“வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்... முக்கால் மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று தகவல் அனுப்பினார் கழுகார். சொன்னபடியே ஆஜரானவர், “மாஸ்க் அணிந்து, டெம்பரேச்சர் செக் செய்துகொண்டு, சமூக இடைவெளிவிட்டு நின்று வாக்களிப்பது இதுதான் முதன்முறை. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் சரிவரச் செயல்படாததால், வாக்குப்பதிவு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாகவே தொடங்கியிருக்கிறது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.
“அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளெல்லாம் எத்தனை இடங்களைப் பிடிப்போம் என்கிற பதைபதைப்பில் இருக்கின்றன. ஆனால், தி.மு.க-வோ அமைச்சரவையில் யாருக்கெல்லாம் இடமளிக்கலாம், எந்தெந்த அதிகாரிகளை எந்தெந்தத் துறைகளுக்கு நியமிக்கலாம் என்று பட்டியல் போடத் தொடங்கி விட்டது. ஏற்கெனவே தயாராகிவிட்ட அமைச்சர்கள் பட்டியல், கிச்சன் கேபினெட்டின் அஞ்சறைப் பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக் கிறது. அதில் இளையோர்கள் சிலர் இடம்பெற்றிருப்பதால், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்குக் கடுக்காய் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல். அஞ்சறைப் பெட்டிக்குள் இருப்பதை மோப்பம் பிடித்துவிட சீனியர்கள் பலரும் முட்டி மோதுவதால் இன்னும் ஒரு மாதத்துக்கு கிச்சன் கதவுகளைத் திறக்கக் கூடாது என்பது அம்மையாரின் கண்டிப்பான உத்தரவாம். அதேபோல, திறமையான மற்றும் நேர்மையான அதிகாரிகளை முக்கியப் பொறுப்புகளுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் லிஸ்ட் தயாராகிக்கொண்டிருக்கிறது.”
“யாரெல்லாம் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்களாம்?”
“உதயச்சந்திரன், இறையன்பு, ராஜேஷ் லக்கானி, பி.மகேஸ்வரி, வினய், நாகராஜன், வள்ளலார், மீனா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். இவர்களில் பலரும் அ.தி.மு.க தலைமையால் டம்மியாக்கப்பட்டவர்கள். பட்டியல் தயாராவதைக் கேள்விப்பட்ட தி.மு.க சார்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரும், எப்படியாவது பவர்ஃபுல் பதவியை வாங்கிவிட வேண்டும் என்று இப்போதே தூதுவிட்டுவருகிறார்கள்.”
“ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது ஆளுநரிடம் தி.மு.க புகார் அளித்திருக்கிறதே?”
“பாஷ்யம் நிறுவனத்தின் மீது புகார் அளித்திருப்பதைத்தானே கூறுகிறீர்கள்... துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்களுக்கு நெருக்கமானதாகக் கூறப்படும் பாஷ்யம் நிறுவனத்தின் மீது தி.மு.க புகார் அளித்துள்ள பின்னணியில் அரசியல் விளையாட்டும் உள்ளது. தற்போது கோயம்பேடு அருகே இந்த நிறுவனம் கட்டிவரும் பிரமாண்டமான கட்டுமானத்துக்கு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே திட்டங்கள் தயார் செய்யப்பட்டன. தற்போது பாஷ்யம் கட்டிவரும் இடம் பிரபல தனியார் ஹோட்டலுக்குச் சொந்தமானது. அந்த இடத்துடன் அரசு புறம்போக்கு நிலமும் சேர்ந்திருந்தது. அரசு புறம்போக்கு நிலத்தைக் கையகப்படுத்த, பாஷ்யம் தரப்பில் சில காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் துறையில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் இதற்கு ஒத்துவரவில்லை. அவரைத் தூக்கியடித்துவிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரியைக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு நிலத்தைக் கையகப்படுத்தியிருக்கிறது.”
“அடேங்கப்பா...”
“இன்னும் இருக்கிறது கேளும்... கோயம்பேடு கட்டுமானத்தில் கேரள நிறுவனத்தின் சார்பில் ஷாப்பிங் மால் ஒன்று கட்டவும் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திலும் விதிமீறல்கள் இருந்ததால், அன்றைய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக பொறுப்புவகித்த ராஜேஷ் லக்கானி கையெழுத்திட மறுத்துவிட்டார். அவரையும் டம்மியான துறைக்கு மாற்றிவிட்டார்கள். இப்படி அரசுத்துறையில் கடந்த மூன்றாண்டுகளில் பாஷ்யம் நிறுவனத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்துள்ளது. இவையெல்லாம் தி.மு.க தரப்புக்கு ஏற்கெனவே தெரியாமல் இல்லை... ஆனால், சமீபத்தில் தி.மு.க தரப்புக்கு தொடர்புடைய ஒரு கட்டட நிறுவனத்தில் ரெய்டு நடக்க பாஷ்யம் நிறுவனமும் ஒரு காரணம் என்று தகவல் கசிந்துள்ளது. டெல்லியில் பணியாற்றும் ஒரு தமிழக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் துணையுடன் அந்தக் கட்டட நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தி, தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க-வுக்கு கரன்சி வருவதை முடக்கியது ஆளும்தரப்பு. இதனால், கடுப்பான தி.மு.க தலைமை இப்போது பாஷ்யத்துக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளது.”
“ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்துமாறு அ.தி.மு.க மனு கொடுத்ததே?”
“கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுத்துள்ளார்கள். ஒருகட்டத்தில் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகே அ.தி.மு.க நேரடியாகத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டு, ‘மனுவை டெல்லிக்கு அனுப்புங்கள்... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்களாம். ஆனால் டெல்லி இதில் ஆர்வம் காட்டவில்லையாம். அதன் பிறகே தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்து ‘234 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும்’ என்று சொன்னார். ஆனால், கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்குத் தொகுதியில் மட்டும் எதிர்காலத்தில் ஏதாவது சட்டச் சிக்கல் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். அங்கு காவலர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் சி.பி.ஐ. வசம் செல்வதால், இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.”
“பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா கடுப்பில் இருக்கிறாராமே?”
“ஆமாம்... பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், நட்டா என பெரும் படையே வந்து சென்றுவிட்டது. இறுதியாக வந்த தேசியத் தலைவர் நட்டா தமிழக பா.ஜ.க-வினரை அழைத்து, ‘பல இடங்களில் எதிர்பார்த்த கூட்டம் சேர்க்கவில்லை... பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் பூத் பணிகளைக்கூடச் சரிவர செய்யவில்லை. கோவைக்கு யோகி ஆதித்யநாத் வந்தபோது, கலவரத்தை எப்படி அனுமதித்தீர்கள்... இப்படி இருந்தால், தமிழகத்தில் கட்சி எப்படி வளரும்?’ என்று வறுத்தெடுத்துவிட்டாராம்.
“முதல்வர் பழனிசாமிக்கு சுனில் எழுதியதாக மெயில் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறதே?”
“போலியானவை என்கிறார்கள். ‘கான்ஃபிடன்ஷியல்’ என்ற தலைப்பில், ‘அ.தி.மு.க-வை வெற்றிபெறவைக்கப் பாடுபட்டோம். ஆனால், எதுவும் செல்லுபடியாகவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சுனில் வருத்தம் தெரிவிப்பது போன்று அந்த மெயிலில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சுனில் தரப்பில் மட்டுமல்ல... ஐபேக் தரப்பிலிருந்தும் ஆனந்த் திவாரி என்பவர் ஸ்டாலினுக்கு அனுப்பியதாக ஒரு மெயில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில், ‘நாம் தேர்தல் எனும் போரில் தோல்வியடையப்போகிறோம். ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் நிலைமை மாறிவிட்டது’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவும் போலிதான். இங்கு மட்டுமல்ல... மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாந்த் கிஷோர்தான் தேர்தல் ஆலோசகர். அவர் மம்தாவிடம் தோல்வியை ஒப்புக்கொண்டதுபோல மெயில் அனுப்பியதாகவும் தகவல் கிளம்பியது. இவையெல்லாமே தேர்தல் நெருக்கத்தில் எதிரெதிர் தரப்புகள் கிளப்பிவிட்ட வதந்திகள்தான் என்கிறார்கள்.”
“ம்ம்... வேறு செய்திகள்?”
“எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு அன்று பிரச்னை வெடித்திருக்கிறது. தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை அ.தி.மு.க-வினர் சிலர் தாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ‘வேட்பாளரின் தலையை வெட்டுவேன் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்... போலீஸ் வேடிக்கை பார்க்கிறது, போலீஸ் அராஜகம் ஒழிக...’ என்று அங்கு தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினார்கள்.”
“சண்டை இல்லாத தேர்தலா? அது சரி... அரசியல் பேசாமல் ஒதுங்கியிருந்த விஜய், அஜித் இருவரும் வாக்களிக்கச் சென்றதில் பல குறியீடுகளை நெட்டிசன்கள் கண்டுபிடித்திருக்கிறார்களே!”
“ஆமாம். முதலில் வைரலானது அஜித்தின் மாஸ்க். சிவப்பு எலாஸ்டிக்குடன் கறுப்பு மாஸ்கில் அவர் வந்தது ஒரு குறியீடு என்று தி.மு.க-வை சப்போர்ட் செய்யும் அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்து விஜய் சைக்கிளில் வந்ததிலும் பரபரப்பு பற்றிக்கொண்டது. ‘பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் சைக்கிளில் வந்தார்’ என்றும், ‘கறுப்பு சிவப்பு சைக்கிளில் வந்தது ஒரு குறியீடு’ என்றெல்லாம் ஹேஷ்யங்கள் பரவின. ஏப்ரல் 4-ம் தேதி அன்று தனியார் டி.வி-யில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஸ்டாலினிடம் ஒரு மாணவி, ‘சினிமா பார்ப்பீர்களா, யார் படங்களையெல்லாம் பார்ப்பீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ஸ்டாலின், ‘ரஜினி, விஜய், அஜித் படங்களைப் பார்ப்பேன்’ என்று பதிலளித்தார். ‘அதற்கான ரியாக்ஷனா இது!’ என்றும் ஒருபக்கம் டிஸ்கஷன் ஓடிக்கொண்டிருக்கிறது” என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-april-11th-2021-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக