Ad

வியாழன், 26 மே, 2022

டெல்லி முதல் கர்நாடகா வரை: அடுத்தடுத்து குறிவைக்கப்படும் பழைமையான மசூதிகள்! - கள நிலவரம் என்ன?

``அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்துக்கட்டப்பட்டது, அதை அகற்றிவிட்டு மீண்டும் அந்த இடத்தில் ராமர்கோயில் கட்டவேண்டும்!' எனக்கோரி ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பல்லாண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தன. விளைவு, 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் பாபர் மசூதி சட்ட விரோதமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அயோத்தி விவகாரம்

நீண்டகாலமாக நடைபெற்றுவந்த வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்பினருக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் வெற்றிபெற்றதையடுத்து, இந்துத்துவ அமைப்பினர் அடுத்தடுத்த மசூதிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அந்தவகையில், தற்போது `இந்துக் கோயில்' என சர்ச்சையாகிவரும் இஸ்லாமியத் தலங்கள் குறித்து காண்போம்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மதுரா, இந்துக்களினால் `கிருஷ்ண ஜென்ம பூமி' என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கேசவதேவ்(கிருஷ்ணர்) கோயிலையொட்டி அமைந்திருக்கிறது சாகி ஈத்கா மசூதி. 1968-ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கத்துக்கும், சாகி ஈத்கா மசூதிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இருதரப்பினரும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பரஸ்பரம் தங்கள் மத சொத்துக்களை பராமரித்துவந்தனர். அந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு, `கி.பி. 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தவின்படி, அவரின் படையினர் மதுராவில் இருந்த பழைய கிருஷ்ணர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, சாகி ஈத்கா மசூதியைக் கட்டினார்கள் என்றும், கிருஷ்ணர் கோயிலுக்குச் சொந்தமான அந்த இடத்தின் மசூதி ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, அந்த 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ணர்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிருஷ்ண ஜென்மஸ்தான்-சாகி ஈத்கா அறக்கட்டளையுடன் போடப்பட்ட சட்ட விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரியும் வி.எச்.பி ஆதரவுபெற்ற லக்னோ வழக்கறிஞர் ரஞ்சனா அக்னி ஹோத்ரி உள்ளிட்டோர் மதுரா சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி என கூறப்படும் இடம்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டப்படி' இந்த கோரிக்கைகளை விசாரிக்கும் வரம்பு கிடையாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, 2021 பிப்ரவரியில் மதுராவின் கேசவதேவ் கோயிலின் பூசாரி பவண் குமார் சாஸ்திரி, `கோயில், மசூதி அமைந்துள்ள நிலம் தன்னுடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்றும், 1968-ம் ஆண்டும் ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அந்த முழு நிலத்தையும் தன்னிடமே வழங்க வேண்டும்' என்றும் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மதுரா நீதிமன்றம், சிவில் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்திருக்கிறது கியான்வாபி மசூதி. சுமார் 350 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த மசூதி, `முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்றும், அதை இந்துக்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்' எனக்கோரியும் வி.எச்.பி உள்ளிட்ட இந்து அமைப்பினரால் 1991-ம் ஆண்டு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. `இது இந்திய அரசியலமைப்பின் வழிபாட்டு உரிமைச் சட்டத்துக்கு விரோதமானது' எனக்கூறி ஏ.ஐ.எம் என்ற இஸ்லாமிய அமைப்பு எதிர் வழக்காட, இந்த வழக்குத் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டு தசாப்தங்களுக்குப்பிறகு கடந்த 2019-ல் வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர், `கியான்வாபி மசூதிக்கு அருகிலிருக்கும் தற்போதைய காசி விஸ்வநாதர் கோயில் முகலாயர் ஆட்சி முடிவுக்குப் பிறகே கட்டப்பட்டது. உண்மையில் மசூதி அமைந்திருக்கும் இடத்தில்தான் பழைய காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது. அங்குதான் லிங்கமும் புதைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தநிலம் கோயிலுக்குச் சொந்தமானது; அதை மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டால், அதற்கான சான்றுகள் கிடைக்கும்' எனக்கூறி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கியான்வாபி மசூதி

அதேபோல, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லியைச் சேர்ந்த ஐந்து இந்து பெண்களும், `கியான்வாபி மசூதி வளாக சுவரில் இருக்கும் சிருங்கார கௌரி, விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய கடவுள்களுக்கு தினசரி பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கடந்த 2021 ஏப்ரலில் `காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் அகழாய்வுப் பணிகள் நடத்த, ஐந்து பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைக்கவேண்டும்' என இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஐ.எம், சன்னி வஃக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், `தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது'. தற்போது இந்த வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், 2022 ஏப்ரல் 15-ம் தேதி, வாரணாசி நீதிமன்றம், `மசூதி அமைந்திருக்கும் வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவும், வீடியோ பதிவு எடுப்பதற்கும், தனியாக அஜய் குமார் மிஸ்ரா என்பவரை சிறப்பு கமிஷனராக நியமித்து' உத்தரவிட்டது. இந்த ஆய்வை மேற்கொள்ளக் கூடாது என்று மசூதி நிர்வாகமான ஏ.ஐ.எம் வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. மேலும், மசூதி நிர்வாகம் வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் கள ஆய்வுக்குத் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது

கியான்வாபி மசூதி

அதைத்தொடர்ந்து, கியான்வாபி மசூதியில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற ஆய்வில் மசூதி வளாகத்திலுள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், 'அது சிவலிங்கம் அல்ல, தொழுகைக்கு வருபவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும் செயற்கை நீரூற்று அமைப்பு' என மசூதி நிர்வாகம் மறுத்தது. இருப்பினும், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட குளத்தை மூடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் சின்னமாக உயர்ந்துநிற்கும் தாஜ்மஹாலுக்கும் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டே தாஜ்மஹால் ஒரு இந்துக் கோயில் என ஓக் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, 2005-லும் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2008-ல் தாஜ்மஹாலுக்குள் நுழைந்து சிவசேனா கட்சியினர் சிவ பூஜை நடத்த பெரும் சர்ச்சை வெடித்தது. அந்தநிலையில், 2015-ம் ஆண்டு ஆறு வழக்கறிஞர்கள், `தாஜ்மஹால், தேஜோ மஹாலயா எனும்(Tejo Mahalaya) ஒரு சிவன் கோயில். ராஜா ஜெய்சிங் என்ற இந்து மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சிவன்கோயிலை இடித்துவிட்டுதான், ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். எனவே, தாஜ்மஹாலை இந்துக்கோயிலாக அறிவிக்கவேண்டும், வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்' எனக்கூறி ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசும், தொல்லியல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டது.

தாஜ்மகால்

இதுகுறித்து பதிலளித்த மத்திய சுற்றுலா-கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, `தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை' என்றார். மத்திய தொல்லியல்துறையும், `தாஜ்மஹால் ஒரு கல்லறைதான்' என பதிலளித்தது. இதைத்தொடர்ந்து, 2017-ல் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க அரசு, மாநில சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹாலை நீக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க எம்.பி., எம்.எல்.ஏ-க்களான சுரேந்தர சிங், சங்கீத் சோம், வினய்கட்டியார் போன்றோர் `தாஜ்மஹால் துராகிகளால் கட்டப்பட்டது, அதுக்கு இந்திய வரலாற்றில் இடமளிக்கக் கூடாது, அதை இடித்துவிட்டு மீண்டும் கோயில் கட்டவேண்டும் அல்லது தேஜோ மஹால், ராம் மஹால் எனப் பெயர்மாற்றி இந்துக்கோயிலாக அறிவிக்கவேண்டும்' எனப் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்தனர்.

தாஜ்மகால் பார்வையாளர்கள்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அயோத்தி பா.ஜ.க செய்தித்தொடர்பாளரான ரஜ்னீஷ் என்பவர், ``தாஜ்மஹாலின் வரலாற்றை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் எனவும், தாஜ் மஹாலில் பூட்டப்பட்டு கிடக்கும் 22 அறைகளையும் திறந்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறைகளில் இருப்பது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. மேலும், தற்போது அந்த அறைகள் சிலவற்றின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள், `அறையில் எந்தவித ரகசியமும் இல்லை எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும்' தெரிவித்திருக்கின்றனர்.

உலகிலேயே, செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயர்ந்த (72.5 மீ) கோபுரம், டெல்லியிலுள்ள குதுப் மினார். இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசரான குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு, சம்சுதீன் என்பவரால் 13-ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. உலகின் மிகப்பழைமையான இந்த கோபுரத்தை, யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் அறிவித்திருக்கிறது. இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி, குதுப் மினார் கோபுர வளாகத்தைப் பார்வையிட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், `குதுப் மினார் கோபுரம், உண்மையில் ஒரு விஷ்ணு கொடிமரம்' என புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர். மேலும், இதுகுறித்துப் பேசிய, வி.எச்.பி செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால், ``இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோயில்களை இடித்துவிட்டுதான், இந்த குதுப் மினார் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது இந்துக்களை அவமதிக்கிறது! அழிக்கப்பட்ட 27 கோயில்களையும் மத்திய அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும். இங்கு இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதியளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

குதுப் மினார் - விஹெச்பி தலைவர்

இந்த நிலையில் கடந்த மே 18-ம் தேதி, மத்திய அரசின் தொல்லியல் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியான தரம்வீர் சர்மா என்பவர், ``டெல்லியிலிருப்பது குதுப் மினார் இல்லை; அது குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டவும் இல்லை! அது, 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால் அதன் பெயர் சூரியக் கோபுரம்! அந்த கோபுரமானது ஒரு தனிக்கட்டடமே தவிர அருகிலுள்ள மசூதியுடன் அதற்கு எந்த தொடர்பும் கிடையாது!" எனக்கூறி அறிக்கை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்.

குதுப்மினார்

அந்த நிலையில், குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கசியவும், அதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, `அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் குதுப்மினார் வளாகத்தில் அகழ்வாராய்ச்சி ஏதும் நடத்தப் போவதில்லை எனவும் விளக்கமளித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் அமைந்திருக்கிறது ஜாமியா மசூதி. கடந்த 19-ம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாப் என போற்றப்படும் குத்துஸியா பேகம் என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த மசூதி அங்கிருந்த சிவன் கோயிலை இடித்துதான் கட்டப்பட்டது எனக்கோரி இந்துத்துவ அமைப்பான சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின் தற்போது போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. மேலும், அந்த அமைப்பின் தலைவர் சந்திரசேகர் திவாரி என்பவர், `போபால் ஜாமியா மசூதியில் கள ஆய்வு நடத்தப்பட வேண்டும்' எனக்கோரி ம.பி. மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவுக்கு சில ஆவணங்களுடன் மனுவை ஒன்றையும் அளித்து கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்து அமைப்பினர் ஆர்பாட்டம்

கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஶ்ரீரங்கப்பட்டிணத்தில் அமைந்திருக்கிறது ஜாமியா மசூதி. திப்பு சுல்தான் காலத்தில் அதாவது கி.பி. 1782-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி இந்திய தொல்லியல் துறையால் பாரம்பரியமிக்க வழிபாட்டு தளமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், `மசூதி இருக்கும் இடத்தில் முன்பு அனுமன் கோயில் இருந்ததாகவும், அந்த இடத்தில் இந்துக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்' எனக்கோரியும் `நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்' என்ற அமைப்பு சார்பில் கடந்த மே 14-ம் தேதி மாண்டியா மாவட்ட துணை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், அந்த அமைப்பின் செயலாளரான சி.டி. மஞ்சுநாத், ``ஜாமியா மசூதி முன்பு அனுமன் கோயிலாக இருந்ததற்கான கல்வெட்டுகள் மசூதியின் தூண்களில் உள்ளது. அதற்கு ஆதரமாக திப்பு சுல்தான் பாரசீக மன்னருக்கு எழுதிய ஆவணங்களும் இருக்கிறது. எனவே மசூதியை ஆய்வு செய்ய வேண்டும், இந்துக்கள் பூஜை செய்ய கதவுகளை திறக்க வேண்டும்!" என கூறியிருக்கிறார்.

கர்நாடகா மங்களூருவில் உள்ள மலாலி ஜுமா மசூதி

இந்த மசூதி மட்டுமல்லாமல், கர்நாடகா மங்களூருவில் உள்ள மலாலி ஜுமா மசூதியும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன் இந்த மசூதியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றபோது இந்து கோயில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து `மசூதிக்குள் ஆய்வு நடத்த வேண்டும்' எனக்கோரி வி.எச்.பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் குரலெழுப்பவும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் மே 26-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களில் தொடங்கிய இந்த மசூதி - கோயில் சர்ச்சை தற்போது மற்ற மாநிலங்களிலும் தீவிரமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-to-karnataka-the-oldest-mosques-to-be-targeted-by-hindutva-organizations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக