Ad

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

`நீட் தேர்வை விட ஆபத்தா?!’ - கலை, அறிவியல் கல்லூரிகளில் தேசிய கல்விக் கொள்கை... ஒரு பார்வை!

கல்வி முறையில் தேசிய அளவில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை தமிழ்நாடு கடுமையாக எதிர்த்துவருகிறது. இந்த நிலையில், மருத்துவக் கல்விக்கு அடுத்தபடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தேர்வு முறைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

கல்லூரி மாணவர்கள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பிஎஸ்.சி., பி.காம் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களில் தேர்ச்சிபெறாத மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டுக்கு செல்லலாம். அதேபோல, இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சிபெறவில்லையென்றால், மூன்றாம் ஆண்டுக்கு சென்றுவிடலாம். தோல்வியடைந்த பாடங்களை அங்கு போய் மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். தற்போது இருக்கக்கூடிய இந்த நடைமுறைகளை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தகுதி அவசியம் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திறன் சோதனை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பில் சேருவதற்கான அடிப்படைத் தகுதியாக தற்போது இருக்கிறது. இந்த நிலையில், நுழைவுத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின் படி முதலாம் ஆண்டில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கொண்டுவரப்படும் இந்த விதிமுறைகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முந்தைய அ.தி.மு.க அரசு, தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிற இந்த மாற்றங்களை ஆதரிக்கவில்லை. ‘இது, கிராமப்புற மாணவர்களை கடுமையாகப் பாதிக்கும்’ என்று அன்றைய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கே.பி.அன்பழகன்

தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க-வும், எதிர்க் கட்சியாக இருந்தபோதே தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தது. அந்த எதிர்ப்பு நிலையிலேயே தற்போதும் தொடர்கிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல் 18.02.2022 அன்று தமிழக அரசுக்கு கிடைத்தது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்” என்று பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பல வழிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், நடைமுறையில் இந்த மாற்றங்களின் மாணவர்களின் கல்வியையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் நலன்களை இது பாதிக்கும் என்று கல்வியாளர்களில் ஒரு தரப்பினர் கவலையுடன் கூறுகிறார்கள்.

இது குறித்து கல்வியாளர் ந.மணியிடம் பேசினோம்.

“கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் பெரும்பாலான மாணவர்களின் கல்வித் தரம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பது யதார்த்த நிலை. குறிப்பாக, சுயநிதி அடிப்படையில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வந்த பிறகு, மாணவர்களின் கல்வித் தரம் மேலும் குறைந்திருக்கிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தால், அந்த கல்லூரியின் நன்மதிப்பு குறையும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

அதனால், அதன் மாணவர் சேர்க்கை குறையும். அதன் காரணமாக, கல்லூரியின் வருமானம் குறையும். எனவே, தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்கள் தேர்வு எழுதவில்லையென்றாலும், எப்படியாவது தேர்ச்சி பெறவைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்படும் மாற்றங்களை சுயநிதி கல்லூரிகள் விரும்பமாட்டார்கள். சுய நிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தேர்வு முறை மற்றும் விடைத்தாள் திருத்தும் முறைகளில் இருக்கும் பிரச்னைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தளவில், பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களும் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் பின்தங்கிய மாணவர்களும்தான் படிக்கிறார்கள். முதலாம் ஆண்டு செமஸ்டர்கள் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியர் பேப்பர்கள் இருந்தால், எப்படியாவது இரண்டாம் ஆண்டில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள். அதேபோல இரண்டாம் ஆண்டு அரியர் பேப்பர்களை மூன்றாம் ஆண்டில் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள்.

எப்படியாவது சிரமப்பட்டு பட்டம் பெற்றுவிடுகிறார்கள். அல்லது, மூன்று ஆண்டுகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அரியர் பேப்பர்களை பிறகு எழுதி தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகிறார்கள். அதன் பிறகு, ரயில்வே, வங்கி, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கடுமையாக படிக்கிறார்கள். அந்த முயற்சியில் பலர் வெற்றிபெறுகிறார்கள். மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு அவர்கள் போய்விடுகிறார்கள்.

இந்த வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது என்பது கவலைக்குறிய அம்சமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான், இரண்டாம் ஆண்டுக்கு செல்ல முடியும். இல்லையென்றால், முதலாம் ஆண்டைத் தாண்ட முடியாது. அதேபோல, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டுடன் படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறவும் தேசிய கல்விக்கொள்கை வழிவகை செய்கிறது. மூன்று ஆண்டு படிப்பை நிறைவு செய்யாமல், முதலாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு, அல்லது இரண்டாம் ஆண்டை நிறைவுசெய்துவிட்டு வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஸ்டாலின், ரவி

ஆனால், இந்த சான்றிதழால் அந்த மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு எந்த பயனும் இல்லை. முதலாம் ஆண்டை முடித்துவிட்டு வெளியேறும் மாணவர்கள், விரும்பினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்கலாம் என்று தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படியெல்லாம் யாரும் மீண்டும் கல்லூரிக்கு வந்து படிக்க வாய்ப்பு இல்லை. அந்த வகையில், நீட் தேர்வைவிட இது ஆபத்தான ஒன்று” என்கிறார் கல்வியாளர் ந.மணி.

மாணவர்களின் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. அந்த அடிப்படையில், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தினார். அதற்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு இருப்பதால், தேசிய கல்விக்கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது கேள்விக்குறியாக இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/education/will-national-education-policy-affect-arts-and-science-college-students

உக்ரைன்: `அவன் இல்லாம, நான் வரமாட்டேன்!' - தனது நாய் இல்லாமல் நாடு திரும்ப மறுக்கும் இந்திய மாணவர்

போர் தீவிரம் அடைந்துள்ள உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இந்தியாவிற்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் சிலர் உக்ரைன் எல்லையில் சிக்கிக்கொண்டுள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ரிஷப் கவுசிக் என்ற மாணவர் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் தன்னுடன் ஆசையாக வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்திய மாணவர்கள் அனைவரும் இந்தியாவிற்கு செல்வதால் ரிஷப்பும் இந்தியா செல்ல விரும்புகிறார். ஆனால் தன்னுடன் தனது வளர்ப்பு நாயையும் அழைத்து செல்லவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

நாடு திரும்பிய இந்திய மாணவர்கள்

நாய் இல்லாமல் வாருங்கள் என்று அதிகாரிகள் கேட்டதற்கு அப்படி வர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ``எனது வளர்ப்பு நாயை இந்தியாவுக்கு கொண்டு செல்ல என்ன ஆவணங்கள் தேவையோ சொல்லுங்கள், ஏற்பாடு செய்கிறேன்” என்று ரிஷப் கூறிக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து ரிஷப் கூறுகையில், ``எனது வளர்ப்பு நாயை என்னுடன் அழைத்து செல்ல அனைத்து ஆவணங்களையும் தயார் செய்கிறேன். ஆனால் புதிது புதிதாக ஆவணங்களை கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை. டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியபோது, அந்த அதிகாரி கண்டபடி திட்டிவிட்டு உதவி செய்ய மறுத்துவிட்டார்.

வளர்ப்பு நாயுடன் ரிஷப்

அரசு எனக்கு சட்டப்படி தேவையான ஆவணங்களை வழங்கி இருந்தால், நான் இந்நேரம் இந்தியாவில் இருந்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதோடு தனது நாயுடன் சேர்த்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது கீவ்-ல் இருக்கும் பதுங்கு குழியில் ரிஷப் தனது வளர்ப்பு நாயுடன் பதுங்கி இருக்கிறார். அடிக்கடி வெடிகுண்டு சத்தம் கேட்பதால் தனது வளர்ப்பு நாய் அடிக்கடி அழுதுகொண்டே இருப்பதாக ரிஷப் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அரசு எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ரிஷப்பிற்கு தனக்கு வளர்ப்பு நாய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/india/student-refusing-to-return-from-ukraine-without-a-pet-dog

இன்றைய ராசி பலன் | 28/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/28022022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

சனி, 26 பிப்ரவரி, 2022

யூரோ டூர் - 27: ஐரோப்பிய ஒன்றியம் உருவான கதையும், அதனால் உறுப்பு நாடுகள் அடைந்த வளர்ச்சியும்!

சோவியத் வீழ்ச்சியில் துளிர்த்த கிழக்கு ஐரோப்பா

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி கிழக்கு ஐரோப்பாவில் பெரும் புவிசார் அரசியல் எழுச்சியின் முக்கிய காலகட்டமாக வரலாற்றில் பதியப்பட்டது. சிதைந்த சோவியத் சாம்பலிலிருந்து 15 புதிய நாடுகள் முளைத்தன.

பால்டிக் நாடுகளான லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா தமது சுயாட்சியை முதலில் அடைந்தன. அதைத்தொடர்ந்து மக்கள் வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்காகப் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்ததன் மூலம் உக்ரைன் அடுத்ததாக வெளியேறியது. இது சோவியத் ஒன்றியத்திற்கு மரண அடியாக இருந்தது. ஏனெனில் உக்ரைனின் வெளியேற்றம் சோவியத் எனும் ஆலவிருட்சத்தை வேரோடு அசைத்துப் பார்த்தது.

சோவியத் யூனியன்

பல பால்டிக் நாடுகள் சோவியத் சரிவை அடுத்து கம்யூனிசத்தை கைவிட்டு மேற்குலகோடு இணைந்து ஐரோப்பிய சமூக அங்கத்துவத்தை பெறுவதில் அக்கறை காட்டின. 1991-ல் முடிவுக்கு வந்த வார்சா உடன்படிக்கையைத் தொடர்ந்து நேட்டோவில் உறுப்பினராக இணைந்து கொள்ளவும் இவை ஆர்வம் கொண்டன. அதில் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நேட்டோவில் இணைந்து கொண்டன. ஜோர்ஜியா, பெலரஸ், உக்ரைன் போன்ற சில முந்தைய சோவியத்தின் நாடுகள் மட்டும் மிஞ்சியுள்ள நிலையில், நேட்டோவில் இணைவதற்கான உக்ரைனின் முடிவுக்கு ரஷ்யா கடும் எதிர்பை தெரிவித்து வந்தது. அந்தப் பதற்றம் கடைசியில் யுத்தமாக இன்று வெடித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் வெடித்துள்ள ஒரு பெரிய போரின் முடிவு என்னவாகும் என்ற கேள்வி முழு உலகையுமே சூழ்ந்துள்ளது. கிழக்கு நோக்கி தன் எல்லையை விரிவுபடுத்த மாட்டோம் என நேட்டோ வழங்கிய வாக்குறுதியை மீறி தற்போது தனது எல்லையில் உட்புக முயல்வதைக் கடுமையாகத் கண்டிக்கும் ரஷ்யா, அது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதி, காட்டமாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சரி, நிகழ்காலத்தை விடுத்து, வரலாற்றின் பக்கமே போவோம். சோவியத் ஒன்றியத்தின் எட்டாவது மற்றும் இறுதித் தலைவருமான Mikhail Sergeyevich Gorbachev-ன் ராஜினாமாவைத் தொடர்ந்து ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தம் புதிய சுயாட்சியை அறிவித்தன.

கம்யூனிசத்திற்குப் பிறகான ஐரோப்பா

என்னதான் சோவியத் வீழ்ந்தாலும் கம்யூனிசத்திலிருந்து விலகுவது ஒரே இரவில் நடக்கவில்லை. 1989 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரங்கள் பெரும்பாலும் தேக்கநிலையிலேயே இருந்தன. பல பகுதிகளில் உள்ள சந்தைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் சரக்குகளைப் பராமரிக்கவும் மறுசீரமைக்கவும் போராடியதால், பொருள்கள் பெரும்பாலும் பற்றாக்குறையாக இருந்தன. IMF மற்றும் உலக வங்கி போன்ற மேற்கத்திய நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பாவில் பொருளாதார மாற்றத்திற்கான பல விதிமுறைகளை வகுத்தன. ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பியப் பொருளாதாரத்தை உறுதியாகப் பேணவும், வர்த்தக சந்தைப்படுத்தல் சமநிலையை உருவாக்கவும், ஐரோப்பியர்களிடையே கட்டுப்பாடுகள் இல்லாத போக்குவரத்து முறைகளை உருவாக்கவும் பல சர்வதேச நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நிலக்கரி மற்றும் எஃகு தொழிற்சாலைகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1951இல் பாரிஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஆறு நாடுகள் தங்கள் நிலக்கரி மற்றும் எஃகு தொழில்களை பொதுவான நிர்வாகத்தின் கீழ் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் எந்த ஒரு நாடும் கடந்த காலத்தைப் போல மற்ற நாடுகளுக்கு எதிராகப் போர் ஆயுதங்களை உருவாக்க முடியாது என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் உருவான ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் (European Coal and Steel Community) இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை (EU) உருவாக்க வழிவகுத்தது.

European Union and European Economic Area (EEA)

ஐரோப்பாவில் பல புதிய நாடுகள் முளைத்ததைத் தொடர்ந்து நாடுகளுக்கு இடையே மற்றுமொரு ரத்தக்களரி ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நிறுவனம் நிறுவப்பட்டது. அமைதியான, ஒன்றுபட்ட மற்றும் வளமான ஐரோப்பாவைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நவம்பர் 1, 1993, மாஸ்ட்ரிக்ட், நெதர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட European Union, 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாக பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியத்தில் தன் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இன்று செயல்படுகிறது.

உண்மையில் பார்க்கப்போனால் ஹிட்லர் கண்ட கனவும் இதுதான். ஒன்றிணைந்த ஐரோப்பா, அதில் ஒற்றை நாணயம், ஒரே சட்டம், எல்லைகள் இல்லா வர்த்தகம் என ஹிட்லர் விரும்பியதும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு அமைப்பைத்தான். ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி சர்வாதிகாரத்தின் அடர்ந்த கூறுகளைக் கொண்டிருந்தது. பொதுவாக ஐரோப்பா என்று நோக்காமல் அனைத்தையும் ஜெர்மனியை மையமாக வைத்தே அவர் சிந்தித்தது தவறாகிப் போனது. ஹோலோகாஸ்ட், யூதப் படுகொலைகள், சோவியத் மீதான தாக்குதல் போன்ற சில விஷயங்களை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் இன்று வரலாறு விதமாக மாறியிருக்கும். நாம் பார்க்கும் ஐரோப்பாவும் வேறு உருவம் பெற்றிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பாவில் யூரோப்பியன் யூனியன் செயற்பாடுகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் ஐரோப்பிய ஒன்றியம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஐரோப்பாவில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, ஐரோப்பியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெருமளவில் உதவுகிறது. இது தன் உறுப்பு நாடுகளின் பொதுவான பொருளாதார, அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நிர்வகிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய வலைதளத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கங்களாக, ஐரோப்பியக் குடியுரிமையை நிறுவுதல், சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல், ஐரோப்பியப் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் உலகில் ஐரோப்பாவின் பங்கை வலியுறுத்துதல் போன்றன வரையறுக்கப்பட்டுள்ளன. அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பொதுவான ஒரு ஐரோப்பிய நாணயத்தை இது அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் ஸ்காண்டிநேவியா நாடுகள் மட்டும் இணைந்து கொள்ளவில்லை.

ஐரோப்பிய யூனியனில் 447.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் முக்கிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. எந்தவொரு உறுப்பு நாடுகளும் அதன் சொந்த அரசியலமைப்பு தேவைகளுக்கு ஏற்ப யூனியனில் இருந்து விலகவோ வெளியேறவோ முடிவு செய்யலாம். ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் எந்தவொரு நாட்டின் குடிமகனும் வேலை அனுமதியோ அல்லது விசாவோ இல்லாமல் அதன் 27 உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வாழவும் வேலை செய்யவும் முடியும். அதே வழியில், ஓர் உறுப்பு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேறு எந்த உறுப்பு நாட்டிலும் எந்த சிறப்பு அனுமதிகளோ அல்லது கூடுதல் வரிகளோ இல்லாமல் விற்கப்படலாம்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளை ஐரோப்பியச் சுதந்திர வர்த்தகப் பகுதி (EFTA) நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்காக 1994ல் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். EEA 31 நாடுகளைக் கொண்டுள்ளது. அதில் 28 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனும் அடங்கும்.
யூரோ கரன்ஸி

ஐரோப்பிய ஒன்றியம் ஓர் அமைப்பாக உருவானதில் வர்த்தக ரீதியாக மிகப்பெரும் நன்மை அடைந்தது ஜெர்மனியும் பிரான்ஸுமே. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பது ஏனைய சிறிய நாடுகளுக்குக் கூட பெரியளவில் வரப்பிரசாதமாகவே போனது. European பாஸ்போர்ட், வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளில் இலவசக் கல்வி, வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி, குழந்தைப் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள், கட்டுப்பாடு இல்லாத வர்த்தகம், எந்த ஐரோப்பிய நாட்டிலும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வேலை செய்யலாம் போன்ற பல காரணங்களினால் தற்போது அங்கத்துவம் பெறாத ஐரோப்பிய நாடுகளும் EU-வில் அங்கம் வகிக்க முட்டி மோதுகின்றன. அதேவேளை UK போன்ற நாடுகள் EU-விலிருந்து விலகவும் இதுவே காரணம். அது பற்றி நாம் மற்றுமொரு அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். இந்தப் பணக்கார நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பது தமக்கு பெரும் சுமை எனக் கருதக் காரணம் அவர்களின் தனிநபர் வருமானத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய அங்கத்துவக் கட்டணம் மற்றும் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளது என்பதுதான். இதுவே நார்வே, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளை அதிருப்தி அடையவும் செய்துள்ளன.

யூகோஸ்லாவியாவின் பிளவு

ஐரோப்பாவின் தெற்கு ஸ்லாவிக் மக்களுக்கு பால்கன் தீபகற்பத்தில் தமக்கான ஒரே மாநிலம் இருப்பது நல்ல யோசனையாக ஒரு காலத்தில் தோன்றியது. விளைவு, முதல் உலகப்போருக்குப் பின்னர் தெற்கு ஸ்லாவ்களின் நிலம் என்ற பொருள் தரும் யூகோஸ்லாவியா ஆறு முக்கிய ஸ்லாவிக் நாடுகளை ஒன்றாக இணைத்து உருவானது. இந்த மக்கள் Servo-Croatian எனும் ஒரு பொதுவான மொழியைப் பேசினாலும் வெவ்வேறு வரலாறுகள், வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் தமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டிருந்தனர். முதலாம் உலகப் போருக்குப் பிறகு, யூகோஸ்லாவியா எனும் பெரும் தேசம் சோவியத்தின் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பலமாகக் கட்டுண்டிருந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு இந்தக் குடியரசும் வீழ்ந்தது.

சோவியத்தின் ஓர் அங்கமாக இல்லாவிட்டாலும் தீவிர கம்யூனிஸ்ட் தேசமாக இருந்த யூகோஸ்லாவியா சோசலிச பெடரல் குடியரசு ஜூன் 25, 1991 - ஏப்ரல் 28, 1992 வரையிலான காலப்பகுதிக்குள் ஐந்து மாநிலங்களாக உடைந்தது.
யூகோஸ்லாவியா

இன-தேசியவாதத்தின் எழுச்சி, தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் செர்பிய விரிவாக்கங்களால் உடைந்த யூகோஸ்லாவியா எனும் பரந்த தேசத்தின் துண்டுகளிலிருந்து போஸ்னியா, ஹெர்சகோவினா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லோவேனியா, மற்றும் யூகோஸ்லாவியா ஃபெடரல் குடியரசு (பின்னர் செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ என அழைக்கப்பட்டது) எனும் ஐந்து புதிய தேசங்கள் மலர்ந்தன.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லையில்லா பயணத்தின் ஆரம்பம்

ஜூன் 14, 1985ல் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் பொதுவான எல்லைகளில் சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் படிப்படியாக ஒழிப்பது தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் எல்லையில் உள்ள லக்சம்பேர்க்கின் ஷெங்கன் எனும் ஒரு சிறிய நகரத்தில் இது கையெழுத்திடப்பட்டதால் அதன் நினைவாக இந்த ஒப்பந்தம் ஷெங்கன் ஒப்பந்தம் (Schengen Agreement) எனப் பெயரிடப்பட்டது.

ஜூன் 19, 1990 அன்று, ஐரோப்பா முழுவதும் ஷெங்கன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் முக்கிய விஷயங்களாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பொதுவான எல்லைச் சோதனைகள் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான பொதுவான பகுதிகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன.

இதன் ஏனைய முக்கிய அம்சங்களாக EU அல்லாத குடிமக்கள் ஷெங்கன் பகுதிக்குள் நுழைவது மற்றும் குறுகிய காலம் தங்குவது தொடர்பான விதிகளை நிர்ணயித்தல், புகலிட விவகாரங்கள் (எந்த உறுப்பு நாட்டிலும் புகலிடத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படலாம்) தொடர்பான தீர்மானம், எல்லை தாண்டிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான போலீஸ் ஒத்துழைப்பு, மற்றும் நீதித்துறை விஷயங்களில் ஷெங்கன் நாடுகளிடையே ஒத்துழைப்பு போன்றவை முடிவு செய்யப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பியச் சமூகம் இதன் மூலம் கணிசமான நன்மையைப் பெற்றது. மார்ச் 1995-இல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேரத்தில், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகியவை ஏற்கெனவே இருந்த ஐந்து உறுப்பினர்களுடன் புதிதாக இணைந்தன. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் போன்றவை இதில் இணைந்தன. 2007-ம் ஆண்டில், செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாக ஷெங்கன் பகுதி விரிவடைந்தது. 2008-ல் சுவிட்சர்லாந்தையும் 2011-ல் லிச்சென்ஸ்டைனையும் சேர்த்ததன் மூலம் இப்பகுதி தற்போது மொத்தம் 26 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பாவின் வெற்றிகரமான ஒற்றை அங்கமாக மாறியது.

ஷெங்கன் பகுதியானது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வசிக்க, வேலை செய்ய மற்றும் உள் எல்லைகளில் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கிறது. கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஐரோப்பியர்கள் ஒரு ஷெங்கன் நாட்டிலிருந்து மற்றொரு ஷெங்கன் நாட்டில் பணி நிமித்தமாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் ஷெங்கன் உள் எல்லைகளைக் கடக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஷெங்கன் பகுதிக்குள் 1.25 பில்லியன் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது ஐரோப்பியச் சுற்றுலாத் துறைக்கும் பெருமளவில் லாபம் சேர்க்கிறது.

அது மட்டுமல்ல, ஷெங்கன் பகுதி அதன் பங்கேற்பு மாநிலங்களுக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார நன்மைகளையும் கொண்டு வருகிறது. அது நிறுவப்பட்டதிலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் காலப்போக்கில் அதிகரித்து ஐரோப்பிய வணிகங்களின் வளர்ச்சியை எளிதாக்கியது. உதாரணத்துக்குக் கடந்த காலங்களில் லாரிகள் குறிப்பிட்ட ஷெங்கன் எல்லைகளைக் கடக்கப் பல மணிநேரம் ஆனது. ஆனால், இப்போது அது சில மணித்துளிகளாகக் குறைக்கப்பட்டுவிட்டது. இது ஐரோப்பா முழுவதும் பொருள்களை நகர்த்துவதை மிகவும் எளிதாகவும், விரைவாகவும், மலிவாகவும் ஆக்கியது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பாவில் வணிகம் துளிர்க்கத் தொடங்கியது. இன்று நாம் நமது அன்றாட வாழக்கையில் ஒரு அங்கமாகிப் போன சில பிரம்மாண்டமான பிராண்ட்கள் இந்தக் காலகட்டத்தில்தான் பிறந்தன. பனிப் போரின் பின்னர் ஐரோப்பாவில் முளைத்து இன்று உலகளாவிய ரீதியில் ஆலவிருட்சமாய் விரிந்து வேர்விட்டு, சக்கை போடு போடும் ஐரோப்பிய கம்பெனிகள் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாமா?!

யூரோ டூர் போலாமா?!



source https://www.vikatan.com/social-affairs/international/euro-tour-27-the-formation-of-the-european-union-and-how-it-benefitted-the-nations

Doctor Vikatan: பல ஆண்டுகளாக துன்புறுத்தும் பைல்ஸ் பிரச்னை; அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வா?

எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்புற மூலநோய் பிரச்னை இருக்கிறது. இதுவரை எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இப்போது அது அளவில் பெரிதாவதுடன், லேசான அரிப்பும் எரிச்சலும் இருப்பதை உணர்கிறேன். என் அம்மாவுக்கும் இதே பிரச்னை இருந்து பைல்ஸ் அறுவை சிகிச்சை செய்ததில் அவர் இறந்துவிட்டார். அதனால் ஆபரேஷன் செய்துகொள்ள எனக்கு பயமாக இருக்கிறது. இதைக் குணப்படுத்த வேறு வழிகள் உண்டா?

- ரோஜா பானு (விகடன் இணையத்திலிருந்து)

பினாக் தாஸ்குப்தா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா.

``உங்களுக்கு இருக்கும் எக்ஸ்டெர்னல் பைல்ஸ் பிரச்னையால் மலச்சிக்கலும், வீக்கமும், அரிப்பும், வலியும் இருக்கலாம். பெரும்பாலும் ஆசனவாய்ப் பகுதியில் ரத்தம் வராது. ஒருவேளை ரத்தம் வந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

உங்கள் அம்மாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் செய்ததால் அவர் இறந்துவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். பைல்ஸ் அறுவைசிகிச்சை ரொம்பவும் எளிமையானது. அதில் இப்படி உயிரிழப்பு நேர வாய்ப்பே இல்லை. உங்கள் அம்மாவுக்கு வேறு பிரச்னைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. அவரது மெடிக்கல் ரிப்போர்ட், அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் என மற்ற தகவல்கள் தெரிந்தால்தான் அது குறித்துச் சொல்ல முடியும்.

உங்கள் விஷயத்தில் நீங்கள் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் பரிசோதித்துப் பார்த்தபிறகுதான் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என நீங்களாக நினைக்க வேண்டாம்.

Doctor

சில வேளைகளில் அந்தப் பகுதியில் தடவும் க்ரீம்கள், உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் சிரப் மாதிரியான மருந்துகள் மூலமே குணப்படுத்த முடியும். ஆனால் மருத்துவரையே அணுகாமல் அலட்சியமாக இருப்பது மட்டும் வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/what-is-the-solution-to-external-piles-problem

முளைத்த வெந்தய சாலட் | பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு | கீரை தரிவால் - ஹெல்தி வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்கு ரத்தச்சோகை பிரச்னை இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் அடக்கம். 'நல்லாதான் சாப்பிடறோம்...' எனச் சொல்லிக்கொள்பவர்களுக்கும் ரத்தச்சோகை இருக்கலாம். எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பதைவிடவும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.

இந்த வார வீக் எண்டுக்கு ரத்தச்சோகையை விரட்டும், அயர்ன்ரிச் உணவுகளை முயற்சி செய்யலாமே...

தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் - 100 கிராம்
குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வறுத்த எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - சிறிதளவு (விரும்பினால்)
வறுத்த வேர்க்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
வறுத்த ஆளி விதை - சிறிதளவு
வறுத்த மோர் மிளகாய் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

முளைத்த வெந்தய சாலட்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முளைத்த வெந்தயத்துடன் குடமிளகாய், வறுத்த எள், தேங்காய்த்துருவல், வறுத்த வேர்க்கடலை, வறுத்த ஆளி விதை, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, மோர் மிளகாயைத் தாளித்து சாலட்டுடன் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.

குறிப்பு: வெந்தயம் மற்றும் ஆளி விதையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

பொட்டுக்கடலை, ஓட்ஸ் - தலா அரை கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
கொப்பரைத்துருவல் - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
(பொடியாக நறுக்கவும்)
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை

பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு

செய்முறை:

வெறும் வாணலியில் ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்துப் பொடித்து எடுக்கவும்.

வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் கொப்பரைத்துருவல், ஏலக்காய்த்தூள், அரைத்த ஓட்ஸ், பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: பொட்டுக்கடலை, ஓட்ஸில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

கம்பு அவல் - 2 கப்
பிரியாணி இலை, மராட்டி மொக்கு - தலா ஒன்று
ஏலக்காய், கிராம்பு - தலா 2
அன்னாசிப்பூ - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 100 கிராம் (தோலுரித்தது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம்
சிறிய சோயா உருண்டைகள் - 20 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
வதக்கிய புதினா இலைகள் - அரை கப்
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

புதினா கம்பு அவல் பிரியாணி

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீரில் கம்பு அவலை போட்டு அலசி உடனே பிழிந்தெடுக்கவும். சோயா உருண்டைகளைச் சூடான தண்ணீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பட்டை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கொண்டைக்கடலை, சோயா அரைத்த விழுதைச் சேர்க்கவும். நல்ல வாசனை வந்த பிறகு அவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு கலந்தால் பிரியாணி ரெடி.

குறிப்பு: கொண்டைக்கடலை, புதினா, சோயா, கம்பில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்
அரைக்கீரை - அரை கட்டு
(ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கவும்)
சீரகம் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
உரித்த பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள், சர்க்கரை, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கீரை தரிவால்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் பாசிப்பயறு, கீரை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் தக்காளி, வேகவைத்த கீரை, பயறு கலவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிச் சுவைக்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/fenugreek-salad-peanut-oats-laddu-mint-millet-poha-biriyani-weekend-recipes

பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-february-28th-to-march-6th