கடந்த ஜனவரியில் ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். திட்டமிட்டபடி கடந்த பிப்.27-ல் வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடந்தது.
இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தன்னை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,233 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதையடுத்து திமுக-வினரும், காங்கிரஸ் கட்சினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் அதிமுக பணநாயகம் வென்று விட்டது என தெரிவித்திருக்கிறது. காங்கிரஸின் இந்த கவனிக்கதக்க வெற்றி எப்படி சாத்தியமானது என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை விலைக்கு வங்கியிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பத்துக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்திருக்கிறார்கள். பெரிய குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் வரை சென்றிருக்கிறது. மறுபுறம் அதிமுகவை பொறுத்தவரை ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அதோடு முடித்துக்கொண்டார்கள். இதேபோல் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,000 வரை கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் திமுகவில் பூத் கமிட்டி உறுப்பினர் முதல் பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10,000 வரை வழங்கப்பட்டிருக்கிறது எனத் தகவல்கள் வருகிறது. இதுதவிர மூக்குத்தி, தங்க காசு, வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி விளக்கு என பல்வேறு பொருள்களும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு செய்யவில்லை என்றாலும் கூட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான் வெற்றி பெற்றிருப்பார். கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த போதும் 9,000 ஓட்டில் வெற்றி பெற்றிருந்தார்கள்.
தற்போது தேர்தலுக்கு பணம் வழங்கவில்லை என்றாலும் 10,000 ஓட்டில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் அதிமுகவின் பிரசாரமும், அவர்களுக்கு கிடைத்த இரட்டை இல்லை சின்னமும் ஆளும் கட்சிக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடைசி நாள் முதல் இறுதி நாள் வரை பணம் விநியோகம் செய்திருக்கிறார்கள்.
முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களும் களத்தில் இருந்து, இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தான் இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் அதிமுகவில் ஓபிஎஸ் இல்லாதது மற்றும் அமமுக தனியாக சென்றது போன்றவை அந்த கட்சிக்கு சறுக்கலை கொடுத்திருக்கிறது. இதுவரை திருமங்கலம் பார்முலாவை தான் சொல்வார்கள். தற்போது திமுகவினரே அதை உடைத்து ஈரோடு பார்முலாவை உருவாக்கியிருக்கிறார்கள்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா. "ஈரோடு கிழக்கில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி 9,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி. மேலும் வேட்பாளர் 46 வயதிலேயே காலமான நிலை காரணமாக ஏற்பட்ட அனுதாபம், கூட்டணிக்காக 64 பேர் கொண்ட குழுவை அமைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் வெற்றி சாத்தியமானது. அனைவரின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த பயன். 2024 தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் கொடுக்கக்கூடிய பாடத்துக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமைத்திருக்கிறது.
இது காங்கிரஸ் வெற்றி என்று சொல்வதை விட திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். தமிழக முதல்வரின் வியூகத்திற்கு கிடைத்த வெற்றி. ஒரு கூட்டணி கட்சியை எப்படி தோழமையோடு நடத்த வேண்டும் என்பதற்கு இந்த தேர்தல் நல்ல உதாரணம்.
தனது தோழமை கட்சிக்கு வழங்கப்பட்ட தொகுதியை அபகரித்து அதிமுக போட்டியிட்டதற்கு மக்கள் நல்ல பாடத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் பணம் பெரிய அளவில் கைப்பற்றப்படவில்லை. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் தான் அதிமுகவுக்கு ஆதரவாக சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வருமான வரித்துறை போன்ற அனைத்தையும் கையில் வைத்திருக்கும் பாஜகவை கூட்டணியில் வைத்திருக்கும் அதிமுக பணநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசுகிறார்கள்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/elangovan-won-the-erode-by-election-in-huge-margin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக