பாலஸ்தீனத்திற்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரமல்லாவில் உள்ள இந்திய தூதரக அலுவலக்திலேயே இறந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விவரம் ஏதும் வெளியாகாத நிலையில், முகுல் ஆர்யா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவித்த பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம், ``முகுல் ஆர்யாவின் உடலை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான செயல்பாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். முகுல் ஆர்யாவின் மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரம் மற்றும் தடயவியல் மருத்துவ அமைச்சகம், காவல்துறை மற்றும் பொது அதிகாரிகளுக்குப் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிரதமர் முகமது ஷ்டய்யே ஆகியோர் வலியுறுத்தியிருக்கின்றனர்" என்று கூறியுள்ளது.
இந்த செய்தி அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ``பாலஸ்தீனத்தில் இந்தியப் பிரதிநிதி காலமானதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு திறமையான அதிகாரியாக இருந்தார்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
முகுல் ஆர்யா 2008-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவர், பாரீஸில் உள்ள யுனெஸ்கோவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும், காபூல் மற்றும் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்களிலும் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/international/mukul-arya-indias-representative-in-palestine-found-dead-inside-embassy-cause-unknown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக