Ad

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கரூர்: வாக்களிக்க வந்த 91 வயது மூதாட்டி... கைகூப்பி வணங்கிய மாவட்ட ஆட்சியர்!

தள்ளாத வயதிலும் தன் ஜனநாயகக் கடமையான வாக்களிக்க வேண்டி, வாக்குச் சாவடிக்கு வந்த 91 வயது கரூர் மூதாட்டிக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்மில் சிலர், `ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை' என்று வாக்களிக்க வராமல் பாய்காட் செய்வதும், `என்னை பொறுத்தவரைக்கும் இது ஒரு விடுமுறை நாள்' என்று ஜனநாயகப் பொறுப்பே இல்லாமல் ஓட்டளிப்பதைத் தவிர்ப்பது என்றும் செயல்படுகிறோம். ஆனால், கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இனாம் கரூர் எஸ்.பி காலனியைச் சேர்ந்த 91 வயது மூதாட்டி ஞானாம்பாள், இந்தத் தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் மற்றவர்களின் உதவியோடு வாக்களிக்க வந்து, மாவட்ட ஆட்சியர், மக்கள் என அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார்.

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு பகுதியில் எக்குவடாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரசாந்த் மு வடநேரே வாக்குப்பதிவு குறித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஞானாம்பாள் பாட்டியை வணங்கும் ஆட்சியர் வடநேரே

இதில், எக்விடாஸ் மேல்லைப்பள்ளியில் 12 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. தவிர, மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் இதில் இருந்தன. இந்த மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இனாம் கரூர் எஸ்.பி.காலனியைச் சேர்ந்த ஞானாம்பாள் பாட்டியை, சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தார்கள்.

அப்போது அவரைப் பார்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் வடநேரே, மூதாட்டியின் அருகில் சென்று, `இந்த வயதிலும் வாக்களிக்க ஆர்வமுடன் வந்திருக்கீங்களே, உங்களுக்கு என்ன வயசு ஆகுது?' என்று கேட்டார். அதைக் கேட்டு வெட்கப்பட்ட ஞானம்மாள் பாட்டி, ``எனக்கு 91 வயசாகுது ராசா. இதுவரை ஒவ்வொரு தேர்தல்லயும் நான் எப்பவுமே தவறாம வந்து ஓட்டுப் போட்டுடுவேன். தலபோற வேலை இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வெச்சுப்புட்டு, ஓட்டுப்போட வந்திருவேன். ஆனா என்ன ஒண்ணு... எப்பவும் நடந்து வந்து ஓட்டுப் போடுவேன். இப்போ வயசாகிட்டதால இந்த முறை என்னால நடந்து வரமுடியல. அதனால, நாற்காலியில என்னை உட்கார வச்சு அழைச்சுட்டு வந்தாங்க" என்று தெரிவித்தார்.

பாட்டியை அழைத்து வந்த பாட்டியின் உறவினர்கள், ``ஒவ்வொரு தேர்தலுக்கும் திருவிழாவுக்குப் போற மாதிரி பாட்டி உற்சாகமா கிளம்பி ஓட்டுப் போடப் போவாங்க. இந்தத் தடவை அவங்களால தனியா வர முடியலை. ஆனாலும், `எப்படியாச்சும் நான் ஓட்டுப் போடப் போகணும் கண்ணுங்களா... ஒத்தாசை பண்ணுங்க'னு எங்ககிட்ட சொல்லிட்டே இருந்தாங்க. அதனால, அவங்களை நாற்காலியில உட்காரவெச்சு ஓட்டுப்போட கூட்டிக்கிட்டு வந்தோம்'' என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வடநேரேவிடம் தெரிவித்தனர்.

ஞானாம்பாள் பாட்டியிடம் விசாரிக்கும் ஆட்சியர்

Also Read: `ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அப்பா, அண்ணனைக் கொன்னாங்க... இப்போ நான் வந்திருக்கேன்!' - அன்னலட்சுமி

இதைக் கேட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆச்சர்யமாகி, பாட்டியை கைகூப்பி வணங்கி தன் மரியாதையைத் தெரிவித்தார். அதோடு, ``அனைத்து வாக்காளர்களுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணம். இந்தத் தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமையாற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க நேரில் வருகை தந்தமைக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று மறுபடியும் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்து பாராட்டினார். இந்த நிகழ்வு பாட்டியை மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



source https://www.vikatan.com/news/women/karur-collector-greeted-91-years-old-women-who-came-to-cast-her-vote

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக