Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

நாமக்கல்: பெண் குழந்தை மர்ம மரணம்! -அவசரமாக புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனை செய்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 - வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், தம்பதியினர் அந்த குழந்தையை கொன்று அவசரமாக புதைத்தார்களா என்று போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நாமக்கல்

Also Read: நாமக்கல்: 14 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடூரம்! - உறவினர் உள்ளிட்ட 11 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் உள்ள சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா. கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கும், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது: 27) என்ற பெண்ணுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்தனர். உறவினர்களும் அதையே வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கஸ்தூரி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடந்த 4 - ம் தேதி பிரசவத்திற்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறு நாளான 5 - ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து முறையாக டிஸ்சார்ஜ் ஆகாமல், குழந்தையை எடுத்துக்கொண்டு பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.

குழந்தை உடல் பரிசோதனை

இந்நிலையில், கஸ்தூரிக்கு 3 - வதாகப் பிறந்த பெண் குழந்தை திடீரென நேற்று முன்தினம் இறந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து அக்குழந்தையின் சடலம் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், அந்த குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் சொல்லியுள்ளனர். அதனால், இதுகுறித்துத் தகவல் அறிந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லதா, கஸ்தூரியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று, விசாரணை நடத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள், 'குழந்தை இயற்கையாக இறந்தது' என்று சொல்லியுள்ளனர். ஆனால், விசாரணையில் பெண் குழந்தையை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக, மருத்துவ அலுவலர் லதா, எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ் முன்னிலையில், காவல்துறையினர் பாதுகாப்புடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு, மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாகத் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தையின் மரணத்தில் ஏற்பட்டிருக்கும் சந்தேகம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/police-doubt-in-namakkal-child-dead

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக