Ad

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

Doctor Vikatan: எனக்கு Low BP உள்ளது; இதனால் பிரச்னைகள் வருமா?

இரண்டு பிரசவங்களின் போதும் எனக்கு பிபி அளவு மிகக் குறைவாக இருந்தது. ஆனால் இரண்டுமே சுகப்பிரசவம். எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. பொதுவாகவே நான் நிறைய தண்ணீர் குடிப்பேன். இப்போதும் எனக்கு பிபி அளவு குறைவாகத்தான் உள்ளது. இதனால் வேறு ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்புள்ளதா? சரி செய்வது எப்படி?

- ஸ்வாதி (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்பூர்த்தி அருண்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறை ரத்த அழுத்த அளவானது பெண்களிடம் சகஜமாகக் காணப்படுவது. அதிலும் குறிப்பாக கர்ப்பகாலத்தின்போது ரத்த அழுத்த அளவு மேலும் குறையலாம். பெரும்பாலும் இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. ஒருவேளை உங்களுக்கு ரத்த அழுத்த அளவும் குறைந்து, மயக்கம், தலைச்சுற்றல், களைப்பு, இதயத்துடிப்பில் மாறுதல் போன்ற அறிகுறிகளும் தெரிந்தால் மட்டுமே அது குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியிருக்கும். பிபி அளவானது 90/60 என்றிருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

மற்றபடி அறிகுறிகளற்ற லோ பிபி உண்மையில் ஆரோக்கியமான அறிகுறியாகவே பார்க்கப்பட வேண்டியது. அதாவது ரத்த அழுத்த அளவு குறைவாக உள்ளவர்களுக்கு அது அடுத்த இரண்டு வருடங்களுக்கு உயர் ரத்த அழுத்தமாக மாற வாய்ப்பில்லை. உப்பு அதிகமாகச் சேர்த்துச் சாப்பிடுவது போன்று ரத்த அழுத்த அளவை அதிகரிக்க எதுவும் தேவையே இல்லை.

BP

தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமாக உண்பது, ஸ்ட்ரெஸ் இல்லாமலிருப்பது என இருந்தாலே போதுமானது. மற்றபடி உங்களுக்கு குறை ரத்த அழுத்த அளவோடு, இதயநோய்கள் போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறலாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/i-have-low-blood-pressure-will-it-cause-any-problem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக