உறவுகளுக்குள் என்னதான் பிரச்னை ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் போனாலும், ஆபத்து என்று வரும்போது கை கொடுக்க வந்து நிற்பார்கள். தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் சிறுவன் ஒருவன் சிக்கி கொள்ள, அருகில் இருந்த உறவினரை பார்த்து, அலறியுள்ளான். ஒரு அடி இடப்பிரச்னைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அக்குடும்பத்தினருடன் பேசாமல் இருந்த சிறுவனின் மாமா, சிறுவனை காப்பாற்ற சென்றுள்ளார். இதில் இருவருமே உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பலியான சாமிநாதன்
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஒரே ஊரில் ஒரே நேரத்தில் 11 பேர் இறந்ததால் அந்த கிராமம் முழுவதும் இப்போதும் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
களிமேடு கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(42). விவசாயியான இவருக்கு திருமணமாகி, ராஜ்குமார்(14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரின் சொந்த தாய் மாமன் சாமிநாதன் (56). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். சாமிநாதனுக்கும், முருகேசனுக்கும் தங்கள் இரு வீட்டுக்கு நடுவே உள்ள பாதை தொடர்பாக இடப்பிரச்னை இருந்துள்ளது.
சிறுவன் ராஜ்குமார்
ஒரு அடி அளவிலான இடம் இரு குடும்பத்துக்குள்ளும் பேச்சு வார்த்தையே இல்லாத அளவிற்கு கொண்டு சென்று விட்டது. மேலும் அடிக்கடி இடம் தொடர்பாக இரண்டு குடும்பமும் சண்டை போட்டு வந்துள்ளனர். கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இந்த பிரச்னை நீடித்து வந்துள்ளது. இந்த பிரச்னை காரண்மாக, சிறுவன் ராஜ்குமார் முதற்கொண்டு இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் பேசிக்கொள்வதில்லையாம்.
இந்நிலையில் களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் சிறுவன் ராஜ்குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தேரை இழுத்து சென்றுள்ளான். கொஞ்ச தூரத்தில் மாமா சாமிநாதனும் சென்றுள்ளார். இதனிடையே மின்சாரம் தாக்கிய நிலையில் பலர் தூக்கி வீசப்பட்டனர். கரண்ட் ஷாக்கை தாங்க முடியாத ராஜ்குமாரும் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். அப்போது, சாமிநாதனை பார்த்த சிறுவன், மாமா என அழைத்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்
மேலும் அவர்கள் கூறுகையில், ``சாமிநாதனும் பதறியபடி சிறுவனை காப்பாற்றுவதற்கு ஓடோடி சென்றுள்ளார். தேரை வரவேற்க ரோட்டுல தண்ணீர் ஊத்தியிருந்ததால மின்சாரம் ரோட்டுலயும் பாய்ந்துள்ளது. ராஜ்குமாரை தூக்க சென்ற சாமிநாதன் ரோட்டுல மின்சாரம் பாய்ந்த இடத்தில் கால் வச்சதுமே தூக்கி வீசப்பட்டார்.
இதில் இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சாமிநாதன் விபத்து நடந்த இடத்தில் இல்லையென்றாலும், ராஜ்குமாரை காப்பாற்ற சென்றபோது அவர் உயிரழந்ததை குறித்து சோகமாக பேசிக்கொள்கிறார்கள்,
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தொடர் புகார் வந்தது. அதோடு, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதற்கு பிறகு பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கையின்படி, பள்ளியில் இடை நின்றவர்கள் அதிகளவில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டது. இதனால், இடைநின்ற மாணவர்கள் என்ன ஆனார்கள், என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உத்தரவின் பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இடைநின்ற குழந்தைகளின் வீட்டு முகவரிக்கு சென்று அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனரா, அல்லது வேலைக்கு செல்கின்றனரா என்று நேரடி ஆய்வில் இறங்கினர். அவர்களின் விசாரணையில், பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்ப பெற்றோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.
நாமக்கல்
அதோடு, நாமக்கல் மாவட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினர் வேலைக்கு செல்கின்றனரா என்பது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் 45 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு நிறுவனத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளி பணிபுரிந்து வந்ததையும், 6 நிறுவனங்களில் 18 வயதிற்கு உட்பட்ட 6 வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததையும் கண்டறிந்தனர். அந்த வகையில், மொத்தம் 7 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதோடு, மேற்கண்ட 7 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீதும் குழந்தை தொழிலாளர் சட்ட விதிகளின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "குழந்தை தொழிலாளர்களையோ, வளரிளம் பருவத்தினரையோ பணிக்கு அமர்த்தினால் குறைந்தபட்சமாக அபராதம் ரூ. 20,000 விதிக்கப்படும்" என தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலியல் வன்முறை செய்த 10 லட்சத்துக்கும் அதிகமான குற்றவாளிகளின் விவரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் சட்ட அமலாக்கத் துறையினரால் தேவையான நேரத்தில் புதிய விசாரணையின்போது பயன்படுத்திக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டுக்கான மத்திய அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி, பாலியல் குற்றவாளிகள் மீதான தேசிய தரவுத்தளத்தில் (NDSO - National Database on Sexual Offenders) நாட்டில் 10.69 லட்சத்துக்கும் அதிகமான பாலியல் குற்றவாளிகளின் தரவுகள் உள்ளன.
Sexual Harassment (Representational Image)
பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பெண்களைத் துன்புறுத்துதல், மற்றும் சிறார் வதை குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளின் விவரங்கள் இந்தத் தரவுத்தளத்தில் கிடைக்கின்றன. இந்த தரவுகளில் குற்றவாளிகளின் பெயர், முகவரி, புகைப்படம், அடையாள அட்டை மற்றும் கைரேகை விவரங்கள் போன்றவையும் உள்ளன. நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சட்டத் துறையினருக்கு, இந்தத் தரவுகள் மூலம் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்தவும், தவறிழைப்பின் உடனடியாக குற்றவாளிகளைப் பிடிக்கவும் உதவ இயலும்.
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் NDSO ஆரம்பிக்கப்பட்டது. இன்டர் ஆப்பரபிள் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம் (ICJS - Inter-operable Criminal Justice System) தளத்தை மேம்படுத்துவதன் மூலம், அறியப்பட்ட பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் தரவுத்தளத்தில் குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தளம் 24 மணிநேரமும் இயங்கக்கூடியது.
Sexual Harassment (Representational Image)
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் டிரினிடாட் போன்ற நாடுகளில் இத்தகைய தரவுத்தளங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இதுபோன்ற தரவுத்தளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேகேஆருக்கு எதிராக மீண்டுமொரு முறை குல்தீப் விஸ்வரூபமெடுக்க, ராணாவின் அரைசதம் வீணாகும்படி முஸ்தஃபிஸுரின் முடிவுரை முத்தாய்ப்பாக அமைந்தது. பேட்டிங்கிலோ வார்னர் தொடக்கத்தைச் சிறப்பாக்க, இறுதிக் காரியங்களை பவல் சிறப்பாகச் செய்தார்.
மோதல்கள் சுவாரஸ்யமூட்டும் என்றாலும் பழிவாங்கும் படலங்கள் அதை இன்னொரு உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த சீசனில் கேகேஆர் - டெல்லிக்கு இடையேயான முதல் சந்திப்பில் டெல்லி, குல்தீப்பின் எழுச்சியால் வாகை சூடியது. அதற்கு முன்னதாக 3/4 என காலரைத் தூக்கிவிட்டுச் சுற்றிய கேகேஆர், டெல்லியுடனான அந்த வீழ்ச்சிக்குப்பின் ஒரு போட்டியில் கூட வெல்லவேயில்லை. வரலாறு மாறுமென நினைத்தால் சரித்திரம் திரும்பியது.
ஒரு அணியின் வெற்றிக்கான பாதித் திரைக்கதை பவர்பிளே ஓவர்களிலேயே ஓப்பனர்களால் எழுதப்பட்டு விடும். பல சீசன்களாக கேகேஆர் தடுமாறுவதும் இப்புள்ளியில்தான். 'நிரந்தர ஓப்பனர்கள்' என்பது அவர்களது அகராதியிலேயே இருப்பதில்லை. அதேசமயம், கேகேஆரின் இன்னொரு தலைவலியாக மாறியிருப்பது கடந்த சீசனில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய வெங்கடேஷின் தற்போதைய ஃபார்ம். 'ஓப்பனரா அல்லது ஃபினிஷரா, அவரை எங்கே குடியமர்த்தலாம?!' என்பதில் கேகேஆரின் தடுமாற்றமும் அதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் அளவுக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் பவர்பிளே ஓவர்களே அதற்கான சாட்சி.
DC v KKR
இப்போட்டியிலும் முதல் ஆறு ஓவர்களில் 29 ரன்கள் என்னும் படுமோசமான தொடக்கம் மட்டுமல்ல, 'ஓப்பனர்களது விக்கெட்டுகள்' என்னும் பேரதிர்ச்சியுமே அவர்களை வரவேற்றன. ஸ்விங்கான பந்துகளும், ஃபின்ச்சின் தடுமாற்றமும் எல்பிடபிள்யூவிலோ, ஸ்டம்புகள் சிதறியோ அவர் வெளியேறுவார் எனக் கட்டியம் கூற, அது சகாரியாவின் ஓவரில் நடந்தேறியது. டெல்லி அணிக்கான தனது அறிமுகப் போட்டியின் முதல் ஓவரிலேயே அவரது அதி அற்புத இன்ஸ்விங் ஃபின்சை வெளியேற்றியது. வழக்கம் போல் தாக்கூரின் பவர்பிளே ஓவர் காஸ்ட்லி ஆனாலும், அக்ஸர் கைகொடுத்து வெங்கடேஷையும் வெளியேற்றினார். அட்டாக்கிங் பேட்டிங்கிற்கும் அவசர பேட்டிங்கிற்கும் நூலிழையில்தான் வேற்றுமை; வெங்கடேஷ் சிக்குவதும் இங்கேதான். கடைசி சீசனில், 40-களில் இருந்த அவரது ஆவரேஜ், இந்த சீசனில் 15-க்கும் கீழ் பாதாளம் பாய இதுதான் காரணம்.
கேகேஆரின் சாபம் ஓப்பனர்களோடு முடியவில்லை, அதன் பின்னும் நீண்டது, குல்தீப்பின் ஸ்பெல் அதை நீட்டித்தது. எட்டாவது ஓவரிலேயே ஸ்ரேயாஸ் - இந்திரஜித் கூட்டணியை உடைக்க பண்ட் அவரைக் கொண்டுவர, இரண்டு பந்துகள், இரண்டு கூக்ளிக்களாகி இரட்டைத் தாக்குதல் நடத்த, இரண்டு விக்கெட்டுகளும் விழுந்தன. அறிமுகப் போட்டியை ஆடிய இந்திரஜித்தாலும் சரி, அனுபவமிக்க நரைனாலும் சரி, அதனை எதிர்கொள்ள முடியவில்லை.
அதிலிருந்து மீளுவதற்கு முன்னதாகவே, குல்தீப்பின் இன்னொரு ஓவரில் ஸ்ரேயாஸ் மற்றும் ரசல் என கேகேஆரின் இரண்டு பெரிய தலைகளும் உருண்டன. அபாயகரமான ஸ்ரேயாஸை வெளியேற்ற பண்ட் பிடித்த அந்தக் கேட்ச் இந்த சீசனின் சிறந்த கேட்ச்களில் ஒன்று. ரசலும் டக் அவுட் ஆகி ரசிகர்களை வேதனைக்கு உள்ளாக்கினார். குல்தீப்பின் இந்த இரு ஓவர்களது தாக்குதல்கள்தான் கேகேஆரை மொத்தமாக உலுக்கின. இவ்வளவுக்கும் தனக்கான நான்கு ஓவர் கோட்டாவை அவர் முழுமையாக வீசவில்லை. 3 ஓவர்களில், 4 விக்கெட்டுகள், 4.7 எக்கானமி என்ற குல்தீப் சூறாவளியின் தாக்கத்தின் வீரியத்தையே கேகேஆரால் தாங்க முடியவில்லை. வான்கடேயில் நடப்பு சீசனில் 70 சதவிகிதம் விக்கெட்டுகள் வேகத்தால் வீழந்திருந்தால்தான் என்ன, 'வல்லவனுக்கு ஸ்பின்னும் வலைதான்' என்பதை குல்தீப் நிருபித்து விட்டார்.
DC v KKR
ஸ்ரேயாஸ் 42 ரன்களில் வெளியேற, இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் டாப் 15-ல் இருக்கும் ஒரே வீரர் அவர் மட்டும்தான் என்பதே கேகேஆரின் பலவீனத்துக்கான சான்றாகியது. இருப்பினும் அவர் தவிர்த்து வேகத்தையும் சுழலையும் ஓரளவு தாக்குப்பிடித்த மற்றொரு கேகேஆர் வீரராக இப்போட்டியில் நிதீஷ் ராணா வலம் வந்தார். குல்தீப்பின் முதல் இரட்டைத் தாக்குதல் நடந்தேறிய சோதனைக் காலத்தில் உள்ளே வந்தவர், இறுதி ஓவர் வரை அவர்களது ஒரே நம்பிக்கையாகக் களத்தில் நின்றார். மிரட்டும் டெல்லியின் பௌலிங்கைத் தாக்குப் பிடித்து, 168 ஸ்ட்ரைக் ரேட்டோடு 57 ரன்களை அவர் குவித்ததால் மட்டுமே 146 என்னும் கௌரவ ஸ்கோரோடு கேகேஆர் முடித்தது.
குல்தீப் மற்றும் ராணாவை நாயகர்களாக்கி இடைவேளை விட முடியாத அளவு, நம்ப முடியாத ஒரு ஓவர் கடைசியாக முஸ்தஃபிஸுரிடம் இருந்து வந்தது. மூன்று விக்கெட்டுகளோடு கேகேஆரை மூழ்கடித்தார். ஃபுல் லெந்த்தில் முன்னேறி வந்து ரிங்குவின் மைக்ரோ கேமியோவை முடித்து வைத்த அவரது பந்து, அடுத்ததாக பேக் டு பேக் விக்கெட்டுகளை வாங்கியது. ராணாவிற்கான ஆயுதமாக அவர் வீசிய சவாலான பந்தை ராணா அடிக்க, அந்தக் கேட்சை சகாரியா தவறவிடவில்லை. அடுத்ததாக, சவுத்தியின் ஸ்டம்ப்பை முஸ்தஃபிஸுரின் அதிவேக யார்க்கர் குசலம் விசாரித்தது. முன்னதாக இரு கூக்ளிகள் அதகள தொடக்கமளித்தன என்றால், முஸ்தஃபிஸுரின் யார்க்கர் இறுதியுரை எழுதியது.
நடப்பு சீசனில் வான்கடேயின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 170-க்கும், தங்களது அணிக்கான இலக்கான 147-க்கும் இடையேயான இடைவெளி, சில டெல்லி ரசிகர்களை 'எங்கள் கணக்கில் இரண்டு' என களிப்படையச் செய்திருக்கும். அதே நேரத்தில் நடப்பு சீசனில் முதல் நான்கு போட்டிகளில் வேண்டுமெனில் அணிகள் சேஸ் செய்திருக்கலாம். அதற்கடுத்த ஐந்து போட்டிகளிலும் அணிகள் ஸ்கோரை டிஃபெண்டே செய்திருக்கின்றன என்ற உபரித் தகவல் தெரிந்தவர்களைச் சற்றே பயம் கவ்வியிருக்கும்.
DC v KKR
அந்த அச்சத்திற்கான அடித்தளத்திற்கு வலுவூட்டும் வகையில் ஆரம்பம் அமைந்தது. புதுப்பந்து தரும் விக்கெட்டுகளின் வாடையை உமேஷின் மூலம் தொடர்ந்து உணர்ந்து வரும் கேகேஆருக்கு இப்போட்டியிலும் அது தொடர்ந்தது. ஃபுல் லெந்த்தில் சென்ற பந்து ப்ரித்வியின் பேட்டில் பட்டு எட்ஜாக, உமேஷின் மூளையும் கைகளும் போட்டி போட்டு இணையாகச் செயல்பட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்தன. ஆனால் களப்பலிதான் பார்த்துக் கொள்ளலாம் எனக் கடந்து போக முடியாதவாறு அடுத்த ஓவரிலேயே மிட்செல் மார்ஷின் விக்கெட்டை அறிமுக வீரரான ஹர்சிட் ராணா எடுத்தார். அதற்கு முந்தைய பந்தே பவுண்டரியானாலும் அதற்கடுத்த பந்திலேயே மீண்டு வந்தார்.
இந்த இடத்தில்தான் டெல்லி, கேகேஆர் ஸ்க்ரிப்டில் இருந்த தவற்றை தாங்களும் திரும்ப எழுதுவதைத் தவிர்த்தது. பார்ட்னர்ஷிப்கள்தான் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழும் சமயத்தில் அணிகள் மூச்சு விட்டு நிதானப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தைத் தரும். அதை உணர்ந்து வார்னர் - லலித் யாதவ் நிதானத்தை பிரதானமாக்கினர். 48 பந்துகள் நீடித்த இக்கூட்டணி, 65 ரன்களைச் சேர்த்ததோடு கப்பல் மூழ்குவதைத் தடுத்து நங்கூரமிட்டது.
இது வேலைக்காகாது என உமேஷை ஸ்ரேயாஸ் கொண்டுவர, வார்னரது கதையை உமேஷின் பவுன்சர் முடிக்க, பார்ட்னர்ஷிப் உடைந்தது. 26 பந்துகளில் 42 ரன்களோடு வெளுத்து வாங்கியிருந்தார் வார்னர். செட்டில் ஆன இன்னொரு பேட்ஸ்மேனையும் நரைனைக் கொண்டு வந்து கேகேஆர் அனுப்பியது. உமேஷுக்கு இன்னுமொரு ஓவரும் கொடுக்கப்பட, ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பேக் ஆஃப் தி லெந்த்தில் வீசப்பட்ட பந்தில் பண்ட்டின் விக்கெட்டும் பறிபோனது. இந்திய டி20 அணியின் நிரந்தர வீரர்களில் சிலர், இந்த ஐபிஎல்லில் சோபிக்காமல் சொதப்புவது ரசிகர்களிடையே சற்றே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
DC v KKR
அடுத்ததாக பவலுடன் இணைந்து அக்ஸர் படேல் தனது ஆல் ரவுண்டிங் திறமையை நிருபித்துக் கொண்டிருக்க, 15-வது ஓவரில் தேவையில்லாத அவரது ரன் அவுட் திடீர் திருப்புமுனையானது. எனினும் அது வெறும் வளைவே டெத் எண்டல்ல என்பதனை பவல் - தாக்கூர் கூட்டணியும், 30 பந்துகளில் வெறும் 37 ரன்களே தேவை என்பதும் நிருபித்தன. மூழ்க இருந்த டெல்லியை நீர்மூழ்கிக் கப்பலாக மாற்றி இந்த பார்ட்னர்ஷிப்கள் ஏற்கெனவே கரைசேர்த்திருந்தன.
இறுதியாக, ஸ்ரேயாஸின் அட்டகாசமான கேப்டன்ஷிப் நகர்வுகளோ, 19-வது ஓவரில் பந்து வீசும் அவரது துணிகர முடிவோ... எதுவுமே காப்பாற்றவில்லை. போன போட்டியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த பவல், முழுமையான ஃபினிஷர் அரிதாரத்தை மீண்டும் பூசி, சிக்ஸரோடு இலக்கை எட்டினார், பவல். ஆறு பந்துகள் மீதமிருக்க, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் ஓரடி முன்னேறியது டெல்லி.
பவர்பிளே பற்றாக்குறைகள், பேட்டிங் பரிதாபங்கள், எட்டுப் பேர் பந்து வீசியும் தீராத அவர்களது பந்து வீச்சு பலவீனம் என எல்லாமே சேர்ந்து மறுபடியும் ஒரு தோல்வியை கொல்கத்தாவின் கணக்கில் சேர்த்து விட்டது. தொடர்ச்சியான தோல்விகள் அவர்களை பலவீனப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு தோல்வியும் தொடரை விட்டு அவர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் அடிகள் என்பதே உண்மை.
DC v KKR
டெல்லியைப் பொறுத்தவரை குறைபாடுகள் அங்கங்கே விரவிக் கிடந்தாலும், போராடிக் கிடைத்திருந்தாலும் இந்த வெற்றி அடுத்தடுத்த மோதல்களுக்குத் தேவைப்படும் ஆற்றலையும் நம்பிக்கையையும் அவர்களுக்குள் துளிர்விட வைத்துள்ளது.