Ad

ஞாயிறு, 27 மார்ச், 2022

``புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!” – எச்சரிக்கும் திமுக

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கதிர்காமம் தொகுதி தி.மு.கவின் செயல்வீரர்கள் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எல்.ஏ சிவா, “தட்டாஞ்சாவடி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் எதிர்பார்க்காத வெற்றி தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்குப் பின்னர் கிடைத்தது. அப்போது எனக்கே தெரியாத பலர் என்னிடம் வந்து பேசினர். தற்போது அத்தொகுதியில் என்ன நடக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நீண்ட நாட்கள் தள்ளி வைக்க முடியாது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை. இட ஒதுக்கீடு தர முடியாது என்றால் அதை ஆட்சியாளர்களே அறிவித்துவிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் என்பது முற்றிலும் சட்டமன்ற தேர்தலில் இருந்து வேறுபட்டது. பணம் இல்லாதவர்கள்கூட அதில் வெற்றி பெற்று வருவதை பார்க்கலாம். அங்குள்ள மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து சேவை செய்து வருவதும் அதற்கு ஒரு காரணம். எனவே உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்படும். அந்த குழு யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி நடைபெறவில்லை.

பா.ஜக.வின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது. தினம்தோறும் வட மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சரோ, கட்சி நிர்வாகியோ புதுச்சேரி வந்து தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்து செல்கின்றனர். அவர்கள் புதுச்சேரி வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஏதேனும் விவாதிக்கின்றார்களா என்றால் அப்படி எதுவும் இல்லை. எப்படி பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல்களில் வெற்றி பெற்றார்களோ அதுபோல் குறுக்கு வழியில் வெற்றி பெறவே முயற்சிக்கின்றனர். மேலும் எப்படியாவது புதுச்சேரி வழியாக தமிழகம் செல்ல வேண்டும் என்றும் பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சபாநாயகர் என்பவர் பொதுவானவராக இருக்க வேண்டும். எதிர்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் நடுநிலையாக இருந்து மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆனால் புதுச்சேரி சபாநாயகர் பா.ஜ.க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பா.ஜ.கவினராக முன்னிறுத்தி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும். இல்லையென்றால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல மகத்தான வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற வேண்டும். புதுச்சேரியில் நகரமன்ற தலைவர் பதவியை தி.மு.க பிடிக்க வேண்டும். அந்தவகையில் நாம் பணியாற்ற வேண்டும்” என்றார்.

புதுச்சேரி மணவெளி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ செல்வம்தான் தற்போது சபாநாயகராக பதவி வகிக்கிறார். சபாநாயகரின் மாண்புகள் மற்றும் மரபுகளை மீறி அவர்செயல்படுவது குறித்தும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க அதனை கண்டுகொள்ளாதது குறித்தும் 27.02.2022 தேதியிட்ட நமது ஜூனியர் விகடன் இதழில் விமர்சன கட்டுரை எழுதியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-warned-puducherry-speaker-over-his-non-confidence-decision

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக