Ad

செவ்வாய், 5 ஏப்ரல், 2022

``10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்து காட்டியிருக்கிறோம்!" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலாவதாக வானூர் அருகே கொழுவாரியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரக் கட்டடங்களைத் திறந்துவைத்தார். பின்பு, ஒழுந்தியாம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்த முதலமைச்சர், 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், 38 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``இந்த நிகழ்ச்சி உள்ளாட்சித்துறையின் சார்பாக நடைபெறுவதாக அமைந்திருக்கிறது. இன்று நான் என்னதான் முதலமைச்சராக இருந்தாலும், தலைவர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின்போது இந்தத் துறையின் அமைச்சராக இருந்தவன்.

சமத்துவபுரத்தைத் திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்

அப்போது எல்லோரும், `உள்ளாட்சித்துறையில் நல்லாட்சி நடத்தும் நாயகன்' என்று சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல், தலைவர் கருணாநிதி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, `ஸ்டாலினின் உள்ளாட்சித்துறையை பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அந்தத் துறையை என் கையிலேயே வைத்திருந்தால் இன்னும் நிறைய பேர் எனக்கு கிடைத்திருக்குமே' என்று சொல்வார். ஆக, அந்த வகையிலே மக்களோடு நெருக்கமாக இருக்கும் துறை இந்த உள்ளாட்சித்துறை. தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தோன்றாமல்போயிருந்தால் இந்தத் தமிழ்ச் சமூகம் இந்த நிலைமைக்கு வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

பழைமையான கருத்துகளையும், மூடப் பழக்க வழக்கங்களையும் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற சிலரின் ஆதிக்கத்தால் நாட்டில் எந்த மாதிரியான பிரச்னைகளெல்லாம் எழுகின்றன என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தச் சூழ்ச்சிகள் தமிழகத்தில் எடுபடாமல் போனதற்குக் காரணமே பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர்தான். சாதி என்ற அழுக்கைச் சுமந்துவந்த இந்தச் சமூகத்துக்கு, பகுத்தறிவை ஊட்டி வளர்த்தவர் தந்தை பெரியார். அனைத்துச் சமூக மக்களும், அனைத்து மதத்தினரும், ஒற்றுமை உணர்வோடு ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளமாகத்தான் சமத்துவபுரங்களை கலைஞர் உருவாக்கினார்.

சமத்துவபுரம் - கொழுவாரி

அனைத்துவிதமான முற்போக்குக்கும், புரட்சிக்கும் முன்னோடியாக நம் நாட்டுக்கு விளங்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில்தான் இத்தகைய சமத்துவபுரங்கள் உருவாகியிருக்கின்றன. இதுதான் சமத்துவத்தைப் பேசிக்கொண்டிருக்கக்கூடிய 'திராவிட மாடல்.’ ஏதோ ஓர் இடத்தில் அடையாளத்துக்காக இந்தச் சமத்துவபுரங்கள் கட்டப்படவில்லை. தமிழகம் முழுவதுமே 238 இடங்களில், சமத்துவபுரங்களை கலைஞர் அவர்கள் அமைத்துக் கொடுத்தார். அதில் ஒன்றுதான் கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமத்துவபுரம். கொழுவாரி சமத்துவபுரம், கலைஞருடைய ஆட்சியிலேயே கட்டப்பட வேண்டும் என்றுதான் தொடங்கப்பட்டது. அதன் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்தப் பணி பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டது.

கலைஞரால் தொடங்கிவைக்கப்பட்ட அந்தத் திட்டத்தை, இன்று அவருடைய மகன் ஸ்டாலின் திறந்துவைத்திருக்கிறான். கலைஞருடைய சிந்தனைகளை, கொள்கைகளை என்னுடைய மூச்சாக எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்தச் சமத்துவபுரத்தை நான் திறந்துவைத்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சி தமிழர்களின் இருண்ட காலமாக இருந்ததற்கு அடையாளமாகத்தான், இந்த சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரங்கள் அந்த அ.தி.மு.க ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இது போன்ற சமத்துவபுரங்கள், பழுதடைந்து பயன்பாடற்று போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், அந்தப் பழுதுகள் சரிசெய்யப்பட வேண்டும் என நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தேன்.

நலத்திட்ட உதவி

அதன் அடிப்படையில்தான் 1997 முதல் 2010-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட சமத்துவபுரக் கட்டடங்களை 190 கோடி ரூபாயில் சீரமைக்க இந்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. கூடிய விரைவில் சீரமைக்கும் பணி தொடங்கப்படும். 10 ஆண்டுகளாகச் செய்யாத திட்டங்களை 10 மாத ஆட்சியில் செய்துகொண்டிருக்கும் ஆட்சிதான் நம்முடைய ஆட்சி. `மக்களிடம் செல், மக்களோடு மக்களாகச் சேர்ந்து வாழ், மக்களுக்காகப் பணி செய்' என்று அண்ணா கூறியதை மனதில் வைத்துக்கொண்டு இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன்படி மக்களாகிய உங்களுடைய தேவைகளை இந்த அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

இந்த நாடே சமத்துவபுரமாக மாறும். அதுதான் எங்களுடைய லட்சியம், இலக்கு எல்லாமே. `இந்திய நாடு சுதந்திரம் அடைந்து பல்வேறு சட்டங்களும், திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருந்தாலும், சாதியும் மதமும் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன' என்று கலைஞர் ஒருமுறை பேசினார். இந்தச் சூழலில், தமிழர்கள் அனைவரும் ஒரே சமூகமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்தச் சமத்துவபுரம் திட்டம். தமிழ்நாடே சமத்துவபுரமாகக் காட்சி அளிக்க நாமெல்லாம் பணியாற்ற வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி என்று நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்குக் காரணமே சமத்துவ சிந்தனைதான். இந்தத் தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். இந்த இந்திய நாடு சமத்துவ நாடாகவும், சமூகநீதி நாடாகவும் மாற வேண்டும். இதற்கு தமிழ்நாடும், நமது திராவிட மாடலும் தொடர்ந்து வழிகாட்டும்" என்றார்.

அரங்கம்

இந்த நிகழ்ச்சியைட் தொடர்ந்து திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பம் சென்ற அவர், ரூ.500 கோடியில் அமைக்கப்படவுள்ள `லோட்டஸ் காலனி' சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tn-cm-mk-stalin-speech-at-villupuram-government-welfare-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக