அரக்கோணத்தை அடுத்துள்ள சோகனூரில் தலித் இளைஞர்கள் இருவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் சூழலில் பெரும் புயலை ஏற்படுத்திவருகிறது. குடி போதையில் நடந்த அடிதடியில் இளைஞர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக ஒரு தரப்பினரும், கொலைச் சம்பவத்தின் பின்னணியில், சாதி, அரசியல் மற்றும் மணல் கொள்ளை விவகாரங்கள் இருப்பதாக மற்றொரு தரப்பினரும் படபடத்து வருகின்றனர்.
இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், ''சாதிய வெறுப்பு அடிப்படையிலான பின்னணியிலேயே இந்தப் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொண்டே பின்னரே ஆதிக்க சாதியினர், அவர்களை அடித்துக்கொன்றிருக்கிறார்கள்'' என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் எடுத்துவைத்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட பா.ம.க இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ''முழுக்க முழுக்க மது போதையினால் நிகழ்ந்த தனிப்பட்ட நபர்களின் மோதலை வி.சி.க தலைவர் திருமாவளவன் சாதி அரசியலாக திசை திருப்புவது கண்டிக்கத்தக்கது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட வி.சி.க-வின் படித்த இளைஞர்கள் திருமாவளவனை விட்டு விலகத் தொடங்கிவிட்டனர்'' என குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, வி.சி.க ஆதரவாளர்கள் இணையதளம் வழியே திருமாவளவனுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பரப்பத் தொடங்கியதோடு, 'மை லீடர் திருமா' (#myleaderthiruma) என்ற ஹேஷ்டேகை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர்.
இதற்கிடையே, சோகனூர் இரட்டைக்கொலைச் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட புரட்சி பாரதம் கட்சித் தலைவர், ''குடி போதையினால் ஏற்பட்ட தகராறையடுத்தே இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது'' என்று செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட மோதல், இப்போது சாதிய வன்மத்துடன் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. காவல்துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுத்து பொது அமைதியைக் காத்திட வேண்டும்' என்றும் கோரியுள்ளார்.
இரட்டைப் படுகொலைச் சம்பவத்தை முன்னிட்டு இப்படி தமிழக அரசியல் கட்சியினர் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவரும் வேளையில், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டபோது, ''ஒரு சம்பவத்தை அப்படியே சம்பவமாக மட்டுமே பார்ப்பதென்பது மேலெழுந்தவாரியான பார்வை. சம்பவத்துக்கான பின்னணி என்னவென்றும் பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்கும்போது இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏற்கெனவே சாதியப் புகைச்சல்களும் இருந்திருக்கின்றன.
எனவே, இந்தப் படுகொலை சம்பவமானது சந்தையில் நடைபெற்றதா அல்லது சாராயக் கடையில் நடைபெற்றதா என்றெல்லாம் இடத்தைப்பற்றி ஆராயவேண்டிய தேவையில்லை. மாறாக எந்த வகையான ஆதிக்க உணர்வு பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் கவனிக்கவேண்டும்.
இது மது போதையில் நடைபெற்ற கலவரம் என்றால், சாராயக் கடையோடு அந்த மோதல் முடிவுபெற்றிருக்க வேண்டியதுதானே...? ஏன் கத்தி, கம்பு, கோடரியோடு வெளியிலிருந்து 40, 50 ஆட்கள் வந்து அடிதடியில் ஈடுபட்டிருக்கவேண்டும்? கொடூர தாக்குதல் நடத்தியதால்தான் சம்பவ இடத்திலேயே 2 இளைஞர்களும் செத்துப் போயிருக்கிறார்கள். இன்னும் 2 இளைஞர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை, சாதாரண கோபத்தில் நடைபெற்றது, சாதாரண கைகலப்பு என்றெல்லாம் சமாதானம் சொல்லமுடியும்?
Also Read: ``படித்தவர்கள் யார்... படிக்காதவர்கள் யார்..?!” - திருமாவளவன் விளக்கம்
கீழ வெண்மணியில் ஒருநாள் தீவைத்துக் கொளுத்தினார்கள் என்றால் அதன் பின்னணியில் என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க வேண்டாமா? மேலவளவு படுகொலை, விழுப்புரம் படுகொலை சம்பவங்களின் பின்னணியில் எவ்வளவு கொடூரமான நிகழ்வுகளெல்லாம் இருக்கின்றன. நம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக சரியான தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. அரசாங்கம்தான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு என்று சமாதானப்படுத்துகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வீரியமாக பயன்படுத்தினால் மட்டுமே இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். தலித் மக்கள் நிம்மதியாக வாழமுடியும்!'' என்கிறார் உறுதியாக.
'மது போதையினால் நடைபெற்ற குற்றச் சம்பவம் அல்ல. தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை சாதிய ரீதியிலான வன்மத்துடன் திட்டமிட்டே அடித்துக் கொன்றிருக்கிறார்கள்' என்ற எதிர்த்தரப்பினரது குற்றச்சாட்டு குறித்து பா.ம.க பொதுசெயளாளர் வடிவேல் ராவணனிடம் விளக்கம் கேட்டபோது, ''எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரியாது. ஆனால், மோதிக்கொண்ட இருதரப்பினரும் ஒன்றாகத்தானே மது அருந்தியிருந்திருக்கிறார்கள். ஆக, சாராயம் குடித்தவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலை சாதியத்தோடு கொண்டுவந்து பொருத்திப் பார்க்கிறார்கள். இப்படி தனிப்பட்ட மோதல்களையும்கூட சாதியக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறான போக்கு.
Also Read: `வனச் சரகர்களுக்கும், வனத்துறைக்கும் இவ்விருதை அற்பணிக்கிறேன்!’ - சர்வதேச விருது வென்ற வனச் சரகர்
எங்களை குற்றம் சொல்லவேண்டும் என்ற கண்ணோட்டத்தோடே கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு பிரச்னைகளைப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது? குடிகாரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்றாலே, அதை தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான மோதலாகத்தான் கருதவேண்டுமே தவிர...
அதை வேறு எதனுடனும் சம்பந்தப்படுத்திப் பார்க்கக்கூடாது. எனவே, சோகனூர் இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் எந்த சாதியப் பின்புலமும் இல்லை என்பதுதான் எங்கள் தரப்பு வாதம்!'' என்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/background-of-the-arakkonam-double-massacre-a-political-conflict
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக