Ad

புதன், 30 மார்ச், 2022

RCB vs KKR: ஆரஞ்சும் எங்களுதுதான், பர்ப்பிளும் எங்களுதுதான்... எப்படி எப்படியோ போராடி வென்ற ஆர்சிபி!

தோனியின் அணி என்பது சாதாரண ஸ்கோராக இருந்தாலும், இருபது ஓவர் வரை விளையாடி விட்டுத்தான் அந்த இலக்கை எட்டும். கோலியின் ஆர்சிபியின் (யார் கேப்டன் என்றாலும் அது கோலியின் அணி தான்) ஃபார்முலாவே வேறு. பெரிய டார்கெட்டை அடித்துவிட்டு எளிதாகத் தோற்கும். சின்ன டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல் தோற்கும். தோற்பதற்காக ஃபார்முலா எழுதி விளையாடுகிறார்களோ என ஆர்சிபி ரசிகர்களே சிந்திக்கும் அளவு பல போட்டிகளில் அவர்களின் பெர்பாமன்ஸ் இருக்கும்.
RCB vs KKR

கொல்கத்தா வெர்சஸ் பெங்களூரு போட்டியில் கொல்கத்தா அடித்ததே 128 ரன்கள் தான். அட, அப்ப ஆர்சிபி ஜெயிச்சுடும் போல என மற்ற அணி ரசிகர்கள் எல்லாம் கேசுவலாக இருக்க, உச்சபட்ச பயத்தில் இருந்தார்கள் ஆர்சிபி ரசிகர்கள். கடைசியாக கொல்கத்தாவுக்கு விளையாடிய தினேஷ் கார்த்திக் புண்ணியத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற டு ப்ளெஸ்ஸிக்குக் கடந்த போட்டியின் ஞாபகம் வந்திருக்கும். எவ்ளோ அடிச்சாலும் போயிடுமோ என்கிற பீதியில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆர்சிபி அதே அணியுடன் களமிறங்கியது. ஷிவம் மவிக்குப் பதிலாக டிம் சௌத்தியுடன் களமிறங்கியது கொல்கத்தா.

Akash Deep | RCB vs KKR

வெங்கடேஷும், ரஹானேவும் ஓப்பனிங் இறங்க, மூன்றாம் ஓவர் வரை எந்தப் பாதிப்பும் இல்லாமல் 14 ரன்கள் அடித்திருந்தனர். சிராஜுக்குப் பதிலாக பந்துவீச வந்த ஆகாஷ் தீப், முதல் பந்திலேயே வெங்கடேஷை C&B முறையில் அவுட்டாக்கினார். சிராஜ் ரஹானேவுக்கு ஒரு ஷார்ட் போல் போட, அதில் ஷபாஷ் அஹமதிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ரஹானே. முதல் மூன்று விக்கெட்களையும் ஷார்ட் பாலில் எடுத்து அசத்தியது ஆர்சிபி. பவர்பிளே இறுதியில் மூன்று விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அணியின் சூழ்நிலையைப் புரிந்து வந்து விளையாடியிருக்க வேண்டிய ஸ்ரேயாஸும் லாங் ஆனில் நின்றுகொண்டிருந்த டு ப்ளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, ரைட்டு நெக்ஸ்ட் என ரிமோட்டைத் தேட ஆரம்பித்தனர் கொல்கத்தா ரசிகர்கள்.

அடுத்ததாக வந்தார் சுனில் நரைன். ஒரு காலத்தில் திடீரென ஓப்பனிங் இறங்கி, அதிரடியாக ஆடியவர். பின்பு அது பெரிதாக செல்ஃப் எடுக்காததால், அந்த ரிஸ்க்கை கொல்கத்தா எடுப்பதில்லை. ஆனாலும் இந்தப் போட்டியில் வேறு வழியில்லை. ஆகாஷ் வீசிய பந்தில் மிட் ஆஃப் திசையில் ஒரு பவுண்டரி, மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் எனப் பழைய நினைவுகளைக் கிளப்பினார். அடுத்த ஓவரில் பில்லிங்ஸும் ஒரு சிக்ஸ் அடிக்க, மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அது எப்படி சூடு பிடிக்கலாம் எனப் பற்ற ஆரம்பித்த நெருப்பில் தண்ணீரை ஊற்றி அணைப்பது போல அதே ஓவரில் நரைனும், அவருக்குப் பின்னால் வந்த ஜேக்சனும் அவுட். 67 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக நின்றது கொல்கத்தா.

ரஸல் | RCB vs KKR

டி20 போட்டிகளில் தன் 400வது போட்டியை ஆட வந்தார் ரஸல். இந்தப் போட்டியில் கொல்கத்தாவை இதற்கு மேல் காப்பாற்ற முடியும் என்றால், அது ரஸலால் மட்டும்தான் முடியும். ஓவருக்கு ஒருமுறை ரோப்பைத் தொட்டுக்கொண்டிருந்தது ரஸல் அடிக்கும் பந்து. 'இதெல்லாம் பத்தாது வீ வான்ட் மோர்' என்பது போல் டக் அவுட்டில் விழி பிதுங்கி நின்றது கொல்கத்தா. நாமளும் அடிப்போம் என பில்லிங்ஸ் லாங் ஆன் திசையில் ஓங்கி அடிக்க, அதைச் சுலபமாக கேட்ச் பிடித்தார் கோலி. ஷபாஷ் அஹமது ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து நூறை நோக்கி ஸ்கோரை நகர்த்தினார் ரஸல். ஹர்ஷல் ஓவரில் ரஸல்லும் அவுட்டாக, எல்லாம் முடிந்தது என நினைத்தால், வருண் ஆரோன் இரண்டு பவுண்டரி, உமேஷ் யாதவ் சிக்ஸர், பவுண்டரி எல்லாம் அடித்து 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கொல்கத்தா.

உமேஷ் யாதவின் பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே கீப்பர் ஷெல்டன் ஜாக்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ராவத். 128 ரன்களை எவ்வளவு விரைவாக அடிக்க முடியுமோ அடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் ஒன் டவுனில் வந்தார் கோலி. அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள். 'நைஷ்ல' என கிளாப் தட்டி முடிப்பதற்குள் ஆரஞ்சு கேப் நாயகனும், ஆர்சிபியின் தற்போதைய விடிவெள்ளியுமான டுப்ளெஸ்ஸி அவுட். இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட். அடுத்த பந்திலேயே கோலியும் ஸ்டம்பிங் முறையில் அவுட். 128 ரன்கள் டார்கெட் என்பதிலிருந்து சட்டென பழைய 49 ரன்கள் வரலாறு ஆர்சிபிக்கு நினைவுக்கு வந்தது.

RCB vs KKR

49ஐக் கடக்க வேண்டும், வெற்றியும் பெற வேண்டும் என்கிற மிகப்பெரிய பொறுப்புடன் ஆடத் தொடங்கினர் ரூதர்ஃபோர்டும், வில்லியும். சவுத்தி வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் எல்லாம் பந்தைத் தொடக்கூட முயலவில்லை ரூதர்ஃபோர்டு. பவர்பிளே முடிவதற்குள் இனியொரு விக்கெட் விழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பவர்பிளே முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

ஆட்டத்தின் முதல் திருப்புமுனை ரஸல் ரூபத்தில் வந்தது. ஷபாஷ் அஹமதுக்கு ஒரு நோபால் வீசினார். ஃப்ரீஹிட்டில் கூட சிங்கிள்தான் தட்டுவேன் என்கிற நிலைப்பாட்டில் இருந்த ரூதர்ஃபோர்டு அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் சிங்கிள் தட்டினார். ஷபாஷுக்கு ரஸல் ஷார்ட் பால் வீச, இடது கை பேட்ஸ்மேனான அவர் அதை மிக எளிதாக சிக்ஸருக்கு விளாசினார். மீண்டும் ஒரு ஷார்ட் பால் , ஈஸியாய் இருக்கிறதே என மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் ஷபாஷ். வந்த வேலை முடிந்துவிட்டதென ஸ்டம்பிங் ஆகி ஷபாஷ் கிளம்ப, போட்டியை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தத்துடன் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக்.

Umesh Yadav | RCB vs KKR

சவுத்தி வீசிய பந்து இன்சைட் எட்ஜாக உள்ளே செல்ல, அதை அட்டகாசமாக கேட்ச் பிடித்தார் ஜாக்சன். ஸ்டம்பிங், கேட்ச் என மின்னல் வேகக் கீப்பராக உருவெடுத்து வருகிறார் ஜாக்சன். ஹசரங்கா ஒரு பவுண்டரி அடிக்க, அது போதும் என நினைத்து அவுட்டாக, 12 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பெங்களூரு.

வெங்கடேஷ் வீசிய பந்தில் சிங்கிளுக்குத் தட்டிவிட முயன்றார் கார்த்திக். ஆனால், மோசமான ஜட்ஜ்மென்ட் காரணமாக இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒரே எண்டில் நின்றுவிட்டனர். எதிர்பாராத விதமாக ரன்அவுட் செய்யும் தருணத்தில் சொதப்பல் ஃபீல்டிங் செய்தது கொல்கத்தா. தப்பிப்பிழைத்த தினேஷ், ரஸல் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து தன் முந்தைய அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
Tim Southee | RCB vs KKR

கடைசி ஐந்து ஓவர்களில் தோனியின் அமைதியை தினேஷ் கார்த்திக்கிடம் காண்கிறேன் என எமோஷனலாய் பேசினார் டுப்ளெஸ்ஸி. பாஸ் பாஸ் ஒரு போட்டிதான் ஜெயிச்சிருக்கோம். ஃபீலிங்கஸ் கண்ட்ரோல் பண்ணுங்க, அடுத்து என்ன நடக்கப்போகுதுன்னு யாருக்கும் தெரியாது என ஆர்சிபி ரசிகர்களே அலறியிருக்கக்கூடும்.

நான்கு விக்கெட்டுகளை கைபற்றிய ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் இரண்டுமே பெங்களூரு அணியிடம்தான் இருக்கிறது என்பதைவிடவா பெங்களூரு ரசிகர்களுக்குச் சிறப்பான செய்தி ஒன்று இருக்கிறது.


source https://sports.vikatan.com/ipl/royal-challengers-bangalore-somehow-managed-to-win-against-kolkata-knight-riders

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக