Ad

சனி, 26 பிப்ரவரி, 2022

Doctor Vikatan: பல ஆண்டுகளாக துன்புறுத்தும் பைல்ஸ் பிரச்னை; அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வா?

எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்புற மூலநோய் பிரச்னை இருக்கிறது. இதுவரை எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. இப்போது அது அளவில் பெரிதாவதுடன், லேசான அரிப்பும் எரிச்சலும் இருப்பதை உணர்கிறேன். என் அம்மாவுக்கும் இதே பிரச்னை இருந்து பைல்ஸ் அறுவை சிகிச்சை செய்ததில் அவர் இறந்துவிட்டார். அதனால் ஆபரேஷன் செய்துகொள்ள எனக்கு பயமாக இருக்கிறது. இதைக் குணப்படுத்த வேறு வழிகள் உண்டா?

- ரோஜா பானு (விகடன் இணையத்திலிருந்து)

பினாக் தாஸ்குப்தா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா.

``உங்களுக்கு இருக்கும் எக்ஸ்டெர்னல் பைல்ஸ் பிரச்னையால் மலச்சிக்கலும், வீக்கமும், அரிப்பும், வலியும் இருக்கலாம். பெரும்பாலும் ஆசனவாய்ப் பகுதியில் ரத்தம் வராது. ஒருவேளை ரத்தம் வந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

உங்கள் அம்மாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் செய்ததால் அவர் இறந்துவிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். பைல்ஸ் அறுவைசிகிச்சை ரொம்பவும் எளிமையானது. அதில் இப்படி உயிரிழப்பு நேர வாய்ப்பே இல்லை. உங்கள் அம்மாவுக்கு வேறு பிரச்னைகள் இருந்தனவா என்று தெரியவில்லை. அவரது மெடிக்கல் ரிப்போர்ட், அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் என மற்ற தகவல்கள் தெரிந்தால்தான் அது குறித்துச் சொல்ல முடியும்.

உங்கள் விஷயத்தில் நீங்கள் அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் பரிசோதித்துப் பார்த்தபிறகுதான் உங்களுக்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என நீங்களாக நினைக்க வேண்டாம்.

Doctor

சில வேளைகளில் அந்தப் பகுதியில் தடவும் க்ரீம்கள், உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் சிரப் மாதிரியான மருந்துகள் மூலமே குணப்படுத்த முடியும். ஆனால் மருத்துவரையே அணுகாமல் அலட்சியமாக இருப்பது மட்டும் வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/what-is-the-solution-to-external-piles-problem

முளைத்த வெந்தய சாலட் | பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு | கீரை தரிவால் - ஹெல்தி வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்கு ரத்தச்சோகை பிரச்னை இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் அடக்கம். 'நல்லாதான் சாப்பிடறோம்...' எனச் சொல்லிக்கொள்பவர்களுக்கும் ரத்தச்சோகை இருக்கலாம். எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பதைவிடவும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.

இந்த வார வீக் எண்டுக்கு ரத்தச்சோகையை விரட்டும், அயர்ன்ரிச் உணவுகளை முயற்சி செய்யலாமே...

தேவையானவை:

முளைகட்டிய வெந்தயம் - 100 கிராம்
குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
வறுத்த எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - சிறிதளவு (விரும்பினால்)
வறுத்த வேர்க்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
வறுத்த ஆளி விதை - சிறிதளவு
வறுத்த மோர் மிளகாய் - ஒன்று
எலுமிச்சைச்சாறு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

முளைத்த வெந்தய சாலட்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முளைத்த வெந்தயத்துடன் குடமிளகாய், வறுத்த எள், தேங்காய்த்துருவல், வறுத்த வேர்க்கடலை, வறுத்த ஆளி விதை, உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, மோர் மிளகாயைத் தாளித்து சாலட்டுடன் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.

குறிப்பு: வெந்தயம் மற்றும் ஆளி விதையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

பொட்டுக்கடலை, ஓட்ஸ் - தலா அரை கப்
துருவிய வெல்லம் - ஒரு கப்
நெய் - தேவையான அளவு
கொப்பரைத்துருவல் - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
(பொடியாக நறுக்கவும்)
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை

பொட்டுக்கடலை ஓட்ஸ் லட்டு

செய்முறை:

வெறும் வாணலியில் ஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் பவுடராகப் பொடிக்கவும். இதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்துப் பொடித்து எடுக்கவும்.

வாணலியில் நெய்விட்டு உருக்கி முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் சேர்த்து வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இதனுடன் கொப்பரைத்துருவல், ஏலக்காய்த்தூள், அரைத்த ஓட்ஸ், பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். மாவைச் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு: பொட்டுக்கடலை, ஓட்ஸில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

கம்பு அவல் - 2 கப்
பிரியாணி இலை, மராட்டி மொக்கு - தலா ஒன்று
ஏலக்காய், கிராம்பு - தலா 2
அன்னாசிப்பூ - ஒன்று
பட்டை - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 100 கிராம் (தோலுரித்தது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம்
சிறிய சோயா உருண்டைகள் - 20 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
வதக்கிய புதினா இலைகள் - அரை கப்
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

புதினா கம்பு அவல் பிரியாணி

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். தண்ணீரில் கம்பு அவலை போட்டு அலசி உடனே பிழிந்தெடுக்கவும். சோயா உருண்டைகளைச் சூடான தண்ணீரில் போட்டு பிழிந்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, மராட்டி மொக்கு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப் பூ, பட்டை சேர்த்து தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கொண்டைக்கடலை, சோயா அரைத்த விழுதைச் சேர்க்கவும். நல்ல வாசனை வந்த பிறகு அவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு கலந்தால் பிரியாணி ரெடி.

குறிப்பு: கொண்டைக்கடலை, புதினா, சோயா, கம்பில் இரும்புச்சத்து உள்ளது.

தேவையானவை:

முளைகட்டிய பாசிப்பயறு - ஒரு கப்
அரைக்கீரை - அரை கட்டு
(ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கவும்)
சீரகம் - அரை டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க:

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
உரித்த பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள், சர்க்கரை, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கீரை தரிவால்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் பாசிப்பயறு, கீரை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் தக்காளி, வேகவைத்த கீரை, பயறு கலவை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கிச் சுவைக்கலாம்.



source https://www.vikatan.com/food/recipes/fenugreek-salad-peanut-oats-laddu-mint-millet-poha-biriyani-weekend-recipes

பஞ்சாங்கக் குறிப்புகள் - பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்
பஞ்சாங்கக் குறிப்புகள்


source https://www.vikatan.com/spiritual/astrology/panchangam-details-for-the-period-of-february-28th-to-march-6th

``புள்ளி கிடைத்தால், கோலம் போட்டுவிடுகின்றன எதிர்க்கட்சிகள்!'' - சொல்கிறார் குஷ்பு

கர்நாடக அரசியலில், ஹிஜாபை முன்வைத்து அரசியல் என்றால், தமிழ்நாட்டிலோ 'தி.மு.க-வுக்கு எதிர்க்கட்சி நாங்கள்தான்' என்று சவால் விடுவது முதல், தேர்தல் முடிவுக்குப் பின்பு, 'மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான்' எனச் சொல்லிக்கொள்வது வரை... தமிழக அரசியலில் பா.ஜ.க-வின் அதகளமே தனி ரகம்தான்!

இந்த நிலையில், பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்...

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வுக்காக பரப்புரை செய்தீர்களே... மக்களிடையே எந்தளவு வரவேற்பு இருந்தது?''

''மக்களிடம் பா.ஜ.க-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 'தாமரைன்னா மோடிஜி-யோட கட்சிதானே... அப்ப எங்களோட ஓட்டு உங்களுக்குத்தான்'னு மக்கள் சொல்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் குஷ்பு

'தமிழகத்தில் தமரை மலரவே மலராது' என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களை வென்று பதிலடி கொடுத்துவிட்டோம். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எங்களுக்கு இந்தத் தேர்தல்தான் அடித்தளம்!''

''கோவையில், மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதாகக்கூறி பா.ஜ.க வேட்பாளர் ஹெல்மெட் அணிந்து பிரசாரம் செய்தாரே...''

''வேட்பாளர் மீது கல்லெடுத்து வீசியவர்கள் யார்? நிச்சயம் மக்கள் கல்வீசியிருக்க வாய்ப்பில்லை. ஆக, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் கல் வீசித் தாக்கியிருப்பார்கள்.''

''ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பி அதன் வழியே வாக்குச் சேகரிக்கும் உத்தியை பா.ஜ.க பின்பற்றிவருவதாகச் சொல்கிறார்களே?''

''மத்திய ஆட்சிப் பொறுப்பில், வலுவாக அமர்ந்திருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். தொடர்ந்து மத்திய அரசு செய்துவரும் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லியே நாங்கள் வெற்றிபெற முடியும் என்கிறபோது, நாங்கள் ஏன் சர்ச்சைகளை உருவாக்கவேண்டும்.

ஆனால், எங்கள் மீது இப்படியொரு பழியை சுமத்துபவர்கள்தான், இந்தப் பிரச்னைகளை எல்லாம் உருவாக்குகிறார்கள். அதாவது, குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள்தான் தாங்களாகவே ஒரு பிரச்னையை உருவாக்கி அந்தப் பிரச்னைக்கான பழியை எங்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்

கல்லூரி மாணவர்கள் - காவி துண்டு

இந்தவரிசையில், 'பிரசாரத்துக்கு எங்கே போனீர்கள், என்ன பேசினீர்கள்' என்பதையெல்லாம்கூட தங்கள் சுயநல அரசியலுக்காக மாற்றிப் புகார் சொல்லிவிடுகின்றன எதிர்க்கட்சிகள். ஆக, சின்னதொரு புள்ளி கிடைத்தாலும் அதைவைத்துக் கோலம் போட்டுவிடுவதற்காக காத்துக்கிடக்கின்றன எதிர்க்கட்சிகள்.''

''கர்நாடகத்தில், 'ஹிஜாப்' ஆடையை முன்வைத்து அரங்கேறிவரும் அரசியலை செய்துவருபவர்கள் யார்?''

''நான் படித்த காலத்தில், பள்ளி வளாக வாசலிலேயே ஹிஜாபை கழற்றிவிட்டுத்தான் பள்ளிக்குள் நுழைவார்கள். கல்வி கற்கக்கூடிய பள்ளியினுள் அனைத்து மாணவர்களும் சமத்துவமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த சீருடைக் கட்டுப்பாடு. ஆனால், கர்நாடகா விவகாரத்தில் பள்ளியினுள் ஹிஜாப் அணிந்துதான் செல்வேன் என்று பிரச்னையைக் உருவாக்குபவர்கள் யார்?''

''அப்படியென்றால், கைகளில் கயிறு, நெற்றியில் திலகம், தலையில் டர்பன் என எல்லா மத அடையாளங்களையும் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாதுதானே?''

''இந்து, முஸ்லிம் மாணவர்களிடையேயான பிரச்னையை நீங்கள் சாதி, இனம் சார்ந்த பிரச்னையாகவும் பிரித்துப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரையில், ஹிஜாப் அணிந்து செல்வது தவறு, காவி துண்டு அணிந்து செல்வதும் தவறு. மற்றபடி கையில் கயிறு கட்டிக்கொள்வதையோ, பிராமின்ஸ் பூநூல் அணிவதையோ, முஸ்லிம்கள் தாவிஸ் அணிவதையோ கழட்டச்சொல்லி யாருமே சொல்லவில்லை. சீருடைக் கட்டுப்பாடு என்ற ஒன்று இருக்கும்போது, அதை யாரும் மீறாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.''

ஹிஜாப் சர்ச்சை

''நீங்களும்கூட பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பு 'ஹிஜாப் அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை' என்றுதானே பேசிவந்திருக்கிறீர்கள்?''

''ஹிஜாப் அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றுதான் இப்போதும் சொல்கிறேன். ஆனால், பள்ளிக்கூடத்தில் அல்ல. கடந்த காலத்திலேயே இந்தப் பிரச்னை வந்திருந்தாலும்கூட நான் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பேன். ஏனெனில், 'நாம் எந்தக் கட்சியில் இருக்கிறோம்; அதன் அடிப்படையில்தான் கருத்து சொல்லவேண்டும்' என்றெல்லாம் நான் ஒருபோதும் நினைப்பதில்லை. உண்மை எதுவோ அதன் அடிப்படையில் மட்டுமே பேசுவேன். அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதேகூட, 'புதிய கல்விக் கொள்கை'யை ஆதரித்துப் பேசினேன்.''

''2024-ல் 'ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும்' என்கிறார்களே அ.தி.மு.க தலைவர்கள்? உண்மைதானா?''

''அ.தி.மு.க தலைவர்கள் சொல்லி வருகிறார்கள் என்றால், அவர்களிடம்தான் நீங்கள் விளக்கம் கேட்கவேண்டும். நான் ஒன்றும் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் இல்லையே!''

மோடி - எடப்பாடி பழனிசாமி

''மாணவி அனிதா மரணத்தின்போது, 'பிணத்தின் மீது அரசியல் செய்வதாக' எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டிய பா.ஜ.க-வே, இப்போது அரியலூர் மாணவி மரணத்தை முன்வைத்து அரசியல் செய்துவருகிறதுதானே?''

''மாணவி அனிதா தற்கொலைக்கும், இந்த மாணவி தற்கொலை விவகாரத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நீட் தேர்வு பிரச்னையால் அனிதா தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தன. ஆனால், அரியலூர் மாணவி விவகாரத்தில் 'கட்டாய மதமாற்றம் செய்யச்சொன்னார்கள்' என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், 'அரியலூர் மாணவி மரணத்தில், மதமாற்றப் பின்னணி எதுவும் இல்லை' என்று காவல்துறையும், அமைச்சரும் சொல்லிக்கொண்டிருந்ததால், 'உண்மையை வெளிக்கொணர சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று நாங்கள் போராடினோம். நீதிமன்றமும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே உண்மை வெளிவரும். எனவே, இது உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான அரசியல்தானே தவிர... பிணத்தின் மீதான அரசியல் அல்ல!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/actress-cum-politician-kushboo-shares-her-views-on-current-political-happenings

இன்றைய ராசி பலன் | 27/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam

12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/27022022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

உக்ரைன் - தியாக தேசத்தின் வரலாறு: உக்ரைன் ஏன் ரஷ்யாவுக்குத் தேவைப்படுகிறது? பகுதி -1

பணக்கார நாடுகள் அதிகம் இருக்கும் ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். வறுமைக்கோட்டுக்குக் கீழே நிறைய பேர் வசிக்கும் ஐரோப்பிய நாடு. பனியும் குளிரும் சூழ்ந்த ஐரோப்பாவில் அதிகமான விவசாய நிலங்கள் இருக்கும் நாடும் இதுதான். ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடு இதுதான். நான்கு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தப் பெரிய தேசத்தை ரஷ்யா விழுங்கப் பார்ப்பதுதான் தற்போது உலகின் தலைப்புச் செய்தி.

''நவீன கால உக்ரைன் ஒரு தனி தேசமாக எப்போதும் இருந்ததில்லை. அது, கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய குழப்பம். உக்ரைன் என்பது எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்ததுதான். ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் போவது ஒரு படையெடுப்பே இல்லை. எங்கள் நிலப்பரப்புக்குள் நாங்கள் போகிறோம்'' என்று இதை நியாயப்படுத்துகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

உண்மையில் உக்ரைன் தேசத்துக்கு மாபெரும் வரலாறு உண்டு. ரஷ்யாவுக்கு அந்தப் பெயரைக் கொடுத்ததே உக்ரைன் பேரரசுதான்.

வைக்கிங் பேரரசின் பொற்காலம்!

தமிழகத்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த அதே காலகட்டத்தில் கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்கால உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ், அப்போது அந்தப் பேரரசின் தலைநகராக இருந்தது. ஐரோப்பாவின் வலிமை வாய்ந்த தேசமாக அப்போது கீவியன் ரஸ் செல்வாக்கு செலுத்தியது. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், போலந்து மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக அது இருந்தது. ஹாலிவுட் வரலாற்றுப் படங்களில் வைக்கிங் பேரரசர்களைக் காட்டுவார்கள். அப்படி ஒரு ராஜ பரம்பரையின் ஆட்சியில் கீவியன் ரஸ் பேரரசின் பொற்காலம் இருந்தது. விளாடிமிர் தி கிரேட், அந்தப் பேரரசின் புகழ்பெற்ற அரசர். கீவியன் ரஸ் பேரரசின் பெயரிலிருந்தே ரஷ்யா தன் பெயரைப் பெற்றது. 13-ம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு அந்தப் பேரரசை வீழ்த்தியது. தலைநகர் கீவ், அந்தப் போரில் தரைமட்டமானது.

உக்ரைன் தலைநகரம் கீவ்

அதன்பின் போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் மன்னர்கள் உக்ரைனைப் பங்கு பிரித்துக்கொண்டார்கள். நாட்டின் பெரும்பகுதி போலந்து வசம்போக, அதை எதிர்த்து உக்ரைன் மக்கள் கிளர்ச்சி செய்தனர். 'கொசாக் கிளர்ச்சி' என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் இந்த உரிமைப் போரில் பல்லாயிரம் பேர் இறந்தனர். இதை சாதகமாக வைத்துக்கொண்டு, உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய மன்னர்கள் ஆக்கிரமித்தனர்.

உக்ரைன் மண்ணில் ரஷ்யர்கள் பலர் வந்து குடியேறினர். கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைன் மொழியை அழிக்கும் முயற்சியும் அப்போது நடந்தது.
கொசாக் கிளர்ச்சி

ரத்த ஆறு ஓடிய ரஷ்யப் புரட்சி!

முதல் உலகப் போரில் ரஷ்யப் பேரரசும் போலந்து பேரரசும் பெரும் அழிவை சந்தித்தன. அதே நேரத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் புரட்சி, அங்கு மன்னராட்சியை வீழ்த்தியது. அந்த நேரத்தில் உக்ரைன் தலைவர்கள் சிலர் இணைந்து, தனி நாட்டை உருவாக்கினர். உக்ரைன் மக்கள் குடியரசு இப்படி 1918-ம் ஆண்டு தனி நாடாக உருவானது. பல நாடுகளிடம் சிக்கியிருக்கும் உக்ரைன் நிலங்களை மீட்க இது உதவும் என்பதால், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முயற்சியை ஆதரித்தது. ஆனால், உக்ரைனில் இருந்த ரஷ்ய மன்னரின் ஆதரவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூண்டது. ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட இந்தப் போரால் உக்ரைனில் மூன்று ஆண்டுகள் ரத்த ஆறு ஓடியது. கடைசியில் கிழக்கு உக்ரைன் பிரதேசம் முழுக்க சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் வந்தது. மேற்கு உக்ரைனை போலந்து ஆக்கிரமித்துக்கொண்டது.

ஒன்றானது உக்ரைன்!

இந்தப் பக்கம் சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் பகுதியில் மக்கள் அந்த மொழியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர். உக்ரைனின் பாரம்பரியக் கலைகள், பண்பாடு எல்லாவற்றையும் மீட்கும் முயற்சியை அரசே ஆதரித்தது.

போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் 'உக்ரைன்' என்ற வார்த்தையை உச்சரிக்கவே தடை விதிக்கப்பட்டது. அரசு நடைமுறைகள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உக்ரைன் மொழியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உக்ரைன் இன மக்கள் போராடினர். முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள் பலரும் ஆயுதம் ஏந்திப் போர் நடத்தினர்.

1939-ம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படைகள் போலந்தை தாக்கின. அதேநேரத்தில் சோவியத் ரஷ்யாவும் போலந்து மீது போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் போலந்தை பங்கு பிரித்துக்கொண்டன. போலந்தின் வசமிருந்த உக்ரைன் பகுதிகள் எல்லாம் சோவியத் வசம் வந்தன. வரலாற்றில் முதல் முறையாக உக்ரைன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசம் முழுக்க ஒன்றானது. உக்ரைன் மக்கள் மகிழ்ந்தனர். ஆனால், அதுதான் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்பதும், போரில் உக்ரைன் பேரழிவைச் சந்திக்கப் போகிறது என்பதும் அப்போது அவர்களுக்குத் தெரியாது.

ஜெர்மன் நாஜிக்கள் ஆக்கிரமிப்பில் அப்போதைய உக்ரைன்

உக்ரைனின் மீட்பரா ஹிட்லர்?

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவின் பல பகுதிகளை வசப்படுத்திய ஹிட்லரின் ஜெர்மனி படைகள் அப்படியே ரஷ்யா மீது தாக்குதல் தொடுத்தன. 1941 ஜூன் மாதம் ஆரம்பித்த அந்தப் போரில் இரண்டு ஆண்டுகள் உக்ரைன் பிரதேசமே உக்கிரமான தாக்குதலைச் சந்தித்தது. இன்றைய உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட, சோவியத் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன. எல்லா இடங்களிலும் வெற்றியை மட்டுமே ருசித்துவந்த ஹிட்லரின் படைகளுக்கு வீழாத ஹீரோ நகரமாக கீவ் பெயர் பெற்றது. இரண்டு ஆண்டுகள் போர் புரிந்தும் அந்த நகரை ஹிட்லரின் நாஜி படைகளால் ஆக்கிரமிக்க முடியவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கிழக்கு உக்ரைன் மக்கள் சோவியத் ராணுவத்துடன் இணைந்து ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். மேற்கு உக்ரைனில் இந்த நேரத்தில் உக்ரைன் போராளிப் படை, உக்ரைனிய தேசியவாத அமைப்பு என்ற இரண்டு புதுக் குழுக்கள் உருவாகின. ஹிட்லரின் உதவியுடன் போலந்து மற்றும் ரஷ்ய நாடுகளை வீழ்த்திவிட்டு சுதந்திர உக்ரைன் தேசத்தை உருவாக்கலாம் என்று இவர்கள் கனவு கண்டனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் நாஜி படையுடன் இணைந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக மோதினர். இன்னொரு பக்கம், 'உக்ரைன் மண்ணிலிருந்து போலந்து மக்கள் வெளியேற வேண்டும்' என்றும் கெடு விதித்தனர்.

மேற்கு உக்ரைன் பிரதேசத்தில் குடியேறி இருந்த சுமார் ஒரு லட்சம் போலந்து இன மக்களைக் கொன்று குவித்தது உக்ரைன் போராளிப் படை. யூதர்களைக் கொன்று தன் கைகளை ரத்தக்கறையாக்கிக்கொண்ட ஹிட்லரின் கொடூரத்துக்கு இணையானது இந்த இனப் படுகொலை. பெரும்பான்மை இனவாதம் எங்கெல்லாம் உச்சம் பெறுகிறதோ, அங்கெல்லாம் சிறுபான்மையினர் பாதிப்புக்கு ஆளாவார்கள். உக்ரைன் பிரதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருந்த போலந்து இனத்தவர் இப்படித்தான் கொல்லப்பட்டார்கள்.

60 லட்சம் பேரை பலிகொண்ட போர்!

தன்னை நம்பிய உக்ரைன் மக்களுக்கு, தானும் ஓர் ஆக்கிரமிப்பாளர்தான் என்பதை சீக்கிரமே உணர்த்தினார் ஹிட்லர். வளமான உக்ரைன் நிலங்களில் ஜெர்மானியர்களைக் குடியமர்த்தினார். உள்ளூர் மக்கள் அடக்குமுறைக்கு ஆளானார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபிறகுதான் உக்ரைனில் அமைதி திரும்பியது. அந்தப் போரில் உக்ரைன் பிரதேசத்தில் மட்டுமே 60 லட்சம் பேர் இறந்தனர்.

போரால் 700 நகரங்களும் 28 ஆயிரம் கிராமங்களும் சிதைந்து போயிருந்தன. போர் முடிந்த உடனே பஞ்சமும் வந்தது. அதிலும் பல ஆயிரம் பேர் இறந்தனர்.

உக்ரைனில் மரணத்தைப் பார்க்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அந்த பஞ்சத்தை ஒரு காரணமாக வைத்து, உக்ரைனில் இருந்த மக்களில் பலரை சைபீரியப் பிரதேசத்துக்கு அனுப்பினார் ஸ்டாலின். அந்த இடங்களில் ரஷ்யர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார். இப்படித்தான் உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கம் நிறுவப்பட்டது.

உக்ரைன் மக்கள் போராட்டம் - 2013

சோவியத் தந்த வளர்ச்சி!

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனில் ஆட்சிக்கு வந்தார் நிகிதா குருசேவ். உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர் என்பதால், அவருக்கு உக்ரைன் பற்றி சகலமும் தெரியும். அதனால் உக்ரைனை வளர்க்க முயன்றார். இரும்புத்தாதும் நிலக்கரியும் அதிகம் இருக்கும் பகுதி என்பதால், வேகமான தொழில் வளர்ச்சி வந்தது. வேலைவாய்ப்பு பெருகியது. ஒருகட்டத்தில் ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக உக்ரைன் இருந்தது.

ரஷ்யாவுக்குத் தேவையான ஆயுதங்களும் அணு ஆயுத முயற்சிகளும் இங்குதான் நடைபெற்றன. சோவியத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் உக்ரைனில் உருவானார்கள். சோவியத் ஆட்சி அதிகாரத்தில் முக்கியமான இடத்துக்குப் பலர் வந்தார்கள். குருசேவுக்குப் பிறகு சோவியத் யூனியனை ஆட்சி செய்த பிரஷ்னேவ் இங்கிருந்து சென்றவர்தான்.

அணு ஆயுதங்களை நிராகரித்த நாடு!

1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனி நாடாக உருவானது. பல தலைமுறைகளுக்கு முன்பாக அவர்கள் விரும்பிய விடுதலை கிடைத்தது. சோவியத் யூனியனிலிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட ராணுவம் உக்ரைனுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அணு ஆயுதங்களும் கூடவே வந்தன. ஒரே நாளில் உக்ரைன், உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது வல்லரசாக மாறியது.

ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்க உக்ரைன் விரும்பவில்லை. சமாதான உடன்படிக்கையில் கையெழுத்து போட்டு, எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பதற்காக ரஷ்யாவிடம் கொடுத்துவிட்டது. நான்கே ஆண்டுகளில் அணு ஆயுதமே இல்லாத தேசமாகிவிட்டது. ஒருவேளை உக்ரைன் அவற்றை வைத்திருந்தால், இப்போது புதின் போர் தொடுக்கத் தயங்கியிருப்பார்.

உக்ரைன் மக்கள்தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ரஷ்ய இனத்தவர். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ரஷ்ய மொழி பேசத் தெரியும்.

ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரைன் மக்கள் ரஷ்யாவை நேசிப்பார்கள்; மேற்கு உக்ரைனில் ரஷ்யாவை வெறுப்பார்கள். அதனால் ஒருபுறம் ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்தபடி, இன்னொரு பக்கம் ஐரோப்பிய யூனியனுடன் உறவாடி வந்தது உக்ரைன்.
விளாடிமிர் புதின்

ரஷ்ய ஆதரவாளராக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் இந்த நடைமுறையை மாற்றினார். 2013-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இருந்த உறவைத் துண்டித்துக்கொண்டு ரஷ்யாவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டார். உக்ரைன் மக்கள் கோபமாகி வீதிக்கு வந்து போராடினார்கள். சுயமரியாதைக்கான புரட்சி எனப்பட்ட இந்தப் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக புதின் குற்றம் சாட்டினார். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் விக்டர் அரசு வீழ்ந்தது. அவர் நாட்டை விட்டே ரஷ்யாவுக்கு ஓடினார். புதின் கோபமாகி உக்ரைன் மீது 2014-ல் படையெடுத்தார். அதன் தெற்கில் இருந்த கிரீமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார். அப்போது தொடங்கிய மோதலின் இரண்டாவது இன்னிங்ஸ்தான் இப்போதைய போர்.



source https://www.vikatan.com/news/international/new-online-series-about-the-russsias-war-against-ukraine-part-1

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

தமிழகத்தில் தாமரை மலரத் தொடங்கிவிட்டதா?! - சதவிகித கணக்குகள் சொல்வதென்ன?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்:

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் 1.13 லட்சம் காவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 60.70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்திருந்தது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே ஆளும் திமுக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது.

தேர்தல் முடிவுகள்:

7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. 4 இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. 196 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 4,389 இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அடுத்தபடியாக, அதிமுக 1,206 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 368 இடங்களிலும், பாஜக 230 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

திமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 3,843 இடங்களில், 18 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு 2,360 இடங்களில் திமுகவும், 638 இடங்களில் அதிமுகவும், 151 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 56 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளது. 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 4 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. 952 இடங்களில் திமுகவும், 164 இடங்களில் அதிமுகவும், 73 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 22 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றிருந்தது.

மூன்றாவது பெரிய கட்சி:

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தினம் அன்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், ``தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை பாஜக பெற்றுள்ளது. வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். கட்சியின் வலிமையைப் பார்க்கவேண்டும் என்று தான் உள்ளாட்சியில் தனித்துப் போட்டியிட்டோம். கொங்கு மண்டலத்தில் 15 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. அதிமுக மிகப்பெரிய கட்சி. இந்த ஒருமுறை தோல்வியைத் தழுவியதால் அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது." என்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து பேசியவர், `` கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் திமுகவின் கோட்டை என்று சொல்ல முடியாது. பாஜக அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்த கொங்கு எண்களின் கோட்டையாகவே இருக்கும். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்குமா என்பதைப் பார்க்கவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஆக்ஸிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறது. பாஜகவை விமர்சிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தகுதியில்லை" என்று பேசியிருந்தார்.

உண்மை நிலவரம் என்ன!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5,480 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்ற இடங்கள் 308. மொத்த வெற்றி சதவிகிதத்தில், பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.60 விழுக்காடும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.46 விழுக்காடும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3.02 விழுக்காடும் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்திலும் சரி தமிழகத்தில் மற்ற பல்வேறு பகுதிகளிலும் சரி, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றிருந்த வாக்குக்கும் பாஜக, அதிமுக சேர்ந்து பெற்றிருந்த வாக்குக்கும் பெரும் வித்தியாசம் இருந்தது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்
நகராட்சி வார்டு உறுப்பினர்
பேரூராட்சி வார்டு உறுப்பினர்

அதே நேரத்தில், ஒரு சில வார்டுகளில் அதிமுக மற்றும் பாஜக இரண்டாம் இடத்திலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படியான வார்டுகள் மிகவும் சொற்பமே. பாஜகவை விடக் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் மிகவும் குறைவே, ஆனால், காங்கிரஸ் 592 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 5.31 விழுக்காடும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 3.93 விழுக்காடும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4.83 விழுக்காடும் பெற்றுள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநிலத் தலைவர்

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக 308 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது உண்மை தான். இந்த மொத்த வெற்றி எண்ணிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜக 200 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மீதமுள்ள 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக அதிமுகவுடன் இந்த தேர்தலைச் சந்தித்திருந்தால் கொங்கு அவர்களின் கோட்டையாக இருந்திருக்கும் என்று சொல்வதும் தற்போது வாங்கியிருக்கும் வாக்குகள் மூலம் சாத்தியம் இல்லை என்றே தெரியவருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/election/is-bjp-winning-third-place-in-tamilnadu-local-body-election-decoding-results