வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் நேரங்களில் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ``தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் நிறைவேற்றமுடியாத இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்குச் சமம். நேர்மையான தேர்தல் முறைக்கு எதிரான இந்த செயலுக்குத் தடை விதிக்க வேண்டும். இலவசத் திட்டங்களால் பின்னாளில் மக்கள் தான் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிவிப்புகள், வாக்குறுதிகளை நெறிப்படுத்த வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்தைப் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில், ``அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிக்கின்றது. அந்த வாக்குறுதிகள் சாத்தியமா இல்லையா என்பதையும் அது அந்த மாநிலங்களின் பொருளாதாரத்தைப் பாதிக்குமா என்பதையும் வாக்காளர்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்" என்று கூறியது.
மேலும், ``ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு எடுக்கும் கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிடமுடியாது. அதேபோல, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அவர்களைத் தகுதி நீக்கமும் செய்ய முடியாது. தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம், பொருள் மற்றும் சலுகைகளை வழங்கக்கூடாது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியே தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது" என்று சொல்லப்பட்டது.
அதோடு, ``இந்த வழக்கைத் தொடர்ந்தவர் கூறுவது போல, தேர்தல் வாக்குறுதியில் இலவசங்களை அறிவிக்கும் கட்சியின் சின்னத்தை முடக்குவதும் அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையது கிடையாது. ஊழல் நடந்திருந்தால் மட்டுமே கட்சிகளை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது. அரசியல் சாசனத்தின் படி, இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும், வழங்குவதும் அந்தந்த கட்சிகளின் கொள்கை முடிவு. கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது" என்று தெரிவித்தது.
இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறித்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் பேசினோம், ``கட்சிகளின் கொள்கை முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. அந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. கட்சிகளின் அறிவிப்பால் பயனடையப்போவதும், பதிப்படையப் போவதும் பொது மக்கள் தான். அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்து அந்த மக்கள் தான் கேட்க வேண்டும். அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறு" என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ``கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் மீது உள்ள குற்ற வழக்குகள் தொடர்பாகவும், சொத்து விவரங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அப்படிக் குற்ற வழக்குகள் சொல்லலும் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்களா? கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சொத்து அதிகரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கிறார்களா? கொலை, கொள்ளை வழக்கு உள்ள எத்தனை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பதவியில் இருக்கிறார்கள். இதையெல்லாம் சிந்திக்க வேண்டியது பொது மக்கள் தான்" என்று கூறினார்.
சமீபத்தில் பிரதமர் மோடி பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், ``இலவசத் திட்டங்களால் மாநிலங்களில் பொருளாதார நிலை பாதாளத்தை நோக்கிச் செல்கிறது. மத்திய அரசு உதவவில்லை என்றால் அந்த மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். மாநிலத்தின் நிதிநிலையைச் சரி செய்யாமல் இலவசத் திட்டங்களைத் தொடர்ந்தால் கிரீஸ், இலங்கை போல அந்த மாநிலங்களிலும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்" என்று அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/free-programs-cannot-be-formalized-is-it-right-for-the-election-commission-to-give-up
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக