறைவான தூக்கம் இல்லையா என்பதையும் மருத்துவ ஆலோசனையில் தெரிந்துகொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஏதோ காரணத்தால் இரவுத்தூக்கம் பாதிக்கப்படுவதுதான் இப்படி பகலில் தூக்கம் வர காரணம். அதைத் தெரிந்துகொண்டு தாமதிக்காமல் சிகிச்சையை ஆரம்பிக்கவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-sleeping-while-drive-what-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக