Ad

திங்கள், 11 ஏப்ரல், 2022

உச்ச நட்சத்திரம் டு ஆந்திர மாநில அமைச்சர்... நடிகை ரோஜாவின் அரசியல் பயணம்!

கடந்த 2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்த அமைச்சரவையும் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, அமைச்சரவை மாற்றப்பட்டது. 25 அமைச்சர்களில், முன்னரே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 11 அமைச்சர்களும், புதியதாய் நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். அந்த புதிதாய் நியமிக்கப்பட்ட 14 அமைச்சர்களில் நடிகை ரோஜாவும் இடம்பெற்றிருந்தார்.

நடிகை ரோஜா

உச்ச நட்சத்திரத்திலிருந்து இன்று ஆந்திரா அமைச்சரவையில் இடம் வரை, ரோஜாவின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

ரோஜா - 90 களில் இந்தப் பெயரை ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கேள்விபடாத ஆட்களே இருக்க முடியாது. ஆர்.கே செல்வமணியின் செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான ரோஜா, முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து, அவர்கள் மனதில் முத்திரை பதித்து விட்டார். அந்த திரைப்படத்தின் இயக்குநரான ஆர்.கே செல்வமணியை பின்னாட்களில் மணந்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே சரத்குமார், பிரபுதேவா, மம்முட்டி, ரஜினிகாந்த் என்று ரோஜாவின் கிராப் சினிமாவில் உயர்ந்துக்கொண்டே போனது.

ரோஜா

சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆகிவிட்டால் உடனடியாக வரும் அந்தக் கேள்வி ரோஜாவை நோக்கியும் வந்தது.

'எப்போ அரசியலுக்கு வருவீங்க?''

1999 இல் தனது அரசியல் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து துவங்குகிறார் ரோஜா. கட்சியில் சேர்ந்தவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணியான தெலுங்கு மகிளாவிற்கு தலைவராக நியமிக்கப்படுகிறார். கட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் பதவிகள் கொடுத்தாலும், தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் ரோஜாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் வந்துக்கொண்டே இருந்தது. அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுப்பது, கட்சி பணிகளை செய்யவிடாமல் குறுக்கிடுவது. தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துக்கொள்வது என்பன போன்ற பல குற்றசாட்டுகளை கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் முன் வைத்தார் ரோஜா. ஆனால் அது குறித்து அவர் எந்தவொரு பெரிய நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

நடிகை ரோஜா

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ரோஜா தோல்வியை தழுவினார். அதன்பிறகு, இருக்கும் இடத்தில் மரியாதை ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் ரோஜாவால் பெரியளவில் பங்காற்ற முடியவில்லை. அரசியலில் இருந்து விலகிவிடலாம் என்று ரோஜா நினைத்துக்கொண்டிருக்கும் போது, 2011 இல் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொடங்கப்படுகிறது. உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைகிறார்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டப்பின் ரோஜாவின் அரசியல் கிராப் வேகமாக உயர ஆரம்பித்தது. 2014 சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். தனது அனல் பறக்கும் பிரசாரம் மூலம் எதிர்த்து நின்ற வேட்பாளர்களை தோற்கடித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார் ரோஜா.

ரோஜா

அதுவரை சட்டமன்றத்தின் வெளியில் ஒலித்த ரோஜாவின் குரல், அன்று முதல் சட்டப்பேரவையின் உள்ளேயும் ஒலிக்க ஆரம்பித்தது. பேரவை விவாதங்ளால் ஆதிக்கம் செலுத்திய ரோஜா, சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் பேசினார் என்று குற்றசாட்டப்பட்டு 2015 இல் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அதை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின் 2019 தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா, மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, ஆளுங்கட்சி உறுப்பினராக.

ரோஜா

ரோஜாவிற்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் எந்த அளவுக்கு முரண் இருந்ததோ, அதே அளவிற்கு ரோஜாவிற்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்குமிடையே நட்பு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ரோஜாவிற்கு பல பதவிகள் அளித்து ஊக்குவித்த வந்தார் ஜகன்மோகன் ரெட்டி. ரோஜாவின் ஆரம்ப காலகட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மகளிர் அணி தலைவர் பதவி, பின்னர் 2019 இல் ஆந்திர பிரதேசம் தொழிற்சாலை உற்பத்தி நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் பதவி. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, "அவர் எனக்கு இன்னொரு அம்மா, அரசியலில் நான் ஈடுபட காரணமாக அமைந்தவர் அம்மா தான்" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது அவரது பாணியிலேயே சினிமாவிலிருந்து அரசியலிலும் கால்தடம் பதித்துக்கொண்டிருக்கிறார் ரோஜா!



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-political-travel-of-actress-roja-who-becomes-ap-cabinet-minister

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக