Ad

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

`பாலைநிலத்தில் துளிர்க்கும் பச்சையம்' - அழிவிலிருந்து நாடகக் கலைஞர்களை மீட்க ஒரு விழா!

தமிழ் நிலத்தில் நாடகங்களுக்கென்று தனி வரலாறு உண்டு. தொல்காப்பிய காலத்தில் தொடங்கிய பாரம்பரியம் இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொக்கி நிற்பதைக் காணும் போது, அழிந்து வரும் கலையின் எச்சம் குறித்த துயரத்தை நம்மால் காண முடிகிறது.

பாலை நிலத்தில் அரிதாக முளைக்கும் தாவரம் போல எங்காவது நாடகத்துக்கென்று ஒன்றிரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அப்படி ஒரு அரிதான நிகழ்வை திணைநிலவாசிகள் அமைப்பு ‘காட்லா கலைத்திருவிழா’ என்கிற பெயரில் தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். மார்ச் 27 அன்று முழு நாள் நிகழ்வாக நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர்கள் உடன் திணைநிலைவாசிகள் குழு

இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் பஹுவிடம் பேசினோம். ஏன் இந்த திருவிழாவுக்கு ‘காட்லா’ எனப் பெயரிடப்பட்டது என்பதில் இருந்து தொடங்கினார், “காட்லா என்பது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஒரு எரிமலையின் பெயர். குளிர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரே எரிமலை இதுதான். இந்த எரிமலை கடைசியாக வெடித்து 105 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இது ஒருவேளை வெடித்தால் உலகமே அழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அது போல நம்முடைய பாரம்பரிய நாட்டார் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டால் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் நேரும் என்பதை குறிக்கும் விதமாக இந்தப் பெயரில் விழா நடத்துகிறோம்.”

தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கும் திணைநிலைவாசிகள் அமைப்பு, இந்த ஆண்டு திருவேங்கடம் என்கிற ஊரைத் தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலும் ஒரு காரணம் உண்டு. “பாவலர் ஓம் முத்துமாரி இடைநிலை சமூகத்தில் இருந்து கலைத்துறைக்கு இடம்பெயர்ந்தவர். நாட்டார் கலைகளான பேயாட்டம், கிழவியாட்டம், கோமாளியாட்டம் என ஊர் ஊராகச் சென்று சமூக பிரச்னைகள் குறித்த பாடல்களை இயற்றி மக்களிடம் சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து விழிப்புணர்வு செய்து வந்தவர். வரகணி கூத்து என்று புதுவித கலையை உருவாக்கிய மேதை அவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கலைக்காகவும் மக்களுக்காவும் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த முத்துமாரி ஐயா 2013-ல் மறைந்துவிட்டார். அவரின் நினைவாகவே இந்த முறை விழாவை அவரது ஊரில் நடத்தத் திட்டமிட்டோம்.”

சிலம்பாட்டம்

விழாவில் என்ன நடந்தது?

“மார்ச் 27 உலக நாடக தினம். அன்றைக்கு மக்கள் மத்தியில் பணியாற்றி வரும் கலைஞர்களை மேடையேற்றி அவர்களுக்கு உரிய கௌரவமும் சிறிய பணத்தொகையும் ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறோம். 2019-ம் ஆண்டு ‘முதல் காட்லா கலைத்திருவிழா’ சென்னையில் நடந்த போது ஓம் முத்துமாரி அய்யா உடன் பணியாற்றிய சக கலைஞர் சந்தானத்தை அழைத்து வந்து அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தோம். இந்த ஆண்டு 5 மூத்த கலைஞர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கி அழகு பார்த்திருக்கிறோம்” என்கிறார் பஹு.

நாடகச் சங்கமம்

500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஓரிடத்தில் கூடும் போது அந்த இடம் எப்படி இருக்கும். அப்படி காட்லா கலைவிழா நடந்து முடிந்திருக்கிறது. ஒரு நாள் முழுக்கத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் மக்களை மகிழ்வித்திக்கிறார்கள் கலைஞர்கள்.
ஒருங்கிணைப்பாளர் பஹு

நய்யாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம், கிழவியாட்டம், இன்னிசை கச்சரி, நவீன நாடகங்கள் என 12 மணிநேர நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு போக்குவரத்து செலவு முதல் விழாவில் பங்கேற்றதற்கான சம்பளம் வரை மக்களை மகிழ்விப்பவர்களை மகிழ்வித்து அனுப்பி வைத்திருக்கின்றனர் குழுவினர். “நாடக சங்கமம் என்றே இந்த விழாவைச் சொல்லலாம்” எனத் தொடர்கிறார் பஹு, “இது போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் கலையைப் பற்றிக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களையும் நாடகத்துறையில் பயின்று வரும் மாணவர்களையும் ஒருங்கிணைத்து பரஸ்பரம் இருவரும் கற்றுக்கொள்ளும் வெளியை உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கம். ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.”

கலைஞர்களைக் கௌரவித்தல்

இந்த விழாவில் தொடங்கப்பட்ட பாவலர் முத்துமாரி அறக்கட்டளை உதிரிகளாகப் பரந்துச் செயல்படும் நாடகக் கலைஞர்களுக்கு அரசின் உதவி உள்ளிட்ட தகவல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விளிம்பு நிலை நாடகக் கலைஞர்களின் குடும்பத்துக்குத் தேவையான மருத்துவ உதவி, கல்வி உதவி உள்ளிட்டவற்றுக்காக ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை விழா நாள் அன்று எழுத்தாளர் கோணங்கி தொடங்கி வைத்தார்.

2500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் கண்டுகளிக்க கோலாகலமாகக் கொண்டாடி முடிக்கப்பட்டது ‘காட்லா கலைக்குழு விழா’. இந்த விழாவின் செலவு முதற்கொண்டு எல்லாமும் தன்னார்வலர்களாக இணைந்து நடத்தியதுதான். பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்க இது போலான சிறு சிறு விழாக்கள்தான் காரணம். நம்பிக்கை, பச்சையம் போல துளிர்விடுவதைக் காண முடிகிறது.



source https://www.vikatan.com/arts/miscellaneous/a-story-about-katla-drama-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக