Ad

ஞாயிறு, 5 மார்ச், 2023

Doctor Vikatan: தைராய்டு இல்லாதவர்களுக்கும் முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஏற்றுக் கொள்ளாதது ஏன்?

Doctor Vikatan: எனக்கு தைராய்டு பாதிப்பு இல்லை. நீரிழிவு, கொலஸ்ட்ரால் என எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனாலும் முட்டைகோஸ், காலிஃபிளவர் சாப்பிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை. தைராய்டு உள்ளவர்கள்தானே இந்தக் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள்.... தைராய்டு இல்லாத எனக்கு ஏன் இவை ஏற்றுக்கொள்வதில்லை?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை `க்ரூசிஃபெரஸ்' (Cruciferous vegetables) காய்கறிகள் என்று சொல்வார்கள். சிலருடைய உடல்வாகின்படி, இந்த வகை காய்கறிகளை செரிக்கும் தன்மை அவர்களது குடலுக்கு சரியாக இருக்காது.

இந்தக் காய்களை நீங்கள் எப்படிச் சமைக்கிறீர்கள் என்பதும் முக்கியம். சிலர் இவற்றை தண்ணீர் தெளித்து மூடிவைத்து, பிறகு பொரியல் போல தாளித்துச் சாப்பிடுவார்கள். அப்படிச் செய்யும்போது அது முழுமையாக வெந்திருக்காது. ஃப்ரைடு ரைஸ் சமைக்கும்போதும் இப்படித்தான் செய்வார்கள். அதில் சேர்க்கப்படும் காய்கறிகள் 80 சதவிகிதம் தான் வெந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அந்தக் காய்கள் செரிமானமாவதில் சிக்கல் இருக்கும்.

இதைத் தவிர்க்க காய்களை பிரஷர் குக் செய்து கூட்டாகவோ, கிரேவியாகவோ செய்து சாப்பிடலாம். காலிஃப்ளவரை கோபி மஞ்சூரியனாக சாப்பிடாமல், நன்கு வேகவைத்துச் சமைத்துச் சாப்பிடலாம். எனவே இந்தப் பிரச்னையை தைராய்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்காதீர்கள். இது முழுக்க முழுக்க உங்கள் செரிமான சக்தியோடு தொடர்புடையது.

சிலருக்கு காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் வாயுத் தொந்தரவு வரும். அதைத் தவிர்க்க இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்தக் காய்களை முழுக்க தவிர்த்துவிட்டு, பிறகு நன்கு வேகவைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியும் அவை உங்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவற்றை நீங்கள் அறவே தவிர்ப்பதுதான் சிறந்தது.

தைராய்டு

உங்களுடைய குடல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். மலச்சிக்கல் போன்ற பிரச்னை உள்ளதா என்று பாருங்கள். பால் ஒவ்வாமை இருக்கிறதா என்றும் பாருங்கள். எனவே நீங்களாக எந்த முடிவுக்கும் வராமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-why-is-cabbage-and-cauliflower-not-acceptable-for-hypothyroid-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக