Ad

ஞாயிறு, 6 மார்ச், 2022

``உள்ளாட்சி முதல் அமைச்சர்கள் வரை, சிறு தவறு நடந்தாலும்..!" - திமுக-வினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அரங்கத்தின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல உருவச் சிலையை தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சியின் முன்னோடிகள், 300 பேருக்கு பொற்கிழி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு முதல்முறையாக இங்கு வந்துள்ளேன். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி சாதாரணமானது அல்ல. இதுவரை இந்தக் கட்சி கண்டிராத ஒரு மாபெரும் வெற்றி. இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இல்லையே என எனக்குள் இருந்தது.

கலைஞரின் வெண்கலச்சிலை

ஆனால், அவரின் உருவச்சிலையை இந்த வெற்றித் தருணத்தில் திறந்து வைத்தது எனக்கு மகிழ்ச்சி. தமிழக மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையினால்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் நமக்கு வெற்றியை தந்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர், நகராட்சிகளின் சேர்மன், துணை சேர்மன், மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் அண்ணா, கலைஞர் சொன்னதுபோல மக்களுக்காகப் பாடுபட வேண்டும்.

நான் கடந்த 1996-ல் சென்னை மாநகராட்சியின் பொறுப்பேற்கச் செல்வதற்கு முன்பு நான் பேசுவதற்காக தயாரித்து வைத்திருந்த குறிப்பை தலைவர் கலைஞரிடம் காட்டினேன். அதில், `மேயர் பதவி’ எனக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர், `மேயர்’ என்பதை `பொறுப்பு’ எனமாற்றியிருந்தார்.

திறக்கப்பட்ட கலைஞரின் வெண்கலச்சிலை

அதுமட்டுமில்லாமல் அது ஒரு `மக்கள் பணி’ எனச் சொன்னார். அது மேயர் பதவிக்கு மட்டுமல்ல, உள்ளாட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் அது பொருந்தும். பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், இதைப் பதவியாகப் பார்க்காமல் பொறுப்பாகவேப் பார்க்க வேண்டும். உங்களது பணியினை சரியாகச் செய்கிறீர்களா, இல்லையா என்பதை நான் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் சிறு தவறு நடந்தாலும், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

இதை யாரையும் அச்சப்படுத்துவதற்காகவோ, மிரட்டுவதற்காகவோ நான் சொல்லவில்லை. அவரவரின் பொறுப்பினை உணர்த்துவதற்காகச் சொல்கிறேன். அண்ணா சொன்ன கடமை, கண்ணியத்தையும் விட கட்டுப்பாடுடன் பணியாற்ற வேண்டும்" என்றார்.

பின்னர் இறுதியாக, ``இது உள்ளாட்சியில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு மட்டும் இல்லை. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் வரை அனைவருக்குமே பொருந்தும்” எனச் சொல்லி முடித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் ஆகியோரும், எம்.எல்.ஏக்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-leader-mk-stalin-warns-his-parties-local-body-representatives-to-ministers-in-tuticorin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக