Ad

செவ்வாய், 29 மார்ச், 2022

`தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பு!’ - எழும் கோரிக்கைகள்... என்ன காரணம்?

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான நீ.குமார் கடந்த ஆண்டு பணி ஓய்வுபெற்றார். அடுத்த துணைவேந்தர் நியமனத்திற்கான அறிவிப்பை நவம்பர் 21-ம் தேதி பல்கலைக்கழகத் தேர்வு கமிட்டி வெளியிட்டது. தமிழக அரசின் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு தகுதியுடையவர்களைத் தேர்வுசெய்து, அதில் மூன்று பேராசியர்கள் பட்டியலை ஆளுநருக்கு தேர்வு கமிட்டி அனுப்ப வேண்டும். அதிலிருந்து தமிழக ஆளுநர் தேர்வுசெய்யும் நபரே துணைவேந்தராக நியமிக்கப்படுவார்.

துணைவேந்தர் நியமனத்திற்கான அரசாணை அறிவிப்பை 2018-ம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில், ஒரு பேராசிரியர் குறைந்தது ஐந்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு மேல் வழிநடத்தியிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 19 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

வேளாண் பல்கலைக்கழகம்

அவற்றில் கோயம்புத்தூர், மதுரையில் உள்ள கல்லூரிகளில் மட்டும்தான் ஆராய்ச்சிப் படிப்பு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு இல்லை. முதுகலைப் பட்டப்படிப்பு வரை மட்டுமே கொண்டுள்ள இந்த கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் துணைவேந்தர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை உருவானது. அதனால், திருச்சியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அடுத்த துணைவேந்தர் நியமனத்திற்கான தேர்வை நடத்தி முடித்து, தற்போது துணைவேந்தரையும் நியமித்துவிட்டது பல்கலைக்கழகம். அது ஒரு சார்பாக இருப்பதாக வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் குமுறல் எழுந்துள்ளது. அரசாணை எண் 135-ல் ஒரு பேராசிரியர் பத்து ஆய்வுக் கட்டுரைகள் தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (National Academy of Agricultural Sciences) பதிப்பித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் ஆய்வுக்கட்டுரையைப் பதிப்பிக்க, குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும். எனவே, தற்போது பத்து ஆய்வு கட்டுரைகளைப் பதிப்பித்திருக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை மாற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.

இது குறித்து திருச்சியில் பணியாற்றும் ஒரு பேராசிரியர், ஓர் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், "2018-ல் வெளியிட்ட அரசாணை எண் 135 படி பார்த்தால், ஐந்து முனைவர் படிப்பு மாணவர்களை வழிநடத்தியிருக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், திருச்சியில் முனைவர் படிப்பே இல்லை. கோயம்புத்தூர், மதுரையில் உள்ள கல்லூரிகளில் தான் உள்ளது. எங்கள் அனுபவத்தை வைத்தோ, தகுதியை வைத்தோ மதிப்பீடு செய்து அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்கான வேலைகளை அரசு தொடங்கிவிட்டது. இது மற்ற பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

வேளாண் பல்கலைக்கழகம்

இது குறித்து கோவை வேளாண் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரிடம் பேசியபோது, "என்னதான் நாங்கள் கோவையிலேயே பணியாற்றினாலும், நிர்வாகத்திற்கு நெருக்கமான விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு மட்டுமே முனைவர் பட்ட மாணவர்களை வழிகாட்ட வாய்ப்பு வழங்கப்படும். ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை பதிப்பிப்பதற்கு குறைந்தது ஆறு முதல் ஏழு வருடங்களாவது ஆகும். முன்பெல்லாம் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பித்திருந்தாலே போதுமானது. தற்போது அதை பத்து என உயர்த்தியது எங்களுக்கு பாதகமாக இருக்கிறது" என்று கூறினார்.

இது தவிர விருப்ப ஓய்வுபெறும் பேராசிரியர்களின் மாணவர்களை தமது ஆராய்ச்சி மாணவர்களாக அபகரித்து, தமது தகுதிகளை அதிகரித்துக்கொள்வதாக மதுரை வேளாண் கல்லூரி உழவியல் துறையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தங்கள் நாஸ் ( NAAS) மதிப்பெண்களை உயர்த்துவதற்காக மாணவர்களின் படிப்பை அவர்கள் நீட்டிப்பது நடந்துள்ளது. இதனால், மூன்று வருட ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க, அந்த மாணவர்களுக்கு நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகின்றன. இதில் பல மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். சிலர் விருப்பப்பட்டு முனைவர் படிப்பில் சேர்ந்து, இந்தக் காரணத்தால் படிப்பின் மீதுள்ள ஆர்வம் போய், போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்கு தயாராகி, படிப்பை முடிப்பதற்குள் வேறு வேலை வாங்கிச்சென்று விடுகின்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 90 விழுக்காடு மாணவர்களுக்கு தேர்வில் ஃபெயில் போட்டதிலிருந்து, பல துறைகளை ஆரம்பித்து அதை நடத்த முடியாமல் இறுதியில் கைவிட்டது வரை பல சர்ச்சைகளை பல்கலைக்கழகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. தற்போது துணைவேந்தர் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவசர அவசரமாக துணைவேந்தரை நியமிக்கும் பல்கலைக்கழகம், கடந்த 10 வருடங்களாக ஓர் ஆசிரியரைக்கூட நியமிக்கவில்லை. கடைசியாக காலிப் பணியிடங்களில் நியமனம் நடைபெற்றது 2014-ம் ஆண்டில்தான். பின்னர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் ஆறு புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவச் சேர்க்கையும் நடைபெற்றுவிட்டது. ஆராய்ச்சிப் படிப்பு முடித்து தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற வேளாண் பட்டதாரிகளே 800 பேர் அரசுப் பணிக்காகக் காத்திருக்கிறார்கள்.

வேளாண்மையில் பள்ளிக்கல்வி முடித்தவுடன் முனைவர் பட்டம் பெற குறைந்தது ஒன்பது வருடங்களாவது ஆகும். அதிலும், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தகுதித்தேர்வு மற்றும் யூ.ஜி.சி நடத்தும் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றால் தான் துணைப் பேராசிரியர் பணிக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியும். இவற்றை பூர்த்தி செய்ய ஒருவருக்கு 27 வயது வரை ஆகும். கடந்த பத்து வருடங்களாக காலிப்பணியிடங்களை நிரப்பாதது, அந்த மாணவர்களின் ஒன்பது வருடக் கல்லூரி வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

இன்னொரு பிரச்னை. 2020 கோவிட் தொற்று காரணமாக வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெற்றது. அப்போது ஒரு சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிர்வாகம் நிறுத்திவைத்திருந்தது. காரணம், ஆன்லைன் தேர்வில் அவர்கள் முறைகேடு செய்ததாகவும், அதனால் அவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வேளாண் பல்கலைக்கழகம்

அதே சமயத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் முதுகலைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வும் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்ற பல மாணவர்களால், தங்களால் விரும்பிய கல்லூரிக்கு மேற்படிப்பு படிக்கச் செல்ல முடியவில்லை. காரணம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை.

இது குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் மாணவி ஒருவர், "பூச்சியியல் துறையில் ஆல் இந்தியா ரேங்க் எடுத்து நாக்பூரில் எனக்கு இடம் கிடைத்தது. ஆனால், எங்க யுனிவர்சிட்டியில் மார்க் ஷீட் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தாங்க. இதனால், என்னுடைய சீட்டை அங்கு கேன்சல் செய்துட்டாங்க. இதுபோல, பத்துப் பேருக்கு சீட் கிடைத்தும் படிக்கமுடியாமல் போய்விட்டது" என்றார் வேதனையுடன்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடங்கள் மட்டுமே மற்ற மாநிலங்களின் நுழைவு தேர்வுகளில் கேட்கப்படும். ஆனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் கணக்கு, பொது அறிவு போன்ற பாடங்களும் இருக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அனைத்திந்திய வேளாண் நுழைவுத் தேர்வுக்காக தனியாகவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்காக தனியாகவும் படிக்க வேண்டிய சிரமமும் உள்ளது. தேர்வு எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டிலும், தேர்வு எப்போது நடத்தப்படுகிறது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது என்கிறார்கள் மாணவர்கள். அனைத்து இந்திய வேளாண் நுழைவுத்தேர்வு நடந்து, அதன் முடிவுகள் வெளியாகி, கவுன்சிலிங் நடந்த பின்னர்தான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வுகளே வைக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய நுழைவு தேர்வின் போதே தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

வேளாண் பல்கலைக்கழகம்

இதனால், மற்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், பாதியிலேயே அங்கு படிப்பை விட்டுவிட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படிச் சென்று சேர்ந்தாலும் கூட ஆரம்பத்தில் சேர்ந்த கல்லூரியில் செலுத்திய கட்டணமும் திருப்பி கிடைப்பதில்லை. இதனால், பல மாணவர்களால் மேற்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொடர முடியவில்லை.

இது குறித்து கோவை வேளாண் கல்லூரியில் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், "எனக்கு ஆரம்பத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தாவர நோயியல் துறையில் இடம் கிடைத்தது. ஆனால், எனக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டுமென்பது விருப்பம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழித்து, கோவை வேளாண் கல்லூரியில் நுழைவுத்தேர்வுகள் நடைபெற்றன. அதில் எனக்கு கோவையிலேயே நான் விரும்பிய துறையில் இடம் கிடைத்தது. ஆனால், நான் ஏற்கனவே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 70,000 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டேன். அந்தப் பணம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், அதை எதிர்பார்க்காமல் அங்கிருந்து விலகி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் வசதியான குடும்பம் என்பதால் எனக்குப் பிரச்னை இல்லை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்ன செய்வார்கள்?” என்று கேள்வியெழுப்பினார் அந்த மாணவர்.

மேலும், நுழைவுத்தேர்விலும் வெளிப்படைத்தன்மை இல்லை. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றனர் என்பது தேர்வு முடிவுகள் வரும்போது தெரிவிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், எந்தெந்த மாணவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள் என்பது மட்டுமே தெரியவரும். மதிப்பெண், ரேங்க் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை.

வேளாண் பல்கலைக்கழகம்

இப்படியாக ஏராளமான பிரச்னைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும்... மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் வேளாண் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு செயல்படுவதைப் போல, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் ஓர் அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/teachers-and-students-demand-state-government-to-create-a-body-to-control-tnau

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக