Ad

செவ்வாய், 2 மே, 2023

போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த சிறைக் காவலர்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ - நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). இவர் லால்குடி கிளைச் சிறையில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றிவந்தார். ராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் 2021-ம் ஆண்டு நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை, அடிதடியாகி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, லால்குடி கிளைச் சிறையில் முதல் நிலைக் காவலராக இருந்த ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இது மட்டுமல்லாமல், ராஜாவுக்கும் அவருடைய தம்பி நிர்மலுக்கும் இடையேயும் நீண்டகாலமாக சொத்துப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது.

ராஜா

இந்த நிலையில், சொத்துப் பிரச்னை தொடர்பாக கடந்த 25-ம் தேதி ராஜாவுக்கும், அவர் தம்பி நிர்மலுக்குமிடையே அடிதடி தகராறு நடந்திருக்கிறது. அப்போதே லால்குடி எஸ்.ஐ பொற்செழியன் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார். நேற்று முன்தினம் மாலை மறுபடியும் சகோதரர்கள் இருவருக்குமிடையே பிரச்னை நடந்திருக்கிறது. கோபத்தோடு ஸ்டேஷனுக்கு வந்த ராஜா, ‘என் தம்பி மேல உடனே நடவடிக்கை எடுங்க’ எனக் கொதித்திருக்கிறார். அப்போது எஸ்.ஐ-க்கும், ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒருகட்டத்தில் புகார் கொடுக்க வந்த ராஜாவை, எஸ்.ஐ பொற்செழியன் அடித்து துன்புறுத்தி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இதில் மனமுடைந்த ராஜா, அருகிலுள்ள பெட்ரோல் பங்குக்குச் சென்று பெட்ரோல் வாங்கிவந்து, உடலில் ஊற்றி லால்குடி காவல் நிலையத்துக்கு முன்பே தீக்குளித்தார். உடனே அங்கிருந்த போலீஸார், பொதுமக்கள் ராஜாவைமீட்டு உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்தனர். அதையடுத்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.

மருத்துவமனையில் ராஜாவின் சடலம்

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது, திருச்சி ஜே.எம் 6 நீதிபதி சிவகுமாரிடம் வாக்குமூலம் அளித்த ராஜா, ‘விசாரணையின்போது என்னைத் தாக்கிய லால்குடி காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன், என்னுடைய தம்பி நிர்மல், அவனுடைய மனைவி, மகள் ஆகிய நான்கு பேர்தான் நான் தீக்குளித்ததற்குக் காரணம்’ எனக் கூறியிருக்கிறார். அதனடிப்படையில் லால்குடி உதவி காவல் ஆய்வாளர் பொற்செழியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து லால்குடி போலீஸார் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

என்ன நடந்ததென விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்னையில் ராஜாவின் மகனைச் சிலர் சேர்ந்து கொலைசெய்தனர். இதற்கிடையே 2021-ம் ஆண்டு சொத்துப் பிரச்னையால் முத்து என்பவருடன் ராஜா அடிதடியில் ஈடுபட, சிறைக் காவலராக இருந்த அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே ராஜா கடும் மனஉளைச்சலில்தான் இருந்து வந்திருக்கிறார். இப்படியான நிலையில், ராஜாவுக்கும் அவரின் தம்பி நிர்மலுக்குமிடையே அடிக்கடி சொத்துப் பிரச்னை நடந்து வந்திருக்கிறது. அப்படி சமீபத்தில் நடந்த பிரச்னையின்போது, ‘என்மீது தவறான நோக்கத்தில் கைவைத்தார். மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி தொந்தரவு கொடுத்தார்’ என ராஜாமீது அவர் தம்பி மகள் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த எஸ்.ஐ பொற்செழியன், ராஜாவைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். ராஜா தரப்பின் விளக்கத்தை அவர் காது கொடுத்தே கேட்கவில்லை.

லால்குடி காவல் நிலையம்

இதெல்லாம் ராஜாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த அதிருப்தியாலும் விரக்தியாலுமே அவர் தீக்குளித்திருக்கிறார். எஸ்.ஐ பொற்செழியன் ராஜாவை எப்படி நடத்தினார் என்ற உண்மையை, சக காவலர்களே உயரதிகாரிகளிடம் கொட்டியிருக்கின்றனர். அதனடிப்படையில் முதற்கட்டமாக எஸ்.ஐ பொற்செழியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ராஜா கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருக்கும்” என்றனர்.



source https://www.vikatan.com/crime/suspended-police-man-commits-suicide-infront-of-a-police-station-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக