மகாராஷ்டிராவில் தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதோடு சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேடர்கள் கூட போதிய அளவில் இல்லாமல் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்றின் அளவு குறையவில்லை. எனவே மீண்டும் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்த மாநில அரசு பரிசீலித்து வந்தது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
இதனால் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் மக்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்தனர். இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய் கிழமை இரவு ஆற்றிய உரையில் பல முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். `உத்தவ் தாகரே மீண்டும் பொது முடக்கத்தைதான் அறிவிப்பார்’ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், `பொது முடக்கம் அமல்படுத்தப்படாது’ என்று தெரிவித்தார். ஆனால் பொதுமுடக்கத்தில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
Also Read: மகாராஷ்டிரா: மீண்டும் லாக்டெளன் அச்சம்... மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள்
``புதன் கிழமை(14ம் தேதி) இரவு 8 மணியிலிருந்து மே மாதம் ஒன்றாம் தேதி வரை இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த தடை உத்தரவு காலத்தில் தேவையில்லாமல் பொது மக்கள் வெளியில் வரக்கூடாது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோச்சிங் கிளாஸ்கள், சலூன் கடைகள், ஸ்பா, அழகுநிலையங்கள் போன்றவை மே ஒன்றாம் தேதி காலை 7 மணி வரை அடைக்கப்பட்டு இருக்கும். மாநில அரசு சார்பில், இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு 3 கிலோ கோதுமையும் இரண்டு கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும்.
சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம், பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்கள் அடைக்கப்பட்டு இருக்கும். சினிமா, டிவி சீரியல்கள் மற்றும் விளம்பர படப்பிடிப்புகளும் வரும் ஒன்றாம் தேதி வரை தடை செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர எஞ்சிய அனைத்து கடைகளும் அடைக்கப்படும். ரயில் மற்றும் பஸ் போன்ற பொது போக்குவரத்து தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனால் அதில் அத்தியாவசியப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் முழுமையாக அடைக்கப்படும். வீட்டிற்கு டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.
தற்போது முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் சமீபத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் கொரோனாவை எதிர்த்து போராட அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் முன் வரவேண்டும். அண்டை மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர விமானப்படை விமானங்களை கொடுத்து உதவும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொள்வேன்.
வழக்கமாக மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித்தான் வருகிறோம். ஆனாலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தேதிகளை தள்ளி வைத்துள்ளோம். கொரோனா நோயிக்கான சோதனையை அதிகரித்து படுக்கைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து இருக்கிறோம். கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டுவிடலாம் என்று நம்பினோம். ஆனால் மீண்டும் அதனை எதிர்த்து போராடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். மாநில அரசின் இம்முடிவால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Also Read: கொரோனா: `புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்!’ - 10, 12-ம் வகுப்பு தேர்வுகளைத் தள்ளிவைத்த மகாராஷ்டிரா
source https://www.vikatan.com/government-and-politics/healthy/strict-restrictions-till-may-1-says-chief-minister-uttav-thackeray
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக