Ad

ஞாயிறு, 5 மார்ச், 2023

``இது உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி என எண்ண வேண்டாம்” - இந்து சமய மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய மாசி கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு தொடங்கியது. இந்து சமய மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை ஆன்மிக மாநாடாக நடத்தும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதைஅதைத் தொடர்ந்து இந்து இயக்கங்கள் போராட்டங்களை நடத்தின. தொடர்ச்சியாக இந்து அமைப்புகளுடன் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சிறு மாற்றங்களுடன் ஹைந்தவ சேவாசங்கம் மாநாட்டை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹைந்தவ சேவா சங்கம் புதிதாக அச்சடித்த அழைப்பிதழில் சிறப்புரை பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. அமைச்சர் சேகர் பாபு இந்து சமய மாநாடு தொடக்க விழாவுக்கு வந்திருந்தார். உடன் தி.மு.க முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் வந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய ஹைந்தவ சேவா சங்க துணைத் தலைவர் ஸ்ரீபத்மநாபன், "இந்து சமய மாநாட்டுக்கு அமைச்சர்கள் பெயரை போடுவது வழக்கம். ஆனால், யாரும் வருவது கிடையாது. மண்டைக்காடு பகவதி அம்மனின் அருளால் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் இந்த மாநாட்டுக்கு வந்திருப்பது பெருமையாக இருக்கிறது" என்றார்.

மண்டைக்காடு இந்து சமய மாநாட்டில்

ஹைந்தவ சேவா சங்கம் நடத்திய இந்து சமய மாநாடில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "இந்து சமய மாநாட்டில் பங்கேற்பதில் பெருமைகொள்கிறேன். பிறப்பால் மனிதர் அனைவரும் ஒன்றே. அவரவர் விரும்புகின்ற மதங்களை அவரவர் சுதந்திரமாக வழிபடுவதற்கு எந்த நாட்டிலே அனுமதி இருக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான சுதந்திரம் அடைந்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரவர்கள் விரும்புகின்ற மத வழிபாடுகளில், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, எந்தவித இடையூறும் இல்லாமல், அவர்கள் மத வழிபாடுகளில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக தமிழ்நாடு இருக்கிறது.

`யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற வார்த்தைக்கு இணங்க, இன்றைய தமிழக முதல் அமைச்சர் அனைவரையும் ஒன்றாக நேசிப்பதால்தான் இதுபோன்ற மாநாடுகள் முழு சுதந்திரத்தோடு, எந்தவிதமான தடையும் இல்லாமல், பாகுபாடு இல்லாமல், வேற்றுமை இல்லாமல் அமைதியாக நடக்கிறது. அதற்கு இந்த ஆட்சி ஒருகாரணம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற முதல் அமைச்சர் என என்னை கூறினார்கள். நீங்கள் எப்போது அழைத்தாலும் நாங்கள் வருவதற்கும், உங்களோடு இருப்பதற்கும் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.

மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம்

உங்களை நாங்கள் வேறுபடுத்தி பார்ப்பதே கிடையாது. எங்களில் நீங்களும் ஒருவர். என்ன ஒரு சிறிய பிரச்னை, உங்கள் கோரிக்கைகளை எங்களிடம் நேரடியாக தெரிவியுங்கள். எங்கள் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி அனைவருக்கும் உண்டான ஆட்சி. உங்கள் பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதுதன் எங்கள் முதல் வேலை என்பதை இந்த தருவாயில் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எண்ணுவதெல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறும். உங்களுக்கு எதிர்ப்பான ஆட்சி இந்த ஆட்சி என எண்ண வேண்டாம். உங்களோடு நாங்கள் இருப்போம். எங்களுடன் நீங்கள் இருங்கள். இந்த நிகழ்வு சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவனும் இந்த ஆட்சியும் துணையிருக்கும்" என்றார்.

இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில், "நான் சின்னவயதில் கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது நடக்கமுடியாமல் அவதிபட்டேன். ஒருவர் சொன்னதால், ஒரு மண்டலம் கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசித்தபிறகு என் உடல் சரியானது. வாழ்கையில் ஒரு திருப்புமுனை கன்னியாகுமரியில் ஏற்பட்டது. சமயம் என்பது சமைத்தல் என்பதில் இருந்து வந்தது. சமைத்தல் என்பது பக்குவப்படுத்துதல் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சமய உணர்வு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை. நமக்கு பாரத தாய், தமிழ்த்தாய், பெற்றதாய், பூமிதாய், பசுத்தாய் என ஐந்து தாய்கள் இருக்கிறார்கள். நம் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள் இல்லை. ஆனால் அவர்கள் கட்டிய கோயில்கள் உள்ளன. தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு நிறைய கோயில்கள் இருக்க நம் மன்னர்கள்தான் காரணம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/minister-sekar-babu-speech-in-mandaikadu-temple-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக