Ad

ஞாயிறு, 6 மார்ச், 2022

``பெரியாருக்கு மீன் பிடிக்கும், கலைஞருக்கு கீரை பிடிக்கும்!” - சமையலர் `பூண்டி' ராமையாவின் அனுபவம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஒன்று, பூண்டியில் அமைந்திருக்கும் சத்யமூர்த்தி நீர்த்தேக்கம். இது, திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பரந்து விரிந்து அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அணையைச் சுற்றிலும் பசுமை படர்ந்திருக்கிறது. நீண்டு வளர்ந்திருக்கும் மரங்கள், மேடு பள்ளங்களில் நீளும் சாலைகள், மீன் பண்ணைகள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் என சிறிய சுற்றுலாத்தலமாவே இருக்கிறது இந்த அணை. தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மெஸ்ஸில் உணவு பரிமாறும் ராமையா

இவ்வளவு பேர் வருகை புரிந்தும் பூண்டியில் சொல்லிக்கொள்ளும்படியான உணவகங்கள் குறைவுதான். ஆனால், அந்த எண்ணத்தைப் போக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது ராமையா மெஸ். பூண்டியில் மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அப்பகுதி மக்கள் கைகாட்டுவது ராமையா மெஸ்ஸைத்தான். அந்த மெஸ்ஸூக்குச் செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.

நீர்நிலைகளைப் பார்வையிடுவதற்காக ஒரு பயணம் மேற்கொண்டோம். அந்தப் பயணத்தின் ஒருபகுதியாகப் பூண்டி அணையைப் பார்வையிட்டோம். பார்வையிட்டு முடிப்பதற்குள் மதிய வேளை நெருங்கிவிட்டது. பூண்டி ஊருக்கும், அணையின் பிரதான கதவணைக்கும் சுமார் 1 கி.மீ இருக்கும். அணையைப் பார்வையிட்டு வந்த பிறகு ராமையா மெஸ்ஸை நோக்கி நடந்தோம். முகப்பில் கூரை, சிமென்ட் பூச்சு இல்லாத செங்கல்லால் ஆன ஓட்டு வீட்டில் சாலைக்கு ஒதுக்குப் புறத்திலேயே இருந்தது.

ராமையா

உள்ளே நுழைந்தோம். அரசு அதிகாரிகள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சாப்பாடு, மீன், முட்டை இவ்வளவுதான் அன்றைய மெனு. சோறு, சாம்பார், முட்டைத் தொக்கு, வறுத்த மீன், ரசம், மோர் என்று சுவையான விருந்து சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்துவிட்டு மெஸ்ஸை நடத்தி வரும் ராமையாவிடம் பேச்சு கொடுத்தோம்.

``எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை மாவட்டம். ஏழ்மையான குடும்பத்துலதான் பொறந்தேன். ஊர்ல பொழைக்க பெரிய வழியில்ல. அதனால ஊரை விட்டு வேலை தேடி வெளியே வந்தேன். பல இடங்கள்ல அலைஞ்சு கடைசியா 1960-களோட கடைசியில பூண்டி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் சமையலர் வேலை கிடைச்சது. சென்னைக்குப் பக்கத்துல ஒரு மலைப்பாங்கான, நீர்நிலைக்கு அருகிலேயே இருக்கும் வாசஸ்தலமாக இந்த விருந்தினர் மாளிகை இருக்கு. இங்கே தங்கி ஓய்வெடுக்க பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க.

ராமையா மெஸ்ஸில்

பெரியார், கலைஞர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் பூட்டா சிங்னு பலபேர் வந்திருக்காங்க. இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது திருவள்ளூர் வருவாரு. அவருக்கு இங்கிருந்து சமைச்சு கொடுத்தனுப்பியிருக்கிறேன். எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் சமைப்பேன். பெரிய ஆட்களுக்கு இது கண்டிப்பா உணவுல இருக்கணும்னு சொல்வாங்க. அத மட்டும் சேர்த்து சமைப்பேன்” என்றவரிடம் யார் யாருக்கு என்ன உணவு பிடிக்கும் என்று கேட்டோம்.

``சாப்பிடும் உணவு நம் உடம்பை எக்காரணத்தைக் கொண்டும் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. அந்த வகையில உணவைப் பக்குவமாத்தான் சமைப்பேன். காரம், உப்பு, எண்ணெயெல்லாம் அளவாத்தான் சேர்ப்பேன். அதுவும் பெரிய விருந்தினர்களுக்கு இன்னும் கவனம் எடுத்து சமைக்க வேண்டியதா இருக்கும். பெரியாருக்கு கீரை, மீன், தயிர் புடிக்கும். அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவாரு. கலைஞருக்குக் கீரை, தயிர் புடிக்கும். வெளியில் சென்றால் அசைவம் அதிகம் கேட்க மாட்டார்னு சொல்வாங்க.

ராமையா

ஸ்டாலினுக்கு மீன், சிக்கன்னு எல்லாம் சமைச்சு அனுப்பியிருக்கிறேன். இதுவரைக்கும் யாரும் எந்தக் குறையும் சொன்னதில்ல. அந்த வகையில எனக்கு ரொம்ப சந்தோஷம். இதுபோல பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகையில தங்கிட்டு போயிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் சமைச்சு போட்டிருக்கிறேன்.

அரசனே இருந்தாலும் அரசாங்க வேலைன்னா ஐம்பத்தெட்டு வயசுல ஓய்வு பெறணுங்கறது விதி. அந்த வகையில 2006-ம் வருஷம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அதன்பிறகு வேலை செஞ்ச இடத்துக்குப் பக்கத்திலேயே சின்னதா இந்த மெஸ்ஸை தொடங்கினேன். ஊர்க்காரர்களோட ஒத்துழைப்போடயும், இங்க சுற்றுலாவுக்கு வர்றவங்களாலயும் இந்த மெஸ் நடக்குது. பணம் சம்பாதிக்கிறதுக்காக இதைத் தொடங்குல. பென்ஷன் வாங்கிட்டு வீட்டுல உக்காறதுக்கு மனசு இல்ல. அதனால, கூட ஆட்கள வெச்சுக்கிட்டு இத நடத்துறேன். இங்க வந்து சாப்பிடுறவங்க நிறைய பேர் அரசு அதிகாரிகள், அப்புறம் கூலித் தொழிலாளிகள், சுற்றுலாவாசிகள்னு வர்றாங்க. யார்கிட்டயோ கேட்டு, விசாரிச்சு நம்பி மெஸ்ஸூக்கு வர்றாங்க. அவங்க நம்பிக்கை வீண் போக கூடாதுல்ல? அதனால, எனக்குத் தெரிஞ்ச அளவுக்குத் தரமா கொடுக்கிறேன்.

பூண்டி நீர்த்தேக்கம்

நாங்க சமைக்கிற உணவு உடம்புக்கு எந்த உபத்தரவமும் செய்யாது. சிலபேர் சாப்பிட்டு உங்க சாப்பாடு ரொம்ப நல்லாருக்குன்னு வாயார வாழ்த்திட்டுப் போறாங்க. எனக்கு ஒரு மகதான். அவங்க பூந்தமல்லியில இருக்காங்க. `ஏன் இந்த வயசான காலத்திலேயும் நெருப்புல இருக்கீங்க. என் கூட வந்து இருக்கலாமே’னு கூப்பிடுறா.

சமைச்சு நாலு பேருக்கு போட்டு பழகின கை. எப்படி சும்மா உட்காரும். இந்த உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் இந்த மெஸ்ஸை நடத்துவோம்னு இருக்கேன்” என்றவரிடம், அடுத்த முறை பூண்டி அணைக்கு வந்தால் வருகிறோம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றோம்.

ராமையா மெஸ்ஸில்

அன்று மாலை வரை பல நீர்நிலைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தோம். சாப்பிட்ட உணவு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சுற்றுலா, பயணம் என்று செல்பவர்களுக்கு உணவு மிகவும் முக்கியம். அந்த வகையில் ராமையா மெஸ் சாப்பாடு உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அணை பக்கம் போனால் நீங்களும் ஒருமுறை ராமையா மெஸ்ஸில் சாப்பிட்டுப் பாருங்கள்.



source https://www.vikatan.com/health/food/cook-poondi-ramaiyya-shares-his-cooking-experience-for-popular-leaders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக