Ad

சனி, 26 மார்ச், 2022

ரூ.1,800 கோடியில் யாதகிரி நரசிம்ம சுவாமி கோயில்; நாளை மகா கும்ப சம்ப்ரோக்ஷணம்!

தெலங்கானா மாநிலதில் புவனா யாததிரி மாவட்டதில் யாதகிரிகுட்டா எனும் சிறு நகரத்தில் உள்ள குன்றின்மீது அமைந்துள்ளது யாதகிரி நரசிம்ம சுவாமி திருக்கோயில்.ஹைதராபாத் நகரத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் திருக்கோயில் புராண காலச் சிறப்பினை உடையது. ராமாயண காலத்தில் ஹனுமானின் கால்தடம் பதிந்த இடங்களில் ஒன்றாக இந்த இடம் கருதப்படுகிறது. இங்கிருக்கும் கோயில் தெப்பக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதே இல்லை என்கிறார்கள் பக்தர்கள்.

யாதகிரிகுட்டா நரசிம்மர் கோயிலில் அலங்கரிக்க இருக்கும் சங்கு சக்கர நாமம்

திரேதா யுகத்தில் ‘யாத ரிஷி’ என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் அனுமானின் அருள் பெற்று நரசிம்மரை நினைத்து தவம் செய்தார். இவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்ம மூர்த்தி ‘ஜ்வால நரசிம்மர்,’ ‘யோக நரசிம்மர்,’ ‘நரசிம்மர்,’ ‘உக்கிர நரசிம்மர்,’ ‘லட்சுமி நரசிம்மர்’ என்னும் ஐந்து திருவடிவங்களை எடுத்துத் தரிசனம் தந்தருளினார். இதனால் இத்தலத்தில் இருக்கும் கோயிலுக்குப் பஞ்ச நரசிம்மர் கோயில் என்றே திருநாமம் ஏற்பட்டது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸகந்த புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

புராணச் சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் வந்து வழிபாடு செய்தால் பக்தர்களின் நோய் தீர்கிறது என்பது நம்பிக்கை. அதனாலேயே இத்தல நரசிம்மரை ‘வைத்திய நரசிம்மர்’ என்று போற்றுகிறார்கள். அதேபோன்று கிரக தோஷங்களால் துன்புறுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் அவை உடனே நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இங்கு சுவாமிக்கு வேண்டிக்கொண்டு ஒரு மண்டல காலம் விரதமிருக்கும் பழக்கம் பக்தர்களிடையே உள்ளது.

விஜயநகரப் பேரரசை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தன் சுயசரிதையில் இந்த ஆலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் முன்பும் அவர் இங்கு வந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது அவர் எழுதிய நூலின் மூலம் தெரியவருகிறது. இந்த நரசிம்மரை வணங்கினால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது அவர் நம்பிக்கை.

யாதகிரிகுட்டா லட்சுமி நரசிம்மர்

இத்தகைய சிறப்புமிக்க திருத்தலத்தில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையானின் திருக்கோயில் எப்படி சிறப்புடன் திகழ்கிறதோ அதேபோன்று இந்தத் தலமும் திகழ வேண்டும் என்பது தெலங்கானா அரசின் திட்டமாக உள்ளது. இதற்காக 2016 -ம் ஆண்டு தெலங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் ரூ 1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். நாட்டின் மிகப்பெரிய ஆலயத் திட்டமாகக் கருதப்பட்ட அயோத்தியா ராம் மந்திரைவிட அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்ற திருப்பணி இது என்கிறார்கள். பிரமாண்டமாக 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஆகம விதிப்படியும், காக்கத்தியர் கட்டடக்கலையினைப் பின்பற்றியும் கருப்பு கிரானைட் கற்களைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் இந்த ஆலய வளாகத்தில் ஏழு கோபுரங்கள், விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களைக் குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களில் மொத்தம் 52 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கலசம் அமைக்கும் பணியைச் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டது. கோயில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நகரமுமே புதுப் பொலிவுபெற்று சீரான சாலை வசதிகளோடு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

யாதகிரிகுட்டா நரசிம்மர் கோயில்

ஆலயத்தின் அனைத்துப் புனரமைப்புப் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில் 28.3.22 அன்று கோயிலில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதை மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முன்னின்று நடத்த இருக்கிறார். அதன்பின் தெலங்கானாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இது திகழும் என்பதில் சந்தேகமில்லை.



source https://www.vikatan.com/spiritual/temples/indias-costlier-temple-town-is-set-to-inagurated-by-telungana-cm-on-march-28th

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக