Ad

புதன், 3 மே, 2023

சிவகாசி: சட்டவிரோத மதுவிற்பனை... போலீஸ், பார் ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு; 4 பேர் கைது

சிவகாசி அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "விருதுநகர் மாவட்டம் சிவகாசி சரக்கத்துக்குட்பட்ட எம்.புதுப்பட்டியில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின்பேரில், எம்.புதுப்பட்டி காவல் ஆய்வாளர் நவநீதன் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் உள்ள மதுக்கடை பாரில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விற்பனை கவுண்டர்களில் அல்லாமல், பாருக்குள் பெட்டிப்பெட்டியாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்துகையில், பார் ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாரில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 665 பாட்டில்கள், காலி சாக்குப்பைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து அரசு விதிகளுக்கு புறம்பாக மதுவிற்பனை செய்தல், அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட எம்.புதுப்பட்டியை சேர்ந்த முருகன், ரெங்கபாளையத்தை சேர்ந்த பிரபு, தவச்செல்வம், பன்னீர்செல்வம் ஆகிய நான்கு பேரை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.

மற்றொரு சம்பவமாக, விருதுநகர் மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டவிரோத மதுவிற்பனை வழக்கில் பிடிபட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை அதிகாரிகள் அழித்தனர்.



source https://www.vikatan.com/crime/sivakasi-illegal-liquor-sales-4-bar-salesman-were-arrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக