Ad

திங்கள், 28 மார்ச், 2022

U19 ஸ்டார்; கம்பீர் கண்டெடுத்த முத்து; லக்னோவை சரிவிலிருந்து மீட்ட ஆயுஷ் பதோனி யார்?

ஐ.பி.எல் இல் புதிதாகக் கால்பதித்திருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அதில் குஜராத் டைட்டன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி தொடக்க ஓவர்களில் கடுமையாக திணறியிருந்தது. பவர்ப்ளேக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து லக்னோ அணியை 22 வயதே ஆன இளம் வீரரான ஆயுஷ் பதோனி மீட்டிருக்கிறார். அறிமுக ஐ.பி.எல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருக்கும் இந்த ஆயுஷ் பதோனி யார்?

ஆயுஷ் பதோனி டெல்லியை சேர்ந்தவர். பிரபலமான 'Sonnet' அகாடமியில் கிரிக்கெட் பயின்றவர். U16 மற்றும் U19 அணிகளுக்காக ஆடியபோதே பெரிய அளவில் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். 2016 இல் பிசிசிஐ 25 இளம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் மெருகேற்றும் வகையில் சிறப்பு பயிற்சிகளை கொடுத்தது. அந்த 25 வீரர்களில் பதோனியும் ஒருவர். 2018 இல் நடந்த U19 ஆசியக்கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஆயுஷ் பதோனி அமைந்திருந்தார். குறிப்பாக, இறுதிப்போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். பேட்டிங்கில் மட்டுமில்லை, ஸ்பின்னராகவும் சில விக்கெட்டுகளை வீழத்தி கலக்கியிருந்தார்.

Deepak Hooda & Ayush Badoni

அதே ஆண்டில் U 19 இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய இன்னிங்ஸ்களை ஆடியும் விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தியிருந்தார். U19 உள்ளூர் போட்டிகளிலுமே மிடில் ஆர்டரில் இறங்கி பல அதிரடிகளை நிகழ்த்தியிருக்கிறார். ஜூனியர் அணிகளில் கிடைத்த அளவுக்கான வாய்ப்புகள் சீனியர் அணிகளில் அவருக்குக் கிடைக்கவில்லை. டெல்லி அணிக்காக ஒரு சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

கடந்த ஐ.பி.எல் ஏலங்களில் பதோனியை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன் வரவில்லை. விற்கப்பட்டாத வீரராகவே இருந்தார். சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி அவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கே வாங்கியிருந்தது.

லக்னோ அணியின் ஆலோசகராக டெல்லியை சேர்ந்த கவுதம் கம்பீர் இருந்ததால் பதோனிக்கு இத்தனை நாளாகக் கிடைக்காமல் இருந்த வாய்ப்பு சாத்தியப்பட்டது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியிலேயே ப்ளேயிங் லெவனில் பதோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் மிகச்சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

குஜராத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட் செய்திருந்தது. குஜராத் அணியின் முகமது ஷமி பவர்ப்ளேயில் ஒரு வெறித்தனமான ஸ்பெல்லை வீசியிருந்தார். முதல் பந்திலேயே லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை காலி செய்தார். பவர்ப்ளேயில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். லக்னோ அணி பவர்ப்ளேயில் 32 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இப்படியான இக்கட்டான சூழலில்தான் தீபக் ஹூடாவுடன் பதோனி கைக்கோர்த்தார். ஒட்டுமொத்தமாக 41 பந்துகளில் 54 ரன்களைச் சேர்த்திருந்தார். தொடக்கத்தில் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் பொருட்டு பதோனி மெதுவாகவே ஆடினார்.

ஃபெர்குசன் சராசரியாக 145 வேகத்தில் வீசிய பந்துகளையும் புதிய தெம்போடு பந்தைக் கையில் எடுத்திருக்கும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்லிப் வைத்து அட்டாக் செய்த ரஷீத் கான் என அத்தனை பேரையும் திறம்பட எதிர்கொண்டு விக்கெட்டை விடாமல் க்ரீஸில் நின்றார்.

ஒரு கட்டத்தில் தீபக் ஹூடா கொஞ்சம் கியரை மாற்றி வேகமெடுக்க அவருக்கு உறுதுணையாக ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து கொடுத்தார். மேற்கொண்டு விக்கெட்டுகளை விட்டு தீபக் ஹூடாவிற்கு அழுத்தத்தை ஏற்றாமல் இருந்ததற்கே தனியாக பாராட்டலாம். தீபக் ஹூடா அரைசதத்தை கடக்கும் வரை அடக்கி வாசித்த பதோனி அதன்பிறகே தனது வேலையை காட்டினார்.

Badoni
ஹர்திக் பாண்டியா வீசிய 15 வது ஓவரில் முட்டிப் போட்டு லெக் சைடில் ஒரு சிக்சர், ஃபைன் லெக்கில் ஒரு ரேம்ப் ஷாட் பவுண்டரி, இடைவெளியைக் குறிவைத்து தேர்டுமேனில் ஒரு பவுண்டரி என வெளுத்தெடுத்தார்.

முதல் 22 பந்துகளில் 13 ரன்கள் என அமைதியாக ஆடிக்கொண்டிருந்தவர், அந்த ஹர்திக் பாண்டியா ஓவரிலிருந்து விஸ்வரூபம் எடுத்தார். அடுத்த 19 பந்துகளில் மட்டும் 41 ரன்களை சேர்த்திருந்தார். ரஷீத்கான், ஃபெர்குசன் ஆகியோரின் பந்துகளிலும் சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். 29-4 என்ற நிலையில் பதோனி க்ரீஸுக்குள் வந்தார். கடைசி ஓவரில் அவர் அவுட்டான போது அணியின் ஸ்கோர் 156-6. ஒரு பெரும் வீழ்ச்சியிலிருந்து அணியைக் காப்பாற்றிய மனநிறைவோடு பெவிலியனுக்குத் திரும்பினார்.

அறிமுக போட்டியிலேயே மறக்கமுடியாத அளவுக்கு தடம்பதித்திருக்கும் பதோனி இந்த சீசனின் இளம் சென்சேஷனாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!


source https://sports.vikatan.com/ipl/lucknow-super-giants-debutant-ayush-badoni-played-a-crucial-innings-against-gujarat-titans

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக