Ad

புதன், 23 மார்ச், 2022

கடலூர்: ``அமைச்சர்தான் இனி அந்த தொகுதிக்கு பொறுப்பு எம்.எல்.ஏ” -சர்ச்சையை ஏற்படுத்திய மேயரின் பேச்சு

கடலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரியை அறிவித்தது திமுக. ஆனால் மேயர் சீட்டை எதிர்பார்த்து ஏமாந்துபோன மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தரப்பு, மேயர் தேர்தலுக்கு முதல் நாள் தங்களது ஆதரவு கவுன்சிலர்களை விழுப்புரம் ரிசார்ட்டில் தங்க வைத்தது. அதற்கடுத்த சிலமணி நேரங்களில் அந்த ரிசார்ட்டில் குவிந்த போலீஸார், கவுன்சிலர்களை சுற்றி வளைத்தனர்.

கடலூர் மாநகராட்சி கூட்டம்

தகவலறிந்து குணசேகரனுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை மீட்டுவரச் சென்ற கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனையும் போலீஸ் ரிசார்ட்டில் சிறை வைக்க, மேயராக அறிவிக்கப்பட்டார் சுந்தரி. இந்த அதிரடி திருப்பத்தால் மருந்துகளை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் மாவட்ட செயலாளர் வி.எஸ்.எல் குணசேகரன். அதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எம்.எல்.ஏ அய்யப்பனை சஸ்பெண்ட் செய்தது கட்சித் தலைமை.

இதனிடையே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச் செல்வன், ஆணையர் உள்ளிட்டவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில், ”உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்த மேயர் சுந்தரி, ``தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு கடலூர் தொகுதி (கடலூர் தொகுதிக்கு என்று மைக்கில் அழுத்தமாக கூறுகிறார்) எம்.எல்.ஏவாக கூடுதல் பொறுப்பு இருக்கிறது” என்றார். கடலூர் தொகுதியின் எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேயரின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் எம்,எல்,ஏ அய்யப்பன்

கடலூர் மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் புதிய மாநகராட்சியின் மேயர் பதவியை தங்கள் மனைவிகளுக்கு வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கினார்கள் அக்கட்சியின் நகரச் செயலாளரான கே.ஏஸ்.ராஜா என்ற பழக்கடை ராஜாவும், மாவட்ட பொருளாளரான வி.எஸ்.எல்.குணசேகரனும். இருவருமே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்.

அப்போது வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பே தனது மனைவி சுந்தரியை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜா. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நகரச் செயலாளர் மீது நடவடிக்கை இல்லையா என்று பொங்கித் தீர்த்தனர் நிர்வாகிகள். ஆனால் கணவன், மனைவி இருவருக்கும் சீட் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், “எம்.எல்.ஏ அய்யப்பன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து மட்டும்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, இப்போதும் அவர் எம்.எல்.ஏதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒருவர் இருக்கும்போது, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு கடலூர் தொகுதி எம்.எல்.ஏவாக கூடுதல் பொறுப்பு இருக்கிறது என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பேசியது எதன் அடிப்படையில்? மேலும் அனைத்து உறுப்பினர்களும் பேசி முடித்ததும், பேப்பரில் எழுதி வைத்திருந்ததைப் படித்துதான் அவர்களுக்கு பதிலளித்தார் மேயர். அதன்படி பார்த்தால் அவருக்கு எழுதிக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது. எம்.எல்.ஏ அய்யப்பனை ஓரம் கட்டிவிட்டோம். அதனால் அனைத்து விவகாரங்களுக்கும் இவர்களை அணுகுங்கள் என்று மேயர் மூலம் கட்சிக்காரர்களுக்கு சிக்னல் கொடுக்கிறதா அறிவாலயம்?” என்றனர் ஆதங்கத்துடன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-cuddalore-a-controversial-speech-by-the-mayor-of-the-municipality-over-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக