கிரிமினல்கள் போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகள் வாங்கி அதனை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போலி ஆவணங்களை கொடுத்து சிம் கார்டுகள் வாங்குவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்படுகிறது. சமீபத்தில் மும்பையில் கால் சென்டர் ஒன்று சட்டவிரோதமாக இயங்கி வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். அவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு வாங்குபவர்களுக்கு எதிராக மும்பை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் மும்பை மலபார் ஹில் போலீஸார் கோவண்டியை சேர்ந்த அப்துல் ஹகிம் என்பவரை கைது செய்தனர்.
அவர் வாடிக்கையாளர்கள் சிம் கார்டு வாங்க கொடுக்கும் ஆவணங்களில் தனது புகைப்படத்தை ஒட்டி 680-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி வைத்திருந்தார். தனது புகைப்படத்தில் லேசான மாற்றம் செய்து சிம் கார்டுகளை வாங்கி இருந்தார். இதே போல் நாலாசோபாரா பகுதியை சேர்ந்த விஷால் ஷிண்டே என்பவர் மற்றவர்களின் ஆதார் கார்டு மற்றும் தனது புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்து கொள்துள்ளார். இவர் இது வரை 387 சிம் கார்டுகளை வாங்கி இது போல் ஆக்டிவேட் செய்து அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இவர் தனியார் டெலிபோன் கம்பெனியில் சேல்ஸ் மெனாக இருக்கிறார்.
இது குறித்து மும்பை போலீஸ் இணை கமிஷனர் சத்ய நாராயணன் கூறுகையில், ``மும்பையின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் போலி ஆவணங்கள் மற்றும் 62 பேரின் மாறுபட்ட புகைப்படங்களை பயன்படுத்தி 8500 சிம் கார்டுகளை வாங்கி ஆக்டிவேட் செய்துள்ளனர். இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் தனது சொந்த புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் பயன்படுத்தி 650 சிம் கார்டுகளை வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை எங்களுக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் 62 பேரின் புகைப்படங்களை பயன்படுத்தி 8500 சிம்கார்டுகள் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2,198 சிம் கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் கிரிமினல்கள், கால் சென்டர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/crime/13-arrested-for-buying-8500-sim-cards-and-selling-them-to-criminals
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக