Ad

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

RR vs RCB: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வி; இத்தனை வருடங்களாக ஆர்சிபி தேடிய ஃபினிஷரா தினேஷ் கார்த்திக்?

எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கும் தறுவாயில் கிடைக்கும் வெற்றியைவிட மிகச்சிறந்த வெற்றி என்பது ஒன்றுமே இல்லை. ஐந்து விக்கெட்டுக்களை இழந்தபின்னர், எப்படியும் இன்று அவ்ளோதான் என பெங்களூரு ரசிகர்கள் 'வலிக்கலியே' மோடுக்குச் சென்ற போது, தினேஷ் கார்த்திக்கும், ஷபாஷ் அகமதும் ஆடிய ஆட்டம் அவர்களை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருக்கிறது. இருவரும் 30 நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டார்கள்.
சஞ்சு சாம்சன், ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி

டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸி சேஸிங் தேர்வு செய்தார். அணியில் எந்த மாற்றமும் இல்லை. ராஜஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த முறையும் ராஜஸ்தான் மூன்று அயல்நாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்கியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் XI: பட்லர், ஜெய்ஸ்வால், படிக்கல், சாம்சன், ஹெட்மெயர், ரியான் பராக், அஷ்வின், போல்ட், சைனி, பிரசித் கிருஷ்ணா, சஹால்
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு XI: டு ப்ளெஸ்ஸி, கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ரூதர்ஃபோர்டு, ஷபாஷ் அகமத், ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, சிராஜ், ஆகாஷ் தீப்.
விராட் கோலி, ஜாஸ் பட்லர்

கடந்த போட்டியில் சதம் கண்டிருந்த பட்லர் அதே வேகத்துடன் ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் ஆட வந்தார். இரண்டாவது ஓவரிலேயே வில்லியின் ஓவரில் போல்டாகி வெளியேறினார் ஜெய்ஸ்வால். விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகி இருக்கிறார் ஜெய்ஸ்வால். ஒன் டவுன் வந்த படிக்கல், அடித்து ஆடத் தொடங்கினார். சிராஜ் பந்தில் டீப் ஸ்குயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ்; வில்லியின் பந்தில் ஷாட் தேர்ட் மேன் பக்கம் ஒரு பவுண்டரி என அவ்வப்போது அடித்தார். பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

ஆகாஷ் தீப் வீசிய பந்தை, பட்லர் தூக்கி அடிக்க முயல அது டீப் மிட்விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த வில்லி பக்கம் சென்றது. கொஞ்சம் கடினமானகேட்ச் தான் என்றாலும், அதை பிடித்திருக்கலாம் வில்லி. ஆனால், மிஸ் செய்துவிட்டார். அடுத்த பந்தை லாங் ஆஃப் பக்கம், சிக்ஸருக்கு விளாசினார் பட்லர். அடுத்து வில்லி வீசிய ஓவரில் படிக்கல் பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க ஒரே ஓவரில் 14 ரன்கள்.

ஹர்சல் படேலின் ஓவரில் படிக்கல் கோலியிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். ஹசரங்கா வீசிய பந்தை, லாங் ஆனில் சிக்ஸருக்கு விளாசிய அதே ஓவரில், ஹசராங்காவிடமே கேட்ச் கொடுத்து கேப்டன் சஞ்சு சாம்சனும் விடைபெற்றார். 18 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான். கடந்த போட்டியில் சதம் அடித்த பட்லர்கூட இந்த முறை 40 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இவ்வளவு குறைவான ஸ்கோரை சேஸ் செய்வதில் என்ன த்ரில், என்ன என்டெர்டெய்ன்மெண்ட் இருக்கப் போகிறது என நினைத்த ஆர்சிபி பௌலர்கள் அடுத்த இரண்டு ஓவர்களில் தாங்கள் கற்றுவைத்த மொத்த வித்தையையும் இறக்கினார்கள். அதாவது தங்களின் பழைய ஃபார்முக்குத் திரும்பிவந்து ரன்களை வாரி வழங்கினார்கள்.
விராட் கோலி

சிராஜ் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அரைசதம் கடந்தார் பட்லர். 19 ஓவர் என்பதால் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். அப்ப 20வது ஓவரில் என்ன 20 ரன்களா என்கிறீர்களா, அதுதான் இல்லை. 23 ரன்கள்! ஆகாஷ் தீப் இரண்டாவது பந்தை நோபாலாக வீச, ஃப்ரீ ஹிட். லாங் ஆன் பக்கம் ஒரு சிக்ஸ். அடுத்த பந்திலும் சிக்ஸ். 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் இன்னொரு சாதனையையும் நிகழ்த்தியிருந்தார். பவுண்டரி இல்லாமல் 70 ரன்கள் டி20யில் அடித்த முதல் வீரர் பட்லர்தான். எல்லாவற்றையும் சிக்ஸர்களாக மட்டுமே மாற்றிக்கொண்டிருந்தார். ஹெட்மெயர் தன் பங்குக்கு ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ். அதே 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் என இன்னிங்ஸை முடித்தது ராஜஸ்தான்.

அனுஜ் ராவத்தும், டு ப்பெஸ்ஸியும் ஓப்பனிங் இறங்கினார்கள். பிரசித் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி, போல்ட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் 16 ரன்கள் எனச் சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர் இருவரும். பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்து அசத்தினர் பெங்களூரு ஓப்பனர்கள். முந்தைய சீசன்களில் பெங்களூருக்காக ஆடிய படிக்கல் பேட்டிங்கில் பழி தீர்க்க, இது சஹாலின் டர்ன்.

ஆர்சிபி அணி நிர்வாகம் விருப்பப்பட்டிருந்தால் அங்கேயே இருந்திருப்பேன் என தன் மன சோர்வை ஏற்கெனவே வெளிப்படித்தியிருந்தார் சஹால். முதல் ஓவரிலேயே டுப்ளெஸ்ஸியை வெளியேற்றினார். சஹால் வீசிய அடுத்த ஓவரில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வில்லி ஸ்கொயர் லெக் பக்கம் பந்தை அடித்து சிங்கிளுக்கு நகர்ந்தார். கோலி வேகமாக வர, வில்லி வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். கோலி திரும்பி வருவதற்குள் ஒரு நொடிப் பொழுதில் ஸ்டம்பை தட்டிவிட்டார் சஹால். 'கோலியை அனுப்பிவிட்டோமே' என மனம் நொந்த வில்லி, அடுத்த பந்திலேயே அவரும் போல்டானார்.

யப்பா... மேக்ஸ்வெல்ல அடுத்த போட்டியிலாவது அனுப்பங்களேன் எனக் கடுப்பாக ஆரம்பித்தனர் பெங்களூரு ரசிகர்கள். சஹால் விக்கெட் எடுத்துக்கொண்டிருந்த போது, "உங்கள் பழைய காதலர் உங்களைப் பழி தீர்க்க வந்தால் எப்படி இருக்கும்" என நக்கலாக ட்விட் செய்தது ராஜஸ்தான் ட்விட்டர் அக்கௌண்ட்.
சஹால் - கோலி ரன் அவுட்

நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் களம் இறங்கினார் ரூதர்ஃபோர்டு. தேவைப்படும் ரன் ரேட் எவ்வளவு ஏறினாலும் கவலையில்லை என்பதாக ஆடினார் ரூதர்ஃபோர்டு. 'மெல்ல மெல்ல 50 ஓவர் இருக்கு பாரு, சிங்கிள் தட்டியே ஜெயிச்சிடலாம்' என உச் கொட்டினர் பெங்களூரு ரசிகர்கள். சைனி ஓவரில் ஷபாஷ் அகமது ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து போட்டியில் இன்னும் உயிர் இருக்கு என்பதை நிரூபித்தார். ஆனால், அடுத்த போல்ட் ஓவரில் ரூதர்ஃபோர்டும் அவுட்.

வந்தார் தினேஷ் கார்த்திக். ஓவருக்குக் கிட்டத்தட்ட 12 ரன்கள் தேவை. அஷ்வின் பந்துவீசினார். அஷ்வின் வீசிய கேரம் பாலை பேக்வேர்டு ஸ்கொயர் பக்கம் பவுண்டரிக்கு அனுப்பினார் டிகே. அது நோபால் வேறு. லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ். அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள். முடிந்த போட்டியை ஆக்ஸிஜன் செலுத்தி மீண்டும் உயிர்த்தெழ வைத்தார் டிகே.

அடுத்து சைனி வீசப் போகும் பந்தை முன்னரே கணித்துவிட்ட டிகே, கூலாக பேக்வேர்டு ஸ்கொயர் பக்கம் ஒரு லேப்ஸ்வீப் அடித்தார். "Whatever you are doing stop that and watch this" என்றார் வர்ணனையாளர். இரண்டு பவுண்டரிகள். ஆறாவது பந்தில் சைனி செய்தது மாபெரும் தவறு... ஃபீல்ட் செட்டப்பை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு, ஏதோ யோசனையில் ஆள் இல்லாத பக்கம் பந்தை போட்டுக் கொடுத்தார். இன்னொரு பவுண்டரியை அள்ளினார் டிகே. இந்த ஓவரில் 16 ரன்கள். இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 37 ரன்கள். ராஜஸ்தானுக்கு ஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்கள் எப்படி ஆட்டத்தின் போக்கையே மாற்றியதோ, அப்படி பெங்களூருக்கு இந்த இரண்டு ஓவர்களும் அமைந்தன. அடுத்து வீசிய பிரசித் கிருஷ்ணா ஓவரிலும் பவுண்டரி, சிக்ஸர் என 13 ரன்கள்.

ஷபாஷ் அகமது

சஹால் தன் நான்காவது ஓவரை வீச வந்தார். ஆனால் சஹால் கொஞ்சம் முன்னரே பந்துவீச வந்திருக்க வேண்டும். இந்த ஓவரில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஆடினர் ஷபாஷும், கார்த்திக்கும். அடுத்த போல்ட் ஓவரில் ஷபாஷ் செய்தது சற்றே அதீதம் என்று தோன்றியது. முதல் பந்தை ஸ்கூப் செய்ய முயன்றார். ஆனால் கனெக்ட் செய்ய முடியவில்லை. பவுண்டரி, சிக்ஸர் எல்லாம் அடித்துவிட்டு மீண்டும் ஸ்கூப் ஆட முயன்றார். போல்ட்டின் அனுபவ பந்துவீச்சால், அந்தப் பந்து சற்று விலகி கிளவில் பட்டு ஸ்டம்பைத் தகர்த்தது.

ஆறு பந்துகளில் வெறும் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் அடித்து பிரமாண்டமாக ஆட்டத்தை முடித்து வைத்தார் ஹர்சல் படேல்.

தினேஷ் கார்த்திக்
ஆட்டத்தை தன் வசப்படுத்திய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வர்ணனையாளராக பணியாற்றிய இந்த ஃபினிஷர், இன்னும் தன்னுள் கிரிக்கெட் இருக்கிறது என்பதை கிரிக்கெட் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார். குறிப்பாக, ஆர்சிபி இத்தனை வருடங்களாகத் தேடிய அந்த ஃபினிஷர் டிகே-தான் என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி பதிவு செய்யும் நூறாவது வெற்றி இது.



source https://sports.vikatan.com/ipl/ipl-2022-dinesh-karthik-is-unfinished-yet-wins-a-losing-match-against-rajasthan

இன்றைய ராசி பலன் | 06/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/06042022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

திங்கள், 4 ஏப்ரல், 2022

SRH vs LSG: ராகுலின் பஞ்சாப்பிடம் இல்லாதது, ராகுலின் லக்னோவிடம் உண்டு; சன்ரைசர்ஸ் விடியல் எப்போது?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காலத்திற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு விடிவுகாலம் பிறக்க வழியே இல்லை என்பதை போன்ற ஒரு பெர்ஃபார்மென்ஸை அந்த அணி கொடுத்திருக்கிறது.

கேன் வில்லியம்சன் விரும்பியபடி போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டாஸை சன்ரைசர்ஸே வென்றிருந்தது. ட்ரெண்ட்படி தாங்களும் சேஸ் போவதாக அறிவித்தார் வில்லியம்சன்.

வாஷிங்டன் சுந்தர் | SRH vs LSG

பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாகவே அமைந்திருந்தது. பவர்ப்ளேயில் லக்னோ அணியை போட்டு புரட்டி எடுத்திருந்தார்கள். புவனேஷ்வர் குமாரும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் கட்டுக்கோப்பாக வீசியிருந்தனர். குறிப்பாக, வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறப்பாக வீசியிருந்தார். பவர்ப்ளேயில் 3 ஓவர்களை வீசியிருந்த வாஷிங்டன் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டுமே இடது கை பேட்டர்களின் விக்கெட்டுகள். டீகாக், எவின் லீவிஸ் என இருவருமே அபாயகரமான வீரர்கள்.

வாஷிங்டன் சுந்தர் இவர்களுக்கு ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக மிடில் & லெக் ஸ்டம்பில் இடமே கொடுக்காமல் டைட்டாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வாஷியின் டி20 கரியரிலேயே அவர் எந்தப் பகுதியில் நன்றாக பந்துவீசியிருக்கிறார் எனக் கேட்டால், பவர்ப்ளே என்றே பதில் வரும். 2020 சீசனில் வாஷியை ஆர்சிபி அணி பவர்ப்ளேயில் திறம்பட செயல்பட வைத்திருந்தது. அந்த ரெக்கார்டுகளை மனதில் வைத்தே வில்லியம்சன், வாஷியின் கைகளில் பந்தை கொடுத்திருக்கலாம் அல்லது இரண்டு இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து இறங்கவிருந்ததாலும் மேட்ச் அப்பின் படி ஆஃப் ஸ்பின்னரான வாஷிக்கு பந்து சென்றிருக்க வேண்டும்.

SRH vs LSG
காரணம் எதுவாயினும் வாஷிங்டன் சுந்தர் வீசிய அந்த 3 ஓவர்கள் ஆட்டத்தை மொத்தமாக சன்ரைசர்ஸ் பக்கமாகத் திரும்பியிருந்தது. எக்கனாமிக்கலாகவும் வீசியதால் வாஷி ஏற்படுத்திய அழுத்தம் செஃப்பர்ட்டின் பந்திலும் விக்கெட்டை விழ வைத்தது.

கடந்த ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்திருந்தார். அப்படியொரு மோசமான பெர்ஃபார்மென்ஸுக்கு பிறகு நடந்த அடுத்த போட்டியிலேயே இப்படி ஒரு வெறித்தனமான பவர்ப்ளே ஸ்பெல்லை வீசியிருப்பது தரமான கம்பேக்! வாஷிங்டன் சுந்தர் மட்டுமில்லை, இன்னொரு தமிழக வீரரான நடராஜனுமே அட்டகாசமாக வீசி கம்பேக் கொடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளேயில் என்றால் நடராஜன் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசியிருந்தார். ஸ்லோயர் ஒன்கள், ஷார்ட் பிட்ச் டெலிவரிக்கள், யார்க்கர்கள் எனக் கலந்துக்கட்டி அசத்திய நடராஜன் ஒரே ஓவரில் கே.எல். ராகுலின் விக்கெட்டையும் க்ரூணால் பாண்ட்யாவின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். நடராஜன் வீசிய பெரும்பாலான யார்க்கர்கள் துல்லியமாக விழுந்துருந்தன.

நடராஜன் | SRH vs LSG

நடராஜன், வாஷி, புவனேஷ்வர் குமார் இந்த மூவருமே மிகச்சிறப்பாக பந்துவீசி தங்களுடைய ஓவர்களை நன்றாகவே நிறைவு செய்திருந்தனர். இந்த மூவருமே இணைந்து வீசியிருந்த 12 ஓவர்களில் 79 ரன்களை மட்டுமே லக்னோ அணியால் எடுக்க முடிந்தது. எனில், லக்னோவின் ஆட்டம் மீதமிருந்த 8 ஓவர்களில்தான் சூடே பிடித்திருக்கிறது. உம்ரான் மாலிக், ரோமாரியோ செஃப்பர்ட், அப்துல் சமத் என மீதமிருந்த 8 ஓவர்களை வீசிய பௌலர்கள் கொஞ்சம் சுமாராகவே வீசியிருந்தனர். இந்த 8 ஓவர்களில்தான் லக்னோ அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் ஒன்று அமைந்ருந்தது. ரன்ரேட் சீரானது. ராகுல் அரைசதம் அடித்திருந்தார். தீபக் ஹுடா அரைசதம் அடித்திருந்தார்.

பஞ்சாப் அணியில் ஆடும்போது ராகுலை மையமாக வைத்து அவரை சுற்றி மற்ற பேட்டர்கள் ஆடியிருக்கமாட்டார்கள். ஆனால், இங்கே லக்னோவில் அது நடந்தது. ராகுல் ஒரு முனையில் கொஞ்சம் மெதுவாக விக்கெட்டே விடாமல் நின்று கொண்டிருக்க, இன்னொரு முனையில் தீபக் ஹூடா அனுபவமற்ற உம்ரான் மாலிக் போன்ற பௌலர்களை வெளுத்தெடுத்தார்.

வேகவேகமாக ரன்கள் சேர்த்து ராகுலுக்கு முன்பாகவே அரைசதத்தையும் கடந்தார் ஹூடா. இருவரும் இணைந்து 87 ரன்களை அடித்திருந்தனர். கடைசிக்கட்டத்தில், ஆயுஷ் பதோனி கொஞ்சம் அதிரடி காட்ட லக்னோ அணி போட்டியளிக்கக்கூடிய வகையில் 170 ரன்களை எடுத்திருந்தது.

ராகுல், தீபக் ஹூடா | SRH vs LSG

20 ஓவர்கள் நின்றாலே வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது. கடந்த சீசனிலெல்லாம் சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டர் பயங்கர வலுவாக இருக்கும். மிடில் & லோயர் மிடில் ஆர்டர் பயங்கர வீக்காக இருக்கும். இந்த முறை அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. ஓப்பனிங்கில் இறங்கும் கேப்டன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே அதிரடியாக ஆட முயற்சி செய்து அது கைகூடாமல் கோட்டைவிடுகின்றனர். இவர்கள் இருவரின் விக்கெட்டையுமே ஆவேஷ் கான் பவர்ப்ளேயிலேயே வீழ்த்தியிருந்தார்.

ஆவேஷ் கான் | SRH vs LSG

பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ் கான் டெத் ஓவரிலும் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தியிருந்தார். இந்த 4 விக்கெட்டுகளுன் போட்டியையே மாற்றியது என்றாலும் மிகையில்லை. திரிபாதியும் பூரனும் மட்டுமே போட்டியை உயிர்ப்போடு வைத்திருக்கும் வகையில் கொஞ்சம் அதிரடியாக ஆடி கொடுத்தனர். திரிபாதி டெத் ஓவர்கள் வரை நின்று பெரிய இன்னிங்ஸை ஆடி பரபரப்பைக் கூட்டுவார் என எதிபார்க்கையில், க்ரூணால் பாண்டியா திரிபாதியின் விக்கெட்டை லாகவமாக வீழ்த்தியிருந்தார். எய்டன் மார்க்ரமின் விக்கெட்டையுமே க்ரூணால் பாண்ட்யாவே வீழ்த்தியிருந்தார்.

பூரன் & வாஷிங்டன் சுந்தர் என இரண்டு இடதுகை பேட்டர்கள் க்ரீஸிலிருந்த போது அசால்ட்டாக சடசடவென ஓவர்களை வீசிவிட்டு சென்றார் க்ருணால். கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பூரன் நின்றிருந்ததால் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

க்ருணால், ராகுல் | SRH vs LSG

ஆனால், அந்தச் சமயத்தில்தான் ஆவேஷ் கான் வெறித்தனமாக 18 வது ஓவரை வீசியிருந்தார். ஒரு ஃபுல் டாஸில் லாங்க் ஆஃபில் தூக்கியடித்து பூரன் கேட்ச் ஆகியிருந்தார். அடுத்த பந்திலேயே அதிரடி வீரரான அப்துல் சமத்தும் எட்ஜ் ஆகி வெளியேறினார். இவ்வளவுக்கு பிறகுமே கூட சன்ரைசர்ஸ் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. க்ரீஸில் நிற்கும் வாஷிங்டன்னும் செஃப்பர்ட்டும் எதாவது மேஜிக் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

SRH vs LSG

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. இதுதான் மேஜிக்கை நிகழ்த்த வேண்டிய இடம். எதிர்பார்த்தபடியே மேஜிக் நிகழ்ந்தது. ஆனால், நிகழ்த்தியது வாஷியோ செஃல்பர்டோ அல்ல, ஹோல்டர். கடைசி ஓவரை வீசிய ஹோல்டர் அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளைத் தூக்கியிருந்தார். முதல் பந்தில் வாஷியும் கடைசி பந்தில் செஃப்பர்டும் காலி. நடுவில் புவனேஷ்வர் ஏதேதோ முயன்றிருந்தார். மொத்தத்தில் சன்ரைசர்ஸ் இந்தப் போட்டியிலும் உதயமாகவில்லை. 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியே மிஞ்சியது.

விடியறதுக்கு வாய்ப்பே இல்லையா சார்?



source https://sports.vikatan.com/ipl/another-day-another-loss-for-sunrisers-hyderabad-as-lucknow-marches-ahead

தொடரும் வோல்ஃப் பேக், நோபிள் ஆதிக்கம்... போர்க்களம் தொடரில் கோல் மழை!

நேரு ஸ்டேடியத்தில் கடந்த வாரம் தொடங்கிய போர்க்களம் கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தன. சனிக்கிழமை மதியம் நடந்த முதல் போட்டியில், தடம் எஃப்.சி அணி, YMSC அணியை எதிர்கொண்டது. நோபிள் கால்பந்து அகாடமிக்கு எதிரான முதல் போட்டியில் 1-4 எனத் தோற்றிருந்த தடம் எஃப்.சி, இந்தப் போட்டியைச் சிறப்பாகத் தொடங்கியது. YMSC அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் கருதியிருந்த நிலையில், 15-வது நிமிடத்தில் முன்னிலை பெற்றது தடம். அந்த அணியின் நரேஷ் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். 61-வது நிமிடத்தில் சூசை கோலடிக்க, 2 கோல்கள் முன்னிலை பெற்றது தடம் எஃப்.சி. கம்பேக் கொடுக்க எவ்வளவு முயற்சி செய்தும் YMSC அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. அதனால், 2-0 என வென்று, தங்கள் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது தடம் எஃப்.சி. தங்கள் முதல் போட்டியில், YMSC அணி 2-1 என MAFFC அணியை வீழ்த்திருந்தது.

முதல் வாரம் தோல்வியடைந்திருந்த MAFFC அணிக்கு இரண்டாவது தோல்வியைப் பரிசளித்தது ஃபுயூச்சர் இந்தியா ஃபுட்பால் அகாடமி (FIFA). போட்டி முழுதும் ஆதிக்கம் செலுத்திய FIFA வீரர்கள், 4 கோல்கள் அடித்தனர். 24-வது நிமிடத்தில் FIFA வீரர் பிரவீன் குமார் கோல் கணக்கைத் தொடங்கிவைக்க, ஆறு நிமிடங்கள் கழித்து ஒரு அசத்தலான ஹெட்டர் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் நந்த குமார். MAFFC அணிக்குப் பெரும் தலைவலியாக விளங்கிய நந்த குமார், அடுத்த ஆறு நிமிடங்களில் மீண்டும் ஒரு கோலடித்து போட்டியை 3-0 என்றாக்கினார். இரண்டு கோலோடு நிற்காமல், 67-வது நிமிடத்தில் இன்னொரு கோலையும் அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். 4-0 என அந்த அணி வெற்றி பெற்றுவிடும் என்று நினைத்திருக்க, 91-வது நிமிடத்தில் தன் அணிக்காக ஆறுதல் கோலடித்தார் அஜித் குமார். கடந்த வாரம் YMSC அணியிடம் 2-1 என்று தோற்றிருந்த போட்டியில், இந்த அணியின் கோலை அடித்ததும் அஜித் குமார் தான். இறுதியில் 4-1 என வெற்றி பெற்றது FIFA.

ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் எஃப்.சி.ரெவலேஷன் அணியை எதிர்கொண்டது நோபிள் கால்பந்து அகாடமி. தடம் எஃப்.சி அணிக்கெதிரான முதல் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் ஏபி தான் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். என்ன, அந்தப் போட்டியில் ஆறாவது நிமிடத்தில் முதல் கோல் வந்தது. இந்தப் போட்டியில் 36-வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. முதல் பாதியில் அதன்பிறகு கோலடிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நோபிள் அணிக்கு இன்னொரு கோல் கிடைத்தது. கொடுக்கப்பட்ட பெனால்டியை கோலாக்கி ஆட்டத்தை 2-0 என்றாக்கினார் பிரேம் குமார்.

FC Revelation vs Noble Football Academy

56-வது நிமிடத்தில், அருண் மூலம் நோபிள் அகாடமி மூன்றாவது கோலையும் அடிக்க, மூன்றே நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கும் வாய்ப்பு பெற்றது எஃப்.சி.ரெவலேஷன். பாக்சுக்குள் செய்யப்பட்ட ஃபவுலால், பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மோசமாக அடிக்கப்பட்ட ஷாட்டை, நோபிள் கோல்கீப்பர் சிஜோ மாத்யூஸ் தடுத்துவிட்டார். முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியிலும் ஒரு ஸ்டாப்பேஜ் டைம் கோல் அடிக்கப்பட்டது. ஆனால், இதுவும் நோபிள் அணியிலிருந்து வந்ததுதான். 92-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை 4-0 என முடித்தார் நிவாஸ்.

இரண்டு போட்டிகளில் இதுவரை 8 கோல்கள் அடித்திருக்கிறது நோபிள் கால்பந்து அகாடெமி.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வோல்ஃப் பேக் எஃப்.சி, யாவே எஃப்.சி அணிகளுக்கெதிரான போட்டியில் நான்காவது நிமிடத்திலேயே முதல் கோல் அடிக்கப்பட்டது. விஜய் துங்கா அடித்த கோலால், விரைவிலேயே முன்னிலை பெற்றது யாவே எஃப்.சி. கடந்த வாரம், எஃப்.சி.ரெவலேஷன் அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்திருந்த வோல்ஃப் பேக் வீரர் ஆதில், 26-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமனாக்கினார். அடித்தால், இரண்டு இரண்டாகத்தான் அடிப்பேன் என்று சபதம் எடுத்திருக்கும் ஆதில், 43-வது நிமிடத்தில் மீண்டும் கோலடிக்க, 2-1 என முன்னிலை பெற்றது வோல்ஃப் பேக் எஃப்.சி.

இந்த சீசனின் முதல் கோலை அடித்த யாவே ஸ்டிரைக்கர் ஞான பிரசாத், 51-வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை மீண்டும் சமனாக்கினார். ஆனால், வோல்ஃப் பேக் எஃப்.சி பின்தங்கவேயில்லை. 63-வது நிமிடத்தில் லோகேஷ் கோலடிக்க, 3-2 என முன்னிலை பெற்றது அந்த அணி. முதல் போட்டியில் லோகேஷும் 2 கோல்கள் அடித்திருந்தார். அடுத்த யாவே பதில் கோல் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க, 75-வது நிமிடத்தில் வோல்ஃப் பேக் அணியின் நான்காவது கோலை அடித்தார் ரீகன். அதனால், பரபரப்பான அந்த ஆட்டம் 4-2 என முடிந்தது.

புள்ளிப் பட்டியலில் வோல்ஃப் பேக் எஃப்.சி முதலும், நோபிள் கால்பந்து அகாடமி இரண்டாவது இடமும் பிடித்திருக்கின்றன.


source https://sports.vikatan.com/football/porkkalam-football-tournament-gw-2-round-up

இன்றைய ராசி பலன் | 05/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam.



source https://www.vikatan.com/spiritual/astrology/05042022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

தண்டவாளத்தில் விரிசல்; சிவப்பு நிறப் புடவையைக் காட்டி எச்சரித்த மூதாட்டி - தவிர்க்கப்பட்ட விபத்து

உத்தரப்பிரதேச மாவட்டம், எட்டா மாவட்டத்தின் அவகர் தொகுதியிலுள்ள குலேரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்வதி. இந்த மூதாட்டி, வயல்களுக்கு வேலைக்குச் சென்றபோது, ​​ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டார். இதையடுத்து ரயில் ஓட்டுநரை எச்சரிக்க நினைத்த அந்த மூதாட்டி , தான் உடுத்தியிருந்த சிவப்பு நிறப் புடவையை அவிழ்த்து, தண்டவாளத்தில் இரண்டு குச்சிகளை நட்டு, அதில் அந்தப் புடவையைக் கட்டி, ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை தூரத்திலிருந்து பார்த்த ரயில் ஓட்டுநர், சற்று நேரம் போராடி ரயிலை நிறுத்திவிட்டார். அதன் பிறகு ஓட்டுநர் இந்தச் சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் தண்டவாளத்தைச் சரிசெய்தனர். ரயிலில் இருந்த எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய, அந்த மூதாட்டியை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் போல்சானி முரளிதர் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், 70 வயதான ஓம்வதி என்ற மூதாட்டி, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசலைக் கண்டு, தனது சிவப்பு நிறப் புடவையைக் காட்டி, ரயிலை நிறுத்தியிருக்கிறார். பல விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றிய அந்த மூதாட்டியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது'' எனப் பதிவிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/village-woman-raises-red-saree-flag-to-avert-rail-accident-in-uttar-pradesh

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது சென்னை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் அரசு டெண்டர்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்திருந்தார். அதையடுத்து இந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதைத் தொடர்ந்து தமிழக அரசு, ``எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளன. இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவிதச் சலுகையையும் உச்ச நீதிமன்றம் வழங்கக் கூடாது" என பதில் மனு அளித்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை, உயர் நீதிமன்ற பதிவாளர் மூன்று வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/in-ex-minister-sp-velumani-case-madras-high-court-should-submit-the-report-within-3-weeks-in-supreme-court