Ad

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

``மத்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது!" - கே.என்.நேரு விளக்கம்

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியிருப்பதற்கு, பொதுமக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சியினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தி.மு.க அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த நிலையில், சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கான விளக்கத்தை தலைமைச் செயலகத்தில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார்.

தமிழக அரசு

இது தொடர்பாகப் பேசிய அவர், ``1989-ல் ரூ.83.94 என இருந்த பெட்ரோல் இன்று ரூ.107.43-க்கு விற்கப்படுகிறது. இது 348.75% உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 58.45% குடியிருப்புகளுக்கு வெறும் 25% மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், 24.7% குடியிருப்புகளுக்கு சொத்து வரி வெறும் 50% மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. பொருளாதார அடிப்படையில், 83.18% மக்களை இந்த வரி பெரிதும் பாதிக்காது. தமிழகத்தில் 100% முதல் 150% சொத்து வரி உயர்வு 7% வீடுகளுக்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 77 லட்சம் குடியிருப்புகளில் 1.4% குடியிருப்புகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக 150% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நிலத்தின் மதிப்பைக் கணக்கிட்டுத்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அகமதாபாத், நாக்பூர், பெங்களூர், கொச்சின் போன்றவற்றைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே நம்மூரில் சொத்து வரி இருக்கிறது" என விளக்கமளித்தார்.

முன்னதாக சொத்து வரி உயர்த்தப்பட்டது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், ``மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி விகிதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-minister-kn-nehru-about-the-property-tax-hike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக