Ad

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஈஷாவின் 'கோயில் அடிமை நிறுத்து' : ஆதரவும் எதிர்ப்பும் விளக்கமும்...

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் “கோயில்கள் அடிமை நிறுத்து” என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். #FreeTNTemples & #People_HaveSpoken என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிதைவுற்று கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் ஜக்கி வாசுதேவின் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சுப.வீரபாண்டியன்

ஜக்கி வாசுதேவின் இந்த இயக்கம் குறித்து உங்கள் பார்வை என்ன என, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி ஆகியோரிடம் பேசினோம்.

Also Read: `அரசு கட்டுப்பாட்டில்தான் கோயில்கள் இருக்கும்!' - அடித்துச் சொல்கின்றன அதிமுக., திமுக

சுப.வீரபாண்டியன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் பொதுச்செயலாளர் 

“இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடு என்று கூறுவதில் நமக்கு மூன்று விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

1. வருண-சாதி அடிப்படையில் பிரிந்து கிடைக்கும் சமூகத்தில், அண்ணல் அம்பேத்கர் கூறியபடி, படிப்படியான சமத்துவமின்மை இங்கு இருப்பது வெளிப்படையான உண்மை. அப்படியிருக்கும்போது, எந்த இந்துவிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்கின்றனர்?

2. பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் உள்ளன. அவற்றை அங்குள்ள அரசுதான் நிர்வாகம் செய்கிறது. அங்கு ஏன் இந்தக் கோரிக்கை எழவில்லை?

3. பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்தபோதும், இப்போதும் குஜராத்தில் இந்துக் கோயில்கள் தனியார் வசம் இல்லை, அரசிடம்தானே உள்ளன?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இவர்களிடம் விடை இருக்கிறதா?

பொக்கிஷ நாதர் கோயில்

இந்த மூன்று வினாக்களுக்கு அவர்களிடமிருந்து விடை வரட்டும்.

அதற்கு முன் சில வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்துக்களின் பண்பாட்டில் கிறித்துவர்கள் (ஆங்கிலேயர்கள்) தலையிடுகின்றனர் என்ற குற்றச்சாற்று எழுந்தபின்னர், 1863 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 20 ஆவது பிரிவு, மதம் தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும் அரசு தலையிடாது என்று கூறியது. அன்றிலிருந்து 1924 ஆம் ஆண்டு வரையில், இந்துக் கோயில்கள் தனியார் வசமே இருந்தன. ஆனால், அங்கு நிர்வாகம் ஊழல் மலிந்ததாக இருக்கிறது என்றும், ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் கோயில்கள் சிக்கிக் கொண்டுள்ளன என்றும், எதிர்க்குரல்கள் எழுந்தன. அக்குரல்களை எழுப்பியவர்கள் கடவுள் மறுப்பாளர்களோ, பிற மதத்தினரோ இல்லை. இந்து மதத்தில் காலூன்றி நின்ற 'தரும ரட்சண சபை'யினரே அவர்கள்! பெல்லாரி, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகளில் அவர்கள் தீர்மானங்களே நிறைவேற்றியுள்ளனர்.

அந்த அடிப்படையில்தான், பனகல் அரசர் தலைமையிலான சென்னை மாகாண அரசு அச்சட்டத்தை 1922 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. சட்டமன்றத்திற்குள், சத்தியமூர்த்தி போன்றவர்கள் எழுப்பிய கடும் எதிர்ப்பு காரணமாக, அப்போது அது நிறைவேற்றப்படவில்லை. உண்மையில், சட்டமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை இருந்தது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சாதியினருக்குப் பயந்து, அன்றைய வைஸ்ராய் ரீடிங் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

பனகல் அரசர், ராஜாஜி, காமராஜர்

1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 'நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அறநிலையத் துறைச் சட்டத்தைக் கொண்டுவருவோம் என்று கூறியே நீதிக்கட்சி போட்டியிட்டது. அத்தேர்தலில் பெரும் வெற்றியையும் பெற்றது. அதன் பின்பே 1924 இல் மீண்டும் அம்மசோதாவைக் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இம்முறை ஆங்கில அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.

மீண்டும் முதலமைச்சரான பனகல் அரசர், இப்புதிய சட்ட வரைவை என்.கோபாலசாமி அய்யங்காரைக் கொண்டே வடிவமைத்தார். அக்குழுவின் முதல் தலைவராக முன்னாள் நீதிபதி சதாசிவம் அய்யரே நியமிக்கப்பட்டார்.

1954 இல் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது இச்சிக்கல் மறுபடியும் எழுந்தது. அதனைக் காமராஜர் நிராகரித்துவிட்டார். இந்த இடத்தில், ராஜாஜி முதலமைச்சகராக இருந்தவரையில் (1952-54) இக்கோரிக்கை எழவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்று குரல் எழுப்பிய சத்தியமூர்த்தி, இன்று குரல் எழுப்பும் ஹெச். ராஜா, ஜக்கி வாசுதேவ் ஆகியோர் எந்தப் புள்ளியில் இணைகின்றனர் என்பதை மக்கள் எண்ணிப் பார்த்தால், இக்கோரிக்கை ஏன் எழுப்பப்படுகிறது என்பது எளிதில் புரிந்துவிடும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் எழாத இக்கோரிக்கை, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எழுகிறது என்று எண்ணிப் பார்த்தால், இதற்கான விடை மேலும் தெளிவாகிவிடும்!” என்றார்.

Also Read: அரசுக் கட்டுப்பாட்டில் கோயில்கள்; இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு - விடுவித்த உத்தரகாண்ட் முதல்வர்!

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க மூத்த நிர்வாகி

“சத்குரு ஓர் ஆன்மிகவாதி. அவர் எதைப் பேசுவதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது. நல்ல கருத்துகளை, திட்டங்களை அவர் முன்னெடுத்துச் செல்கிறார். கோயில்களை தனியார்மயமாக்குவது என்று சொல்வதே தவறான விஷயம். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அங்கென்ன வியாபாரமா செய்யப்போகிறார்கள்? நம்முடைய வழிபாட்டை, நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வார்த்தை அது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். கோயில்களை அரசுமயமாக்குதல் எனச் சொல்லி அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சிற்பங்கள், சிலைகள், நம்பிக்கைகள் என அனைத்தையும் கொள்ளை அடித்து வருகிறார்கள். அதனால்தான் கடந்த 35 ஆண்டுகளாக “அரசே ஆலயங்களைவிட்டு வெளியேறு” என்று முழங்கி வருகிறேன். கோயில்களில் புரையோடிக் கிடக்கும் ஊழல்கள் அகற்றப்பட வேண்டும். ஒரு கோயில் அமைந்திருக்கும் ஊரில் உள்ள பக்தர்களிடமே அந்தக் கோயிலின் நிர்வாகம் கொண்டு செல்லப்பட வேண்டும்.

நாராயணன் திருப்பதி

பராசக்தி படத்தில் வரும் “கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது” என்ற கருணாநிதியின் வசனம் உண்மை ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் இந்து ஆலயங்களில் இருந்து அரசாங்கம் வெளியேற வேண்டும்" என்றார்.

ஆதரவுக்குரல்களும் எதிர்ப்புக்குரல்களும் இப்படி எழும் சூழலில் “கோயில் அடிமை நிறுத்து” என்ற இயக்கத்தின் தேவை குறித்து ஈஷா நிறுவனத்திடம் கேட்டோம். அதன் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் வழியாக அளித்த விளக்கம்:

” ‘ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும் என்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது உண்மை என்றால் மதத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை’ என்கிறார் சத்குரு. இந்தாண்டு ஈஷாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காவேரி, இயற்கை விவசாயம், கல்வி & திறன் மேம்பாடு, தொழிற்துறை மற்றும் கோவில்கள் குறித்த அவரின் 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கும் கட்சிக்கே தனது ஓட்டு என குறிப்பிட்டு இருந்தார். அவற்றில் “கோயில்களை அரசு கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு ஆதரவு பெருகியது. தமிழ் கலாசாரத்தின் மூலமாக விளங்கும் நம் கோயில்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகின்றன. இதை சத்குரு அவர்களின் கருத்தாக சொல்லவில்லை. இதை உண்மை என்று உறுதிப்படுத்தும் விதமாக இந்து சமய அறநிலையத் துறையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை கடந்தாண்டு சமர்ப்பித்துள்ளது.

ஜக்கி வாசுதேவ்

“அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 11,999 கோவில்களில் ஒரு நாளில் ஒரு கால பூஜை கூட சரியாக நடத்த முடியவில்லை எனவும், 34,000 கோவில்கள் ஆண்டுக்கு வெறும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருவாய் பெறுவதாகவும், 37,000 கோவில்களில் பூஜை செய்வது, கோவிலை தூய்மையாக பராமரிப்பது மற்றும் பாதுகாப்பதற்கு ஒரு கோவிலில் ஒருவர் மட்டுமே இருக்கிறார்” என்றும் ஓர் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரத்தை சமர்ப்பித்துள்ளது. மேலும், கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 1200 சாமி சிலைகள் திருடு போய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதை கேள்விப்பட்ட பிறகு சத்குரு, “இது மிக வலி மிகுந்ததாக இருக்கிறது” என்று தெரிவித்து இருந்தார்கள். இதேநிலை நீடித்தால், அடுத்த 50 - 100 ஆண்டுகளில் முக்கியமான 10 கோயில்களை தவிர்த்து அனைத்து கோயில்களும் அழிந்துவிடும். மேலும் நாம் நம் நாட்டை மதச்சார்பற்ற நாடு என சொல்கிறோம். அதன் அர்த்தம் என்னவென்றால், அரசாங்கம் மதத்தில் தலையிட கூடாது; மதம் அரசாங்கத்தில் தலையிட கூடாது. இந்தியாவில் வேறு எந்த மதத்தினருக்கும் இந்த அடிமைத்தனமும் தலையீடும் கிடையாது. அந்தந்த மதத்தினர் அவர்களின் வழிப்பாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கின்றனர். ஆனால், இந்துக்களின் உரிமையில் மட்டுமே இந்த தலையீடு உள்ளது. இதற்கு ஒரே தீர்வு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களின் கரங்களில் கொடுப்பது தான். இந்த சீர்த்திருத்தம் ஒரே நாளில் நடந்து விடாது. முறையான, விரிவான சட்டத்திட்டங்களை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இதற்காகத்தான் சத்குரு அவர்கள் இவ்வியக்கத்தை துவங்கி உள்ளார்.

காவேரி கூக்குரல் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ்

Also Read: `பாழடைந்த இந்துசமய அறநிலையத்துறை நூலகம்!’ - தர்ணா போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்பு

இந்த இயக்கம் தொடங்கிய பிறகு, பொதுமக்கள் தங்கள் ஊரில் சிதைந்து அழியும் தருவாயில் இருக்கும் கோவில்களை புகைப்படமாக, வீடியோவாக எடுத்து ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது, நம் கோவில்களின் பரிதாப நிலையை பேரதிர்ச்சியாக சமூகத்திற்கு பறைசாற்றியது. மேலும் இவ்வியகத்திற்கு பொது மக்கள் முதல் சினிமா, வர்த்தகம், அரசியல் துறைகளைச் சார்ந்த பல பிரபலங்களும் ஆதரவு அளித்துள்ளனர். குறிப்பாக மிஸ்டு கால்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் இதுவரை 3.2 கோடி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என விளக்கம் அளித்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-reason-behind-the-jakki-vasudev-free-tn-temples-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக