Ad

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நீலகிரி: மருத்துவ குணம் மிக்க அன்னாசி கொய்யா... கண்டுகொள்ளுமா தோட்டக்கலைத்துறை?

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆங்கிலேயர்களால் 1874 ஆம் ஆண்டு சிம்ஸ் பூங்கா உருவாக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த 1,200 வகையான தாவரங்கள் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அறிவிக்கப்பட்ட அரிய வகை மரங்கள் அதிகளவில் இந்த பூங்காவில் காணப்படுகின்றன.

Pineapple guava

Pineapple guava (feijoa sellowiana) என‌ அழைக்கப்படும் அன்னாசி கொய்யா பழ மரங்கள் சிலவற்றை, 1926-ம் ஆண்டு பிரேசிலில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மரங்களில் தற்போது அன்னாசி கொய்யா பழங்கள் காய்த்துள்ளன. மேலும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒரு சிலரது குடியிருப்புகளில் பழங்கள் காய்த்துள்ளன. சிம்ஸ் பூங்கா வளாகத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஒரு பாக்கெட் பழங்களை ரூ.30க்கு விற்பனை செய்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்த இந்த வகை கொய்யா பழ மரங்களை அதிகரிக்கச் செய்து மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

ஓய்வுபெற்ற தோட்டக்கலைத்துறை அதிகாரியும் தாவரவியல் ஆய்வாளருமான ராம்சுந்தரிடம் அன்னாசி கொய்யா குறித்து பேசினோம், ``குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் மட்டுமே வளரக்கூடிய இந்த வகை பழ மரங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட இந்த பழங்களில் விட்டமின் சி அதிகளவில் உள்ளன.

ரத்ததில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மூளை நரம்பு மண்டலைத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. நம் நாட்டில் அரிய வையான பழமாக கருதப்படும் இந்த வகை பழ மரங்களை அர்ஜென்டினா போன்ற நாடுகளில் அதிகளவு பயிர் செய்கின்றனர். இவற்றை இங்கு சாகுபடி செய்வது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை."என்றார்.

Pineapple guava

இது குறித்து நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``இந்த பூங்காவில் 95 ஆண்டுகளைக் கடந்த பழமையான அன்னாசி கொய்யா பழ மரங்கள் சில உள்ளன. இன்றளவும் பழங்கள் காய்க்கின்றன. இவற்றில் மருத்துவ குணம் நிறைந்திருப்பது உண்மைதான். நாற்றுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த திட்மிட்டுள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/agriculture/will-the-horticulture-dept-focus-on-boosting-pineapple-guava-cultivation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக