Ad

புதன், 18 மே, 2022

சீனர்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கினாரா கார்த்தி சிதம்பரம்?! - சிபிஐ விசாரணையும் பின்னணி தகவல்களும்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மே 17 அன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறது சிபிஐ.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

2009 - 2014 காலகட்டத்தில் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்புடைய சில நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் கார்த்தி சிதம்பரம் மீது பல்வேறு வழக்குகள் பதிந்து, விசாரணை நடத்திவருகிறது சி.பி.ஐ.

இந்த நிலையில், சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் பெற்றதாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``2011-ம் ஆண்டு பஞ்சாபிலுள்ள மான்சா பகுதியில், 1,980 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று கட்டத் தொடங்கியது. கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் ஒரு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த அனல்மின் நிலையத்தைத் திட்டமிடப்பட்ட கால வரையறைக்குள் கட்டி முடிக்கவில்லை. எனவே, இதனால் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பதற்காக, அந்தத் தனியார் நிறுவனம் கூடுதலாகச் சீனர்களை வேலைக்கு வரவழைக்க நினைத்தது. அந்த சீனர்களுக்கு விசாக்கள் தேவைப்பட்டன. ஆனால், உள்துறை அமைச்சகத்தின் விதிப்படி ஒரு திட்டத்துக்கென்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விசா வழங்க முடியும்.

கார்த்தி சிதம்பரம்

இதனால், அந்தத் தனியார் நிறுவனம் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் மூலம் சென்னையிலுள்ள ஒரு நபரை அணுகியது. அந்த நபரின் மூலம் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி விசாக்கள் பெறப்பட்டிருக்கின்றன. மொத்தம் 263 விசாக்களை மறுபடியும் பயன்படுத்த அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்குள்ளாக இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம். இதற்காக மன்சாவிலுள்ள அந்த நிறுவனம் சென்னையிலுள்ள நபருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கிறது. இந்தத் தொகையை, விசா வழங்குவதற்கான ஆலோசனை என்று குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான பில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த மும்பை நிறுவனமோ விசா தொடர்பான எந்தப் பணிகளிலும் ஈடுபடவில்லை என்பது கண்டறியப்பட்டது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது, ப.சிதம்பரம்தான் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தார்.

இதையடுத்துதான், இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவருக்கு நெருக்கமானவரான எஸ்.பாலசுப்பிரமணியம், பாஸ்கர ராமன் மன்சாவிலுள்ள தனியார் நிறுவன அதிகாரி விகாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. அதன்படி சென்னை, மும்பை, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சி.பி.ஐ சோதனை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ``டெல்லி, சென்னையிலுள்ள எனது குடியிருப்புகளில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகிறது. அவர்கள் என்னிடம் முதல் தகவல் அறிக்கையைக் காண்பித்தார்கள். அதில் எனது பெயர் குற்றம் செய்தவர் பட்டியலில் இல்லை. சோதனைக்குப் பிறகு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை'' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கார்த்தி சிதம்பரமும் தனது ட்விட்டர் பக்கத்தில், ``எத்தனை முறை சோதனை நடத்தப்பட்டது என்பதை நானே மறந்துவிட்டேன்'' என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். பின்னர் அவரே, ``இப்போதுதான் என் அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்தது. 2015, 2018-ல் இரண்டு முறை, 2017-ல் ஒரு முறை, பிறகு இன்றைக்கு என 6 முறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

ப.சிதம்பரம் , கார்த்தி சிதம்பரம்

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கார்த்தி சிதம்பரத்தின் பெயரை இரண்டாவது குற்றவாளியாகக் குறிப்பிட்டிருக்கிறது சி.பி.ஐ. முதல் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 18) பாஸ்கர ராமனைக் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரமும் கைது செய்யப்படுவாரா... இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/case-details-behind-cbi-raid-on-karti-chidambaram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக