Ad

திங்கள், 30 மே, 2022

பாமக 2.0: புதிய தலைவர் அன்புமணி ராமதாஸின் திட்டம் என்ன?

சென்னை திருவேற்காட்டில், பாமக சார்பில் நடைபெற்ற மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சி இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி

தலைவராகப் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “பா.ம.க இளைஞரணி தலைவர் பொறுப்பு யாருக்கு என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமம், மாவட்டம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறோம். குறிப்பாகக் குடிநீர் பிரச்னைகள், சேலம் உபரி நீர்திட்டம், அத்திகடவு திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த உள்ளோம். பா.ம.க 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாட பிரச்னைகளை சரி செய்து, மக்களின் ஆதரவைப் பெறுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

‘பா.ம.க 2.0’ என்கிற செயல் திட்டத்தினை முன்னிறுத்தி தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் அன்புமணி ராமதாஸ். அத்திட்டத்தின் சிறப்புகள் என்ன? என்கிற கேள்வியினை பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் முன் வைத்தோம்.

“2.0 மாடல் என்ன? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம்? என்பதற்கான ஆலோசனையில் இருக்கிறோம். இத்திட்டத்தை விரைவில் அறிவிக்கப் போகிறோம், என்று தலைவர் கூறியிருக்கிறார்.‘அனைவருக்கும் உரிமை. அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்திட்டத்தில், வருங்கால தமிழகத்திற்கான தேவை என்ன? பாட்டாளி மக்கள் கட்சி எதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயணிக்க வேண்டும்? என்பதை எல்லாம் பிராதனப்படுத்தி அதற்கான வரைவு தயார் செய்து கொண்டிருக்கிறோம் என சொல்லி இருக்கிறார்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு

பா.ம.க என்றால் சாதிக்கட்சி என்று பார்ப்பதை மாற்ற வேண்டும். அந்த வளையத்திற்குள் பா.ம.க-வை வளைப்பதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அதற்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய திட்டங்களாக இதில் இருக்கும். பொதுவாக பா.ம.க அப்படி தான் இருந்திருக்கிறது. புகையிலை ஒழிப்பு, மது ஒழிப்பு, சமூக நீதி பிரச்னை, 108 ஆம்புலன்ஸ், கிராமப்புற சுகாதாரம்... என எல்லாமே, அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வைத்தான் பா.ம.க முன்னெடுக்கிறது. முன்னெடுத்துள்ளது. ஆனால், இது சாதி கட்சி என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைக்கிறார்கள். அதை முறியடிக்க வேண்டும். அந்த தோற்றத்தை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சி பண்ணுவோமென்று சொல்லி இருக்கிறார். விவசாயத்தை மேம்படுத்துவது. தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாடு ஊக்குவிப்பது. இதை எல்லாம் உள்ளடக்கிய திட்டத்தினை பா.ம.க 2.0 என்று விரைவில் வெளியிடுவோம் என சொல்லி இருக்கிறார்” என்கிறார் வழக்கறிஞர் பாலு.



source https://www.vikatan.com/government-and-politics/politics/pmk-20-what-plan-does-anbumani-ramadas-have-for-future

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக