`சமூக இடைவெளி கடைப்பிடிப்போம்...
கொரோனா அரக்கனை விரட்டுவோம்'
`தண்ணீரைச் சேமிப்போம்...
உயிர்களைக் காப்போம்!'
`அனைவரும் வாக்களிப்போம்..
ஜனநாயகக் கடமையாற்றுவோம்!'
பொதுநலன் கருதி வெளியிடப்படும் இதுபோன்ற வாசகங்கள் எல்லாம், மணற்சிற்பங்களாகவும் ஆங்காங்கே பளிரீடுகின்றன. அதிலும் சமீபகாலமாக இந்த மணல் சிற்பங்கள் பற்றிய பேச்சுகள் அதிகமாகவே இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி வரைக்கும்கூட மணற்சிற்பத்தில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆம், எந்த ஒரு விஷயத்திலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி மணற்சிற்பங்களை உருவாக்குவது அதிகரித்துவருகிறது. கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் அதிகம் வருவதால், கடற்கரை மணலைப் பயன்படுத்தி இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் எதிர்பார்ப்பது போலவே, மக்களும் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால், எந்தவொரு வினைக்கும் எதிர்வினையுண்டு என்கிற வகையில், இத்தகைய மணற்சிற்பங்களின் பின்விளைவாக கடற்கரைப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்கிற கவலைக்குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன.
மணற்சிற்பம் என்பது உலக அளவில் பிரபலமான விஷயமே. பத்மஸ்ரீ விருது பெற்ற மணற் சிற்பக் கலைஞரான ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், இந்திய அளவில் மணற்சிற்பங்களை முன்னெடுத்து வருகிறார். நாடு முழுக்க பல இடங்களுக்குப் பயணித்தும் இத்தகைய சிற்பங்களை உருவாக்கி, மக்களை ஈர்த்து வருகிறார். குறிப்பாக, தன்னுடைய மாநிலமான.
ஒடிசாவின் புகழ்பெற்ற ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தளங்களான பூரி மற்றும் கோனார்க் கடற்கரையில் இப்படி மணற் சிற்பங்களை உருவாக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதேபோல சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை, புதுச்சேரி கடற்கரை உள்பட இந்தியா முழுக்கவே கடற்கரை பிரதேசங்களில் அவ்வப்போது மணற்சிற்பங்களை பல்வேறு சிற்பக்கலைஞர்களும் உருவாக்கி வருகின்றனர். சரி, இப்படி மணற்சிற்பங்களை உருவாக்குவதால் கடற்கரையின் சுற்றுச்சூழல் எப்படி பாதிக்கப்படும்?
தமிழகத்தைச் சேர்ந்த `மண்புழு விஞ்ஞானி’ பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயிலிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, ``பல ஆண்டுகளாகவே மணற்சிற்பங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது, மிகப்பெரிய கலையாக உருவெடுத்திருக்கிறது. ஐஸ் கட்டியை வைத்து சிற்பங்களை உருவாக்குவதுபோலவே மணல் சிற்பங்களும் உலக அளவில் பிரபலமே. இந்நிலையில், மணலை வைத்து வண்ணச்சிற்பங்களை உருவாக்குவதற்காக ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால், சுற்றுச்சூழல் ஆபத்து என்கிற பேச்சுகள் இப்போதுதான் மெதுவாக எழுந்துள்ளன. உண்மைதான், இயற்கையான மணலை வைத்து சிற்பங்ளை உருவாக்கும்போது பிரச்னை இருக்காது.
ஆனால், ரசாயன பொருள்களையும், வண்ணங்களையும் பயன்படுத்தும்போது அவற்றிலிருக்கும் ரசாயனங்கள், கடற்கரை மணலில் கலந்து அங்குள்ள நுண்ணுயிரிகளையும் உயிரினங்களையும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், இயற்கையான வண்ணங்களைக் கலந்து செய்யும்போது பிரச்னை வராது. எனவே, மணல் சிற்பங்களை உருவாக்கும் கலைஞர்கள், சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு ரசாயனங்களை மணலில் கலக்காமல் சிற்பங்களை உருவாக்க வேண்டுகிறோம்.
மணற்சிற்பங்கள்தான் என்றில்லை, பல்வேறு நிகழ்வுகளுக்காக உருவாக்கப்படும் சிற்பங்கள், அலங்கார தூண்கள், வளைவுகள் என்று பலவும் தற்போது ரசாயன கலவை மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி செய்வது அதிகரித்தே வருகிறது. வேலை விரைவாக முடியும் என்பதற்காக இப்படி கண்மூடித்தனமாக அனைத்திலும் ரசாயனங்களைக் கலக்கின்றனர். இது ஆங்காங்கே இருக்கும் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றையும் உயிரினங்களையும் பாதிக்கவே செய்யும். ஏன், உணவுச் சங்கிலியின் வாயிலாக மனிதர்களையும்கூட பாதிக்கவே செய்யும். எனவே, உண்மையை உணர்ந்து, ரசாயன பயன்பாடுகளை எல்லா இடங்களிலும் முடிந்த வரையோ... முற்றாகவோ தவிர்ப்பதுதான் சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் நல்லது'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்.
சிற்பம் என்றாலே மாமல்லபுரத்தை விட்டுவிட்டு யோசிக்க முடியாது. அங்கேயும் மல்லைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி மணற்சிற்பங்களை உருவாக்கி வருகின்றனர். இதைப்பற்றி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கீர்த்திவர்மன் பெருந்தச்சனிடம் கேட்டபோது, ``ஈர மணலைப் பயன்படுத்தியே மணற்சிற்பத்தைச் செய்துவிட முடியும். ஆனால், சில மணி நேரங்களிலேயே காய்ந்து மணல் சரிய ஆரம்பித்துவிடும். அதனால், மணற்சிற்பத்தைச் செய்து முடித்தவுடன் ஏதாவது ஒரு ஒட்டும்திரவத்தைத் தண்ணீருடன் கலந்து ஸ்ப்ரேயர் மூலம் சிற்பத்தின் மீது தெளிக்கிறோம். அது, முட்டை ஓடுபோல இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். இந்த அளவில் ஒட்டும்திரவத்தைப் பயன்படுத்தும்போது பெரிதாக பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், மணல் சிற்பங்களுக்காக ரசாயன வண்ணங்களைக் கலக்கின்றனர். அதுதான் கடற்கரையோர நுண்ணுயிர்களைப் பாதிக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் 133 அடியில் திருவள்ளுவர் சிற்பத்தை உருவாக்கி உலக சாதனை படைத்தோம். ஆனால், அதில் கொஞ்சம்கூட வண்ணங்களைப் பயன்படுத்தவில்லை. ஒட்டும்திரவத்தைக்கூட அதிகளவில் பயன்படுத்தவில்லை.
அதனால் அந்த சிற்பம் அவ்வப்போது உலர்ந்து சரிந்தது. நாங்கள் உடனிருந்து சரிசெய்துகொண்டே இருந்தோம். மணற்சிற்பம் பெரும் கலையாக உருவெடுத்துள்ளதுடன் மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பெரியளவில் பயன்படுகிறது. ஆகையால், மொத்தமாக மணற்சிற்பங்களே கூடாது என்று சொல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு வகுக்கலாம். மாசுக் கட்டுப்பாடு வாரியமும் இதில் தலையிட்டு, இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம். எல்லாவற்றையும்விட, இத்தகைய மணற்சிற்பங்களைச் செய்பவர்கள் அனைவருமே சுற்றுச்சூழல் அக்கறையுடன் இருந்தாலே போதும்'' என்று எதார்த்தத்தைப் புரியவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வெங்கடாச்சலத்திடம் பேசினோம், நாம் சொன்ன விஷயங்களை கூர்ந்து கேட்டுக்கொண்ட அவர், ``நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் தமிழகத்தில் மணற் சிற்பங்களில் ரசாயனங்கள் கலக்கப்படுவதில்லை. இதுவரை அப்படியான புகாரும் எங்களுக்கு வந்தது கிடையாது.
தண்ணீர் மாசுபாட்டைக் குறைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நீங்கள் சொல்வதைப்போல தமிழகத்தில் எங்காவது நடந்தால் நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுப்போம். இப்படியான சம்பவங்கள் நடக்கும்போது உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளிக்கலாம்" என்றார்.
மணற்சிற்பம் என்பது தற்போதுதான் பரவ ஆரம்பித்துள்ளது. ஆனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாமே ஆரம்பக்கட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன. கடைசியில், தலைக்கு மேலே வெள்ளம் என்கிற சூழலில், அரசாங்கத்தாலும் எதுவுமே செய்யமுடிவதில்லை. இதற்கு உதாரணமாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் கொண்டுசெல்லப்படும் விநாயர்களைச் சொல்லலாம். கிராமப்புறங்கள் தொடங்கி மாநகரங்கள் வரை ரசாயனப்பூச்சு மற்றும் ரசாயன பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது தாறுமாறாக நடக்கிறது. நீதிமன்றமே தலையிட்டு உத்தரவிட்டபிறகும் அரசாங்கத்தால் தடுக்க முடியாத சூழலே இருக்கிறது. ஆன்மிக நம்பிக்கையில் ஆரம்பித்து அரசியல் வரை இதன்பின்னணியில் வலைப்பின்னலாக நின்றுகொண்டிருக்கிறது. எனவே, மணற்சிற்பம் போன்றவற்றில் ஆரம்பக் கட்டத்திலேயே அரசாங்கமும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கவனமாக இருப்பது நல்லது.
கடல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் தாய்மடி. நுண்ணுயிரிகள் தொடங்கி அத்தனைக்கும் உயிராதாரம். அந்தத் தாய்மடியை அறுத்துப் பார்க்கும் முயற்சிகளை பிள்ளைகளாகிய நாம் ஒருபோதும் செய்யாதிருப்போம்!
source https://www.vikatan.com/news/environment/environmental-concerns-over-chemicals-used-in-sand-art
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக