Ad

வியாழன், 31 மார்ச், 2022

LSG vs CSK: பேட்டிங் ஆர்டர், பிளேயிங் லெவன் மாறினது ஓகே! ஆனா பௌலர்களின் மைண்ட்செட்? மீழுமா சிஎஸ்கே?

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும், பவர்பிளே ஓவரில் வரும் ரன்களும்தான் ஒரு அணியின் கை போட்டியின் தொடக்கத்திலேயே ஓங்குவதை உறுதிசெய்யும். சிஎஸ்கேயின் கடந்தாண்டு வெற்றி மந்திரமும் இதுதான். இந்த சீசனில் கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் கெய்க்வாட்டின் சறுக்கல், திணறிய கான்வேயின் செயல்பாடுகள், 2020 நினைவுகளை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே குழுமத்திற்கே ஓடவிட்டிருக்கும். சுதாரித்துக் கொண்ட சிஎஸ்கே, இம்முறை ஓப்பனிங் ஸ்லாட்டை உத்தப்பாவைக் கொண்டு நிரப்பியது.
உத்தப்பா | LSG vs CSK

ராஜஸ்தான், கேகேஆர் என பல அணிகளுக்காக ஆடியிருந்தாலும், சிஎஸ்கேவில் இணைந்த பிறகுதான், அவரது ஆட்டத்தில் அனல் பறக்கிறது. ராஜஸ்தானில் லோயர் ஆர்டரில் இறக்கப்பட்டு சொதப்பிய உத்தப்பா, சிஎஸ்கேயில் அவருக்கான டாப் ஆர்டரில் சோபிக்கிறார். பவர்பிளேயில் 2021-ம் ஆண்டுக்குப் பிந்தைய போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக்ரேட் 140.74. அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 152.08. இதுதான் சிஎஸ்கேவை உத்தப்பாவை ஓப்பனிங்கில் துணிவாக இறங்க வைத்தது. 200 ஸ்ட்ரைக்ரேட்டோடு, அரைசதத்தைப் பூர்த்தி செய்து 100 சதவிகிதம் அதற்கு நியாயமும் கற்பித்துவிட்டார்.

LSG vs CSK

குஜராத்துக்கு எதிராகக் கோட்டைவிட்ட அந்தக் கடைசி ஓவரில்தான் கேஎல் ராகுலும், அவேஷும் நிகழ்காலத்திலும் நின்று கொண்டிருந்தார்கள் போலும். மூன்று பவுண்டரிகள் வந்து அந்நாளில் லக்னோவின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்ததென்றால், இப்போட்டியில் அதுவே சிஎஸ்கேயின் பேட்டிங்கிற்கு வெற்றிக்குறியீடாக ஆனது. ஷமீராவின் கடந்த போட்டி சாயலையும் மறக்கடித்து, அவரையும் உத்தப்பா நையப்புடைக்க, 2018-ம் ஆண்டில் பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றிய ஆண்ட்ரூ டையிடம் லக்னோ சரண் புகுந்தது. அவரது பந்தில் எல்பிடபிள்யூவில் தப்பித்த கெய்க்வாட்டால் ரவி பிஷ்னாயின் அற்புத டைரக்ட் ஹிட்டுக்குத் தப்ப முடியவில்லை. ஒரு ரன்னோடு வெளியேறினார். லக்னோவுக்கு பவர்பிளேயில் நடந்த ஒரே நல்ல விஷயம் இதுமட்டும்தான்.

அடுத்து இணைந்த உத்தப்பா - மொயின் கூட்டணி, என்ன செய்வதென்றே தெரியாத க்ளூலெஸ் கேப்டனாக ராகுலை மாற்றி விட்டது. பந்து எந்த லெந்த்தில் வந்தாலும் சரி, எந்த லைனில் வந்தாலும் சரி, ஃபீல்டர்களுக்கு இடைடேயான கேப்பில் பந்தை பவுண்டரிக்கு அனுப்புவேன் என ஆடிக் கொண்டிருந்தார் உத்தப்பா. டையின் ஓவரில் நான்கு பவுண்டரிகளை உத்தப்பா மட்டுமே விளாசினார். பவர்பிளேவுக்கு உள்ளாகவே நான்கு பௌலர்களை ராகுல் பயன்படுத்திவிட்டார். அதிலும் 'அடிவாங்குவது சர்வநிச்சயம்' எனத் தெரிந்தும் க்ருணால் பாண்டியாவை வீசவைக்க அதிலும் 16 ரன்கள் வந்து சேர்ந்தது. பவர்பிளே ரன்கள் 73-க்கு சென்றது. 'நல்ல தொடக்கமே, பாதி வெற்றி' என உறுதியானதும் இங்கேதான். 25 பந்துகளில், தனது 26-வது அரைசதத்தை மின்னல் வேகத்தில் அடித்துவிட்டார் உத்தப்பா. ரவி பிஷ்னாய், வேகத்தைக்கூட்டி, அவரைச் சிக்கவைத்து அனுப்பி இருந்தாலும், 'லாபம்' என பவர்பிளே ஓவர்களிலேயே எழுதிவிட்டார் உத்தப்பா. அடுத்ததாக, மொயின் அலியும் வெளியேற, இரண்டு செட்டில் ஆன பேட்ஸ்மேன்களை வெளியேற்றியிருந்தது லக்னோ.

தூபே - ராயுடு | LSG vs CSK

இதன்பிறகும்கூட அதே தாக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற அந்த இன்டென்டில் கவனமாக இருந்தன சிஎஸ்கே பேட்டர்களுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்கள். குறிப்பாக, ஷிவம் துபே - ராயுடுவுக்கு இடையேயான கூட்டணி, 37 பந்துகள் நீடித்து 60 ரன்களைக் குவித்து, மிடில் ஓவர்களில் ரன்கள் வருவதையும் உறுதி செய்தது. அந்தக் குறிப்பிட்ட ஆறு ஓவர்களில் சுழல், வேகம் என மாற்றி மாற்றி ஆறு பௌலர்களைச் சளைக்காமல் ராகுல் வீசவைத்து விட்டார். ஆனாலும் இவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. குறிப்பாக, அரைசதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட ஷிவம் துபே, சிஎஸ்கேவுக்கான அடுத்த தலைமுறை வீரராக உருவாகி வருவதை உறுதி செய்துவிட்டார்.

தோனி | LSG vs CSK

கடைசி 4 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ கொஞ்சம் ஆறுதல்பட்டுக் கொண்டாலும், "பெரிதிலும் பெரிது கேள்!" என 48 ரன்களை வாரிக்குவித்து, 200+ என்னும் இலக்கத்தை உறுதிசெய்தது சிஎஸ்கே. தோனியின் அந்த முதல் பால் சிக்ஸ், 2019 நினைவலைகளை எழுப்பியிருந்தது. தோனி இப்போட்டியில் 7000 டி20 ரன்களைக் கடந்ததோடு சிஎஸ்கேவிற்கு 300-வது பவுண்டரியையும் அடித்தார் என்பதும் உபரித்தகவல். சிஎஸ்கே தரப்பில் டாப் 7-ல் கெய்க்வாட் தவிர, எந்த வீரரின் ஸ்ட்ரைக்ரேட்டும் 135-க்குக் கீழ் இறங்கவில்லை என்பது அவர்களது டீம் மீட்டில் விவாதிக்கப்பட்ட நோக்கத்துக்கான செயல்முறை விளக்கமாக இருந்தது. லக்னோவுக்கு ரவி பிஷ்னாயின் 2/24 என்னும் ஸ்பெல் மட்டுமே ஸ்பெஷலாக அமைய, மிஸ் ஃபீல்டுகள், கேட்ச் டிராப்கள் புடைசூழ மற்ற அத்தனை பேரின் எக்கானமியும் 10-ஐ தொட்டோ, தாண்டியோ இருந்தன.

211 என்பது நல்ல இலக்காகத் தோன்றினாலும், சின்ன மைதானம் மற்றும் பனிப்பொழிவைக் கணக்கில் கொண்டால், 15 ரன்கள் குறைவாகவே சிஎஸ்கே எடுத்திருந்தது எனலாம்.
LSG vs CSK

போட்டி தொடங்குவதற்கு முந்தைய தரவுகள் தந்த தகவலில், இக்களம் என்னதான் புற்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும் சுழல்பந்து வீச்சாளர்களோடு நட்புப் பாராட்டும் என்று கூறப்பட்டிருந்தது. மும்பை - டெல்லிக்கு இடையே இங்கே நடந்த போட்டியில் குல்தீப், முருகன் அஷ்வின் செயல்பாடுகளும் அதை உறுதி செய்திருந்தன என்பதால் ஜடேஜா மற்றும் மொயின் அலிக்கு இன்று விக்கெட் படையல் காத்திருக்கிறது என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் எல்லாமே கண்ணாடி பிம்பமாக தலைகீழாக நடந்தேறியது.

சர்வதேச தரமுடைய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இது என்பதை நிருபித்தது ராகுல் - டீ காக் கூட்டணி. எக்ஸ் மும்பை வாலாவாக டீ காக்கும், நிலைப்புத்தன்மைக்கு பெயர் போன ராகுலும் பழைய பாதைக்குத் திரும்பி உள்ளனர். ஒருபக்கம், தீபக் சஹார் இல்லாத குறையை சிஎஸ்கேயின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஏற்கெனவே உணர வைக்கத் தொடங்கி விட்டனர் என்றால் பனிப்பொழிவும் இன்னொரு பக்கம் நெருக்கடி தந்து கொண்டிருந்தது. இந்தக் கூட்டணியை முறிக்கக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை கேட்ச் டிராப்கள் என்னும் மகாகுற்றங்கள் தட்டிப் பறித்தன. பிராவோ வீசிய பந்தை டீ காக் அடிக்க, அது மொயின் அலியைத் தேடிச் சென்றது. கண்டிப்பாக பிடித்திருக்கக் கூடிய அந்தக் கேட்சை அவர் விட்டதுதான் சிஎஸ்கே சறுக்கிய இடம். அதுதவிர மொயின் பந்தில் விடப்பட்ட கேட்சும் சகலத்தையும் சிஎஸ்கேவிற்கு எதிராகத் திருப்பி விட்டது.

ராகுல் - டீ காக் | LSG vs CSK
சிஎஸ்கேவும் பவர்பிளேயிலேயே, மொயின் மற்றும் பிராவோவைக் கொண்டு வந்தும் பார்த்தது, ஆனால், உண்மையில் மரணபயம் காட்டியது இந்த ஜோடி. 1×10=10, 2×10=20 என பத்தாவது வாய்ப்பாடு கற்றுத் தருவது போல், எட்டு ஓவருக்கு 80, 9 ஓவருக்கு 90 என வந்து நின்றுவிட்டது லக்னோவின் ஸ்கோர். பவர் பிளேவுக்கு வெளியேகூட அதே அதிர்வலைகளைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

சிஎஸ்கேவுக்கான முதல் விடியலாக ப்ரிடோரியஸின் முதல் ஓவரே அமைந்தது‌. தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்த ரன்மீட்டரை சற்றே நிறுத்தி அதற்கு முந்தைய ஓவரை பிராவோ வீசி பெரிய ஷாட் எதுவும் போகாமல் செய்திருந்தார். அது ராகுலோடு மைண்ட்கேம் ஆட, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த ஷார்ட் பாலில் புல் ஷாட் ஆடுகிறேன் என விக்கெட்டைப் பறிகொடுத்தார் ராகுல். அதற்கடுத்த ஓவரும் சிஎஸ்கேவுக்குச் சாதகமானது. மணீஷ் பாண்டே போன போட்டியில் ஃபுட் வொர்க்கின் விலை கேட்டு ஷமியிடம் விக்கெட்டை தாரைவார்த்ததைப் போலவே இம்முறையும் துஷர் வீசி, ஸ்லாட்டில் விழுந்த பந்தை பெரிய ஷாட்டாக்க முயன்று, சரியாக அதைச் செயல்படுத்தாமல் வெறும் 5 ரன்களுக்கு வெளியேறினார். இன்னொரு ஓப்பனரான டீ காக்கினையும் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பந்துவீசி கீப்பர் கேட்ச் ஆக்க வைத்து ப்ரிடோரியஸ் அனுப்பி வைத்தார்.

ப்ரிடோரியஸ் | LSG vs CSK

அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி, அதிர்ச்சி தந்தாலும் 32 பந்துகளில் 71 ரன்கள் வேண்டும் என இலக்கு தள்ளியே இருந்தாலும், ஏழு விக்கெட் கையிருப்பும், இறுதியில் பின்ச் ஹிட்டர்கள் அணிவகுப்பும் லக்னோவுக்கு கொஞ்சம் தெம்பு தந்தது என்றே சொல்ல வேண்டும். சிஎஸ்கேயின் பார்வையிலோ இன்னமும் மூன்று க்ளீன் ஓவர்கள் முடிவைத் தங்களுக்கு ஆதரவாக்கும் என்ற தைரியம் இருந்தது. ஆனால், இருபக்க ரசிகர்கள்தான், முந்தைய போட்டிகளின் முடிவுகளைக் காட்சிகளாய் ஓட்டிப்பார்த்து, கதிகலங்கிப் போய் இருந்தனர்.

டீ காக் | LSG vs CSK
முதல் இரு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த பிராவோ தனது இறுதி இரண்டு ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்துவிட்டார். அப்படி இருந்தாலும் ப்ரிடோரியஸ், பிராவோவின் ஓவர்கள் முடிய முடிய, மொயின் - ஜடேஜா ஸ்பின் கூட்டணி எடுபடாத பட்சத்தில் இறுதி ஓவர்களை முகேஷ் வீசினால் சீனியர் வீரர்கள் அளவு சிறப்பாக அவரால் வீசமுடியுமா, சிஎஸ்கேவின் தலைதப்புமா என்பதே ரசிகர்களின் கவலையாக இருந்தது. லூயிஸ் வெறித்தனமான ரன்பசியோடு காத்திருந்தார்.
மாற்று யோசனையாக, பேட்டிங்கில் கலக்கிய ஷிவம் துபே இறக்கப்பட, அதுவே நாளின் மிக மோசமான முடிவாக மாறியது. முதல் பந்து சிக்ஸருக்கு டீப் பேக்வேர்ட் லெக்கிற்கு பறந்தது. அங்கிருந்து சிஎஸ்கே ரசிகர்களின் இதயங்களை சில்லுச்சில்லாக நொறுக்குவது போலவே ஒவ்வோரு பந்தின் முடிவுகளும் இருந்தன. அந்த ஒற்றை ஒவரில் 25 ரன்களை ஷிவம் துபே பௌலிங்கில் கொடுக்க, வெறும் 23 பந்துகளில் இந்த சீசனின் அதிவேக அரை சதத்தை லூயிஸ் அடித்தார்.
ப்ரிடோரியஸ், தோனி | LSG vs CSK

அந்த ஓவரின் தொடக்கத்தில், தேவைப்படும் ரன்கள் 34 ஆக இருக்க, அந்த ஓவரிலேயே, 25 ரன்கள் வந்து, இறுதி ஓவரில் வெல்ல 9 ரன்கள் போதும் என இலக்கை எளிதாக்கி விட்டது. பதற்றத்தில் அனுபவமில்லாத முகேஷால் அதனைத் தடுக்க முடியாமல் போக, மூன்று பந்துகள் எஞ்சியிருக்கும் போதே வெற்றி பெற்றுவிட்டது லக்னோ.

இன்னமும் இருபது ரன்கள் சிஎஸ்கேயின் தரப்பிலிருந்து வந்திருந்தால் போட்டியின் முடிவு கைமாறியிருக்கலாம் என்பது ஒருதரப்பு வாதம் என்றாலும், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கிட்டத்தட்ட 99 ரன்கள் தாக்குப்பிடிக்க விட்டதும், கேட்ச் டிராப்களும், ஷிவம் துபே வீசிய அந்த 19-வது ஓவரும்தான், வீழ்ச்சிப் பாதையில் சிஎஸ்கேவை நகர்த்தியது.

டாஸில் இருந்து எதுவுமே சிஎஸ்கேவிற்கு இருபோட்டிகளாகக் கைகொடுக்கவில்லை. மொயின் அலி உள்ளே வந்தும், வழமை மாறி பிளேயிங் லெவனை மாற்றி ஆடியும்கூட பலனில்லை. பிரிட்டோரியஸின் வருகை மற்றும் மலிங்காவின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ள பிராவோவை விலக்கி வைத்துப் பார்த்தால், பௌலிங் டிபார்ட்மெண்டும் மொத்தமாகத் தள்ளாடுகிறது. ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பிலும் துடிப்பு இல்லை. கேப்டனாக மட்டுமல்ல, பேட்ஸ்மேனாகவும் பழைய ஜடேஜாவைப் பார்க்க முடியவில்லை.

சாம்பியனாக மறுபடி வாகை சூட ஆசைப்பட்டால் இதை எல்லாம் சிஎஸ்கே சடுதியில் சரிசெய்ய வேண்டும்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-chennai-lost-to-lucknow-even-after-setting-a-big-target

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக