மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேடர்கள், கொரோனாவுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில் மும்பை அருகில் உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும் கொரோனா உட்பட பல்வேறு நோய்களுக்காக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இரவில் திடீரென ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சில மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனை நிர்வாகம் அவசரமாக வேறு மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்தது.
ஆனாலும் நோயாளிகளை காப்பாற்ற முடியவில்லை. நாலாசோபாரா பகுதியில் இந்த மருத்துவமனைதான் பெரியது ஆகும். எனவே அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்தும் உயிருக்கு போராடும் நோயாளிகள் விநாயக் மருத்துவனையில் கொண்டு வந்து சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று காலையில் தான் நோயாளிகள் இறந்தது குறித்து உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
உயிரிழந்த நோயாளி ஒருவரின் உறவினர் இது குறித்து கூறுகையில், `குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தான் விநாயக் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் மறைத்துவிட்டது’ எனத் தெரிவித்தார். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று வெளியான செய்தி வதந்தி என்று போலீஸார் தெரிவித்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போதிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர்களும், `நோயாளிகள் வயது மூப்பு மற்றும் இதர உடல் நலக்கோளாறு காரணமாகவே இறந்துள்ளனர். ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை’ என்று தெரிவித்தனர். அருகில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் இந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நாலாசோபாரா, விரார், வசாய் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவுவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்திருப்பதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகி கிரித்சோமையா தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் 9 நோயாளிகள் இறந்திருப்பதாகவும், அவர்களை அரசு கொலை செய்திருப்பதாகவும் கிரித் சோமையா குற்றம்சாட்டியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/9-patients-die-due-to-lack-of-oxygen-in-mumbai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக