Ad

வியாழன், 15 ஏப்ரல், 2021

குடியாத்தம்: வீட்டுக்குள் புகுந்து திகில் கிளப்பிய சிறுத்தை! - 10 மணி நேரம் போராடி பிடித்த வனத்துறை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கலர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 45), கட்டட வேலை செய்துவருகிறார். இவர் மனைவி பிரேமா (38). இந்த தம்பதியருக்கு 19 வயதில் மனோகரன் என்ற மகனும், 15 வயதில் மகாலட்சுமி என்ற மகளும் இருக்கிறார்கள். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு வழக்கம்போல் வீட்டு ஹாலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, புழுக்கமாக இருந்துள்ளதால் காற்றோட்டமாகத் தூங்குவதற்காக வேலாயுதம் மட்டும் வீட்டு வாசலில் வந்துப் படுத்திருக்கிறார். அப்போது அவர் வீட்டுக்கதவைச் சாத்தவில்லை. நள்ளிரவு 2 மணியளவில், வீட்டு வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த வேலாயுதத்துக்குச் சொந்தமான இரண்டு ஆடுகளும் அலறியபடி கத்திக்கொண்டே இருந்தன.

வீட்டுக்குள் சீறிய சிறுத்தை

வேலாயுதம் நல்ல உறக்கத்தில் இருந்துள்ளார். ஆடுகளின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த அவரின் மனைவி பிரேமா வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது, ஆடுகளை வேட்டையாடுவதற்காக சுற்றி சுற்றி வந்த சிறுத்தை ஒன்றைப் பார்த்து பிரேமா அலறி கூச்சலிட்டார். பதற்றமடைந்த சிறுத்தை பிரேமா மீது பாய்ந்து தாக்கியது. இதில், அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. பிரேமாவைத் தாக்கிய சிறுத்தை வழித்தெரியாமல் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகன், மகளையும் தாக்கியது. அவர்களும் திடுக்கிட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடி வந்தனர்.

திடுக்கிட்டு எழுந்த வேலாயுதம் மனைவி, பிள்ளைகளை வெளியில் பத்திரப்படுத்திக் கொண்டு சிறுத்தையை வீட்டுக்குள்ளேயே பூட்டி சிறை வைத்தார். காயமடைந்த அவரது குடும்பத்தினர் மூன்று பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆக்ரோஷமடைந்த சிறுத்தை அனைத்து அறைகளுக்கும் பாய்ந்து பாய்ந்து ஓடியது. ஜன்னல் வழியாகப் பார்த்தவர்கள் மீது பாய்வதற்காகவும் சீறியது. இதுகுறித்து, உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், சிறுத்தை அறைக்குள்ளேயே பதுங்கி 10 மணி நேரம் போக்குக் காட்டியது.

மயக்கமடைந்த சிறுத்தை

பின்னர் ஒரு வழியாக, இன்று மதியம் 12.15 மணியளவில் துப்பாக்கி மூலம் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறுத்தை மயங்கியதும், கதவைத் திறந்து உள்ளே சென்ற வன ஊழியர்கள் அதனைத் தூக்கி வந்து கூண்டுக்குள் அடைத்தனர். அதன்பின்னரே, அது ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது.

பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட பல்லலக்குப்பம் அல்லது குண்டப்பல்லி காப்புக் காடுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருக்கின்றன. அங்கிருந்து இந்த சிறுத்தை வழித்தறி வந்திருக்கலாம் என்று சொல்கிறது வனத்துறை. இதையடுத்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிறுத்தையை தமிழக, ஆந்திர மாநில எல்லையிலுள்ள சாரங்கல் வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் கொண்டுச் சென்றனர். 10 மணி நேரத்துக்கும் மேலாக திகில் கிளப்பிய சிறுத்தையால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/leopard-entered-a-home-and-attacked-3-persons-near-gudiyatham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக