Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

Million Dollar Rainfall: ஹெலிகாப்டரிலிருந்து பண மழை பொழிந்த டிவி பிரபலம்; யார் இந்த Kamil Bartoshek?

செக் குடியரசில், கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் என்ற அழைக்கப்படும் தொலைக்காட்சி பிரபலம், சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதற்காக ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் டாலரை வீசியிருப்பது, சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கஸ்மா காஸ்மிட்ச்

யார் இந்த கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் ?

கஸ்மா காஸ்மிட்ச் அல்லது கமில் பர்தோசெக் என்றறியப்படும் இவர், செல்வாக்குமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பட இயக்குநர் ஆவார். கஸ்மா ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு சில போட்டிகள் வைத்து, அதில் வெற்றி பெறும் வெற்றியாளருக்கு ஒரு பெரிய தொகையைப் பரிசளிக்கத் தொடங்கினார்.

இது போன்று அவர் அண்மையில் வைத்த விளையாட்டுப் போட்டியில் யாரும் வெற்றி பெறாத காரணத்தினால், அவரால் யாருக்கும் பரிசளிக்க முடியவில்லை. இதனால் கஸ்மாவும், அவரின் குழுவினரும் இணைந்து பிளான் - B முயற்சியில் இறங்கினர். அது குறித்து கஸ்மா, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்தொடர்வோரிடம் ``யாரும் வெற்றி பெறாத இந்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே ஐடியா கொடுங்கள்'' என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

கஸ்மா காஸ்மிட்ச்

இதற்குப் பெரும்பாலானோர், யாருக்காவது உதவுங்கள் அல்லது ஒரு நல்ல விஷயத்துக்கு பணத்தை நன்கொடையாக வழங்குங்கள் அல்லது விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு அந்தப் பணத்தைப் பகிர்ந்தளிக்கவும் அல்லது அந்தப் பணத்தைக் கொண்டு மற்றொரு நிகழ்ச்சியை உருவாக்கவும் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து கஸ்மா இந்த விஷயங்களை ஒன்றாக இணைத்து, சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோ, ஒரு மில்லியன் டாலரை ஒரு பெரிய கன்டெய்னரில் நிரப்பி ஹெலிகாப்டர் மூலம் வானத்திலிருந்து கீழே வீசப்படுவதாக அமைந்திருந்தது.

அதைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் எவ்வாறு அந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்திருக்கும்போது, கஸ்மா தங்கள் குழுவுடன் சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவருக்கு மறைமுகமாக, அந்த இடத்தைக் குறிக்க ஒரு விடுகதையாக மின்னஞ்சல் ஒன்று அனுப்பினார்.

அதில், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஹெலிகாப்டரின் உதவியால் கன்டெய்னரிலிருந்து ஒரு மில்லியன் டாலர் மேலிருந்து வீசப்படும் என்றும், அப்போது நீங்கள் டாலரிலுள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

சொன்ன வார்த்தைக்கு உண்மையாக, சொன்ன தேதியில் கஸ்மா ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து சொன்ன இடத்துக்கு அனுப்பி வைத்தார், பிறகு பணமழை பொழிய, அங்கிருந்த மக்கள் அந்த டாலர் வடிவமைப்பிலிருந்த பணத்தினை ஸ்கேன் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கஸ்மாவை தாராளமான மனப்பான்மை கொண்ட பிரபலம் என்று பாராட்டியும், மற்றொரு தரப்பினர் அவர் செய்த செயல் தவறானது என்று விமர்சித்தும் வருகின்றனர்.

இவர் செய்த இந்த செயல் சரியானதா... இல்லை தவறானதா... நீங்கள் கூறும் கருத்து என்ன... கமென்ட்டில் தெரிவியுங்கள்!


source https://www.vikatan.com/trending/viral/tv-host-kamil-bartoshek-dropped-1-million-dollar-from-a-helicopter-in-the-czech-republic

புதன், 25 அக்டோபர், 2023

சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் என்னென்ன? ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது?

கிரகணங்கள் மிகவும் முக்கியமான இயற்கை நிகழ்வுகளாகப் பார்க்கப்படுகின்றன. கிரகணங்களை ஒட்டியே இயற்கைப் பேரிடர்கள், போர் மற்றும் நோய் பரவல் ஆகியன நிகழும் என்கிற நம்பிக்கை உண்டு. எனவே உலகமும் முழுவதும் உள்ள ஜோதிடர்கள் கிரகணங்களை கணித்து அதற்கேற்பப் பலன் சொல்லும் வழக்கம் உள்ளது.

நம் தேசத்தின் ஜோதிட அடிப்படையில் கிரகணங்கள் நிகழக் காரணம் ராகு - கேது என்னும் நிழல் கிரகங்கள். இந்த நிழல் கிரகங்களில் ஏதேனும் ஒன்றுடன் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் அது சூரிய கிரகண நாளாகவும் பௌர்ணமிச் சந்திரன் சேர்ந்திருந்தால் அது சந்திர கிரகணமாகவும் அமையும் என்கிறார்கள். அதன்படி கடந்த 14- ம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. அதேபோல் வரும் 28- ம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.

சந்திரன்
அக்டோபர் 28-ம் தேதி இரவு (29-ம் தேதி அதிகாலை) 1.03 மணி முதல் 2.23 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. இது குறை சந்திர கிரகணமாகவே நம் நாட்டில் தெரியும். இந்த ஆண்டில் நம் நாட்டில் தெரியும் ஒரே கிரகணம் இதுதான். எனவே இந்த கிரகணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக கிரகணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே உணவு உட்கொண்டு விட வேண்டும். கிரகண வேளையில் மந்திர ஜபம் செய்ய வேண்டும். பித்ரு காரியம் செய்யும் கடமை உள்ளவர்கள் கிரகண வேளையில் தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும். கிரகண வேளையில் செய்யும் தர்ப்பணம் மிகுந்த புண்ணிய பலனைத் தரும்.

மேலும் கிரகண வேளையில் செய்யும் நாம ஜபம் நமக்கு மன வலிமையைக் கொடுக்கும். சந்திரன் மனோகாரகன். அவன் மீது நிழல் கிரகங்களின் தாக்கம் ஏற்படுவதால் உயிர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். எனவே மன வலிமை பெற நாம ஜபம் செய்வது மிகவும் அவசியம். அதேபோன்று கிரகண வேளையில் தானம் கொடுப்பதும் பன்மடங்கு பலனைக் கொடுக்கும். இந்தச் சந்திரகிரகணம் நள்ளிரவு நிகழ்வதால் அந்த நேரத்தில் தானம் கொடுக்க முடியாது. எனவே தானம் தர விரும்பும் பொருளை எடுத்துவைத்து மறுநாள் அதிகாலையில் தானம் கொடுக்கலாம்.

ஐப்பசி அன்னாபிஷேகம்

இந்த கிரகணம் ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு தோஷம் தருவதாக அமையும் என்று சொல்கிறார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள், மறுநாள் காலை எழுந்து நீராடி சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வம் வாங்கி சமர்ப்பிப்பதும் வில்வ அர்ச்சனை செய்யச் சொல்லி தரிசனம் செய்வதும் கிரகண தோஷங்களை நீங்கச் செய்யும். மேலும் நவகிரக சந்நிதியில் தீபம் ஏற்றுவதும் நல்ல பரிகாரமாக அமையும். இந்த நட்சத்திரக்காரர்கள், மட்டைத் தேங்காயோடு நெல், நாணயங்கள் சேர்த்து தானம் செய்வது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் கிரகணப் பீடை விலகும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது?

ஐப்பசி பௌர்ணமி என்றாலே அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஐப்பசிப் பௌர்ணமியில் கிரகணம் ஏற்படுவதால் எப்போது அன்னாபிஷேகம் நடைபெறும் என்பது குறித்த குழப்பம் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

இதுகுறித்து சிவாசார்யர்கள் தரப்பில் பேசியபோது, "சந்திரகிரகணம் நள்ளிரவில்தான் ஏற்படுகிறது. எனவே மாலையே அன்னாபிஷேகம் முடித்து பிறகு நடையை சாத்திவிடலாம். குறிப்பாக மாலை 3 மணிக்கு மேல் 7 மணிக்குள் அன்னாபிஷேகத்தை முடிப்பது சிறப்பு" என்றார்கள்.

சந்திரகிரகணம்

அன்னாபிஷேகம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தஞ்சைப் பெருவுடையார் கோயில்தான். தஞ்சையில் அன்னாபிஷேக அலங்கார தரிசனம் மாலை 3 மணிக்குத் தொடங்கி 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இரவு 8 மணி அர்த்த ஜாம பூஜை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெரும்பாலான சிவாலயங்களில் இந்த நேரமே கடைப்பிடிக்கப்படலாம். சந்திரனைத் திருமுடியில் சூடிய அந்த ஈசனை அன்னாபிஷேகத் திருக்கோலத்தில் தரிசிப்பதே சகல விதமான கிரக தோஷங்களில் இருந்தும் நம்மை விலக்கிக் காக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை.

சந்திர கிரகணத்தை ஒட்டித் திருமலை திருப்பதி கோயிலில் அக்டோபர் 28-ம் அக்டோபர் 28-ம் தேதி இரவு 7.05 முதல் 29 அதிகாலை 3.15 வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://www.vikatan.com/spiritual/astrology/must-know-astro-details-regarding-the-upcoming-lunar-eclipse

புல்வாமா, மணிப்பூர் வன்முறை, அதானி... ராகுல் காந்தி - சத்ய பால் மாலிக் உரையாடலின் ஹைலைட்ஸ்!

கடந்த 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கும் சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியபோது அங்கு ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக்.

மோடி - சத்ய பால் மாலிக்

சத்ய பால் மாலிக், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ``2019 மக்களவைத் தேர்தல் நம் ராணுவ வீரர்களின் உடல்கள்மீது நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான அப்போதைய மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம். இதில், மௌனமாக இருக்குமாறு மோடி என்னிடம் கூறினார்'' என்று வெளிப்படையாகப் பேசி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

அன்று முதல் பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திவந்தார் சத்ய பால் மாலிக். அதோடு, ``ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது நான்தான் ஆளுநராக இருந்தேன். எனவே என்னுடைய உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு பா.ஜ.க-தான் பொறுப்பு" என்றும் சத்ய பால் மாலிக் கூறிவந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தன்னை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியிடம், புல்வாமா தாக்குதல், ஜம்மு காஷ்மீர் நிலைமை, அதானி மற்றும் தன்னுடைய ஆரம்பகால அரசியல் பற்றி சத்ய பால் மாலிக் உரையாடியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். இந்த சந்திப்பில் ராகுல் காந்தியிடம் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய சத்ய பால் மாலிக், ``சி.ஆர்.பி.எஃப் வாகனத்தைத் தாக்கிய வெடிபொருள் நிரப்பப்பட்ட டிரக் சுமார் 10 - 12 நாள்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்தது. அதிலிருந்த வெடிபொருட்கள் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டவை.

ராகுல் காந்தி - சத்ய பால் மாலிக்

அந்த வாகனத்தின் டிரைவர், உரிமையாளர் மீது பயங்கரவாத பதிவுகள் இருந்தன. அவர்கள் பலமுறை கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவை உளவுத்துறையின் ரேடாரில் இல்லை. சம்பவத்துக்குப் பிறகு, இது எங்களின் தவறு என்று இரண்டு சேனல்களிடம் சொன்னேன். அதேசமயம், இதை எங்கும் சொல்ல வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டேன். காரணம், எனது அறிக்கைகள் விசாரணையைப் பாதிக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், விசாரணையே நடைபெறவில்லை. அது தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், மூன்றாம் நாள் பிரதமர் மோடி தனது உரையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்" என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ``இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை விட்டு வெளியேறவே நான் போராட வேண்டியிருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது" என்றார்.

ராகுல் காந்தி

அடுத்து, அதானி குறித்து பேசிய சத்ய பால் மாலிக், ``அதானி பெரிய பெரிய குடோன்களை கட்டினார், தானியங்கள் உட்பட பயிர்களை விலைக்கு வாங்கினார் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அரசு காப்பாற்றத் தவறிவிட்டது. அடுத்த ஆண்டு அவற்றின் விலை அதிகரிக்கும். அப்போது அதானி அவற்றை விற்பனை செய்வார்.

சத்ய பால் மாலிக்

இதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டால், ஒரு விவசாயி தனது பொருட்களை மலிவான விலையில் அவர்களுக்கு விற்க மாட்டார்கள். இன்னொருபக்கம், அரசாங்க பணம் அனைத்தும் அதானியிடம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்" என்றார்.

மேலும் மணிப்பூர் விவகாரம் பற்றி பேசிய சத்ய பால் மாலிக், ``மணிப்பூரின் நிலைமைக்கு அரசின் தோல்வியே காரணம். இன்றுவரை முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை. அவர் நீக்கப்படவுமில்லை. மணிப்பூரை அவர்கள் (பா.ஜ.க) தொந்தரவு செய்துவிட்டார்கள். ஆனால், இவையெல்லாம் இன்னும் ஆறு மாதங்களுக்குத் தான். என்னால் எழுதிக் கொடுக்கவே முடியும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/jammu-kashmir-former-governor-satya-pal-malik-talks-with-rahul-gandhi

ஜோக்ஸ்



source https://www.vikatan.com/humour-and-satire/jokes/jokes-november-01-2023

கார்ட்டூன்: இந்தியப் பசி..!

கார்ட்டூன்: இந்தியப் பசி..!


source https://www.vikatan.com/government-and-politics/politics/cartoon-november-01-2023

செவ்வாய், 24 அக்டோபர், 2023

அழியும் நிலையில்... Leo படத்தில் வரும் கழுதைப் புலிகள்! என்ன காரணம் தெரியுமா?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் லியோ. இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுப்பொருளாகியுள்ள நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஹைனா (கழுதைப்புலி)-ம் ஹைப்பைக் கூட்டியுள்ளது. விஜய்யுடன் ஹைனா சண்டையிடும் காட்சிகள் சிஜியில் மிரட்டியுள்ளன. இந்நிலையில், இந்த ஹைனாவின் உண்மையான பண்புகள் குறித்த தேடலும் அதிகமாகியுள்ளது.

கழுதைப்புலி

ஆப்பிரிக்கக் காடுகளில் அதிகமாக வாழும் விலங்காக கழுதைப்புலிகள் (ஹைனா) உள்ளன. உலகில் மொத்தம் நான்கு வகைக் கழுதைப்புலிகள் உள்ளன. அவற்றில் உடலில் வரிகள் கொண்ட கழுதைப்புலி (ஹைனா) இனங்கள் மட்டுமே இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தக் கழுதைப்புலிகளுக்கு பின்னங்கால் குட்டையாகவும் முன்னங்கால் சற்று நீளமாகவும் இருக்கும். இதன் வலிமையான தாடைகளால் கடினமான எலும்புகளையும் அசால்ட்டாக மெல்லும் திறன் கொண்டது.

இவை சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டு மிச்சம் வைத்த மிருகங்களின் இறைச்சி, எலும்புகளை உணவாக உண்ணும். மேலும் இவை அழுகிப்போன உடல்களையும் சாப்பிடும். இவற்றின் ஜீரண மண்டலத்தில் மிக பயங்கரமான பாக்டீரியாக்கள், வைரஸ்களை எதிர்கொள்ளும் சக்தி இருப்பதால் எந்த வகை உணவை இவை சாப்பிட்டாலும் இதன் உடலுக்குக் கேடு வருவதில்லை. இதனால் இவற்றை 'கானகத் தோட்டி', 'காட்டின் துப்புரவாளர்' என்றும் அழைக் கின்றனர்.

கூட்டமாக கழுதைப்புலிகள்

ஹைனாக்கள் சில சிறப்பு பண்புகளில் தனித்து விளங்குகின்றன. ஒரு பெண் ஹைனா ஒரே ஒரு குறிப்பிட்ட ஆண் ஹைனாவுடன் மட்டுமே இணையும். அதே போல் ஆண் ஹைனா கூட்டத்தில் இருக்கும் மற்ற பெண் ஹைனாவுடன் இணையாது. மேலும், இதை தனது சொந்தத்துக்குள் தனக்கான துணையை அமைத்துக் கொள்வதில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை இவையும் பின்பற்றுகின்றன. மற்ற விலங்குகளில் பெண் விலங்குகள் மட்டுமே தன் குட்டியைப் பார்த்துக்கொள்ளும். ஆனால், கழுதைப்புலிகளில் ஆணும் பெண்ணுடன் சேர்ந்து தங்கள் குட்டியைப் பாதுகாத்து வளர்த்து ஆளாக்கும். கழுதைப்புலிகளில் பெண்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை, பெண்ணின் விருப்பப்படிதான் அவற்றின் கூட்டம் செயல்படும்.

பொதுவாக, கழுதைப்புலிகள் இரவு நேரத்தில் மட்டுமே தன் உணவைத் தேடும். பொழுது விடிவதற்குள் தன் இருப்பிடத்துக்கு வந்துவிடும். இவற்றுக்கு பழிவாங்கும் குணம் அதிகம் இருப்பதால் அதை ஒருவர் தொந்தரவு செய்தால் ஞாபகம் வைத்துக்கொண்டு தாக்கும் புத்திக்கூர்மை இவற்றுக்கு உண்டு. இப்படி பல நல்ல குணங்கள் கொண்ட கழுதைப்புலிகள் அதன் உருவம் மற்றும் தோற்றத்தைக் கொண்டு மிகவும் கொடூரமான விலங்காகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கழுதைப்புலிகள் அழியும் அபாயத்தில் உள்ளன. தமிழகத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதிகள், முதுமலைக் காடுகள், சிகூர் சமவெளி, நீலகிரி வனச்சரகம், களக்காடு, முண்டந்துரை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இவை காணப்படுகின்றன. மேலும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், மத்திய பிரதேசத்தின் சஞ்சய் டுபிரி வனவிலங்கு சரணாலயம், குஜ்ராத்தின் வெலவாடார் தேசிய பூங்கா ஆகிய இடங்களில் உள்ளன.

இந்தியாவில் கழுதைப்புலிகளின் எண்ணிக்கை குறித்த சரியான கணக்குகள் எதுவும் இல்லை. கழுதைப் புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்களே இவற்றின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இவை வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருக்கும் கால்நடைகளைத் தாக்குவதால் மனிதர்களால் கொல்லப்படுகின்றன. மேலும், இவற்றின் உடலுறுப்புகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கையாலும் இவை அதிகமாக வேட்டையாடப் படுவதாகக் கூறப்படுகிறது. இதன் வாழ்விட சீர்க்கேடுகளும் இவ்விலங்கின் எதிர்க்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன.

யானை, புலி, சிறுத்தைகள் போன்ற வன விலங்குகளின் உயிரிழப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுதைப்புலிகளுக்கும் நாம் கொடுப்பது அவசியம். உயிர்ச்சங்கிலியின் ஓர் அங்கமாக இருக்கும் கழுதைப்புலிகளை, பாதுகாப்பது நம் அனைவரின் கடமை.



source https://www.vikatan.com/environment/living-things/hyenas-in-the-movie-leo-are-endangered-what-the-reason-is

Doctor Vikatan: அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறியதும் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

Doctor Vikatan:  என் வயது 40. பல வருடங்களாக அசைவம் சாப்பிட்டு வந்த நான், சொந்தக் காரணங்களுக்காக சமீபத்தில் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டேன். அதன் பிறகு எனக்கு உடல் எடை அதிகரிப்பதை உணர்கிறேன். அசைவத்தைவிட சைவ உணவுப்பழக்கம் ஆரோக்கியமானது என்கிறார்கள்... ஆனால், சைவம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா.

ஊட்டச்சத்து ஆலோசகர் நிரோஷா

அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சாதம், காய்கறிகள் இவற்றுடன் சிக்கன், முட்டை, மீன் என புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் பிரதானமாக சாப்பிட்டுப் பழகியிருப்பீர்கள். புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடும்போது அடிக்கடி பசி எடுக்காது. வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.

அதுவே சைவத்துக்கு மாறிவிட்டதாகச் சொல்கிற நீங்கள், மீன், முட்டை, சிக்கன் தவிர்த்து காய்கறிகள் சாப்பிடத் தொடங்கி யிருப்பீர்கள். இதனால் உங்கள் உணவில் புரதச்சத்தின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கும். அதன் காரணமாக அடிக்கடி பசியெடுக்கும். அதனால் பசிக்கும்போதெல்லாம் இட்லி, தோசை, பிரெட், பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் என சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவீர்கள். அப்படிச் சாப்பிட்டாலும் பசி உணர்வு கட்டுப்படாது. அதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிடுகிற உடல் எடை அதிகரிப்பு.

சூப் சாப்பிடலாம்!

இதைத் தவிர்க்க நீங்கள் உங்கள் உணவுத்திட்டத்தை மாற்ற வேண்டும். அதாவது, உங்கள் தட்டில் குறைந்தது இரண்டு கப் காய்கறிகள் இடம்பெற வேண்டும். ஒரு கப் சாதம், இரண்டு கப் காய்கறி, கொஞ்சம் பருப்பு, ஒரு கப் கீரை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பருப்பு உருண்டை குழம்பாகவோ, சோயாவில் தயாரிக்கப்படுகிற டோஃபு என்கிற பனீர் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். புரதச்சத்தின் அளவு அதிகமானாலே, எடை அதிகரிப்பு பிரச்னை இருக்காது. ரசம், சூப், நீர்மோர், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது, திரவ உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் செய்தும் எடை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் ஊட்டச்சத்து ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/fitness/why-is-weight-increasing-while-changing-from-non-veg-to-veg